first review completed

சாவித்ரி (காப்பியம்): Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 74: Line 74:


== அடிக்குறிப்பு ==
== அடிக்குறிப்பு ==
<references />
{{First review completed}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
<references />{{First review completed}}

Revision as of 11:05, 16 August 2023

சாவித்ரி - காப்பியம்

சாவித்ரி அரவிந்தர் எழுதிய காப்பிய நூல். சத்தியவான் - சாவித்ரியின் கதையைக் கூறும் இந்நூலில் மறைபொருளாக அரவிந்தரின் யோக அனுபவங்கள் விளக்கப்பட்டுள்ளன.

பிரசுரம், வெளியீடு

1900-த்தில், அரவிந்தரால் எழுதத் தொடங்கப்பட்ட சாவித்ரி, பல முறை மீள் உருவாக்கம் செய்யப்பட்டு, ஆகஸ்ட் 15, 1946-ல், புதுச்சேரியில், 'ஸ்ரீ அரவிந்த மந்திர் மானுவல்' என்னும் அரவிந்தர் ஆசிரம இதழில் முதன் முதலில் வெளியானது. பின்னர் 1950-ல், அரவிந்தர் ஆசிரம வெளியீடாக முதல் பகுதி மட்டும் வெளிவந்தது.  அரவிந்தரின் மறைவுக்குப் பின் 1954-ல், நூல் முழுமையும் தொகுக்கப்பட்டு, ஸ்ரீ அரவிந்தர் சர்வதேசக் கல்வி மையத்தால் (sri aurobindo international centre of education) வெளியிடப்பட்டது

சாவித்ரியின் புராணக் கதை

மகாபாரதத்தின் வனபர்வத்தில் சாவித்ரியின் கதை இடம் பெற்றுள்ளது. யுதிஷ்ட்ரரின் வேண்டுகோளுக்கிணங்க, மார்க்கண்டேய முனிவர் பாண்டவர்களுக்கு விளக்கிக் கூறிய கதை சாவித்ரி.

அஸ்வபதி என்ற அரசன், தனக்கு மகப்பேறு வாய்க்காததால் ஸ்ரீ காயத்ரி தேவியை நோக்கிப் பதினெட்டு ஆண்டுகள் தவம் செய்கிறான். இறுதியில் ஸ்ரீ காயத்ரி அன்னையின் தரிசனம் பெறுகிறான். காயத்ரி தேவியையே தனது மகளாகப் பிறக்க வரமும் பெறுகிறான். அவ்வாறு அவனுக்குப் பிறந்த மகளுக்கு “சாவித்ரி” என்னும் பெயரிட்டு வளர்க்கிறான். இயல்பிலேயே இறை ஆற்றல் மிக்கவளாகவும், தவ நெறிகளை உடையவளாகவும் விளங்குகிறாள் சாவித்ரி. அவள் பருவ வயதை அடைந்ததும், அவளுக்கான மணமகனைத் தேடும் பொறுப்பையும் அவளே மேற்கொள்கிறாள். பல இடங்களிலும் தேடி, இறுதியில் சத்தியவானைக் கண்டு அவனையே மணம் புரிய எண்ணுகிறாள்.

அப்பொழுது அங்கு வருகை தந்த நாரத முனிவர், சத்தியவான் இன்னும் ஒரு வருடத்தில் இறந்து விடுவான் என்று கூறி அந்தத் திருமணத்தைத் தடுக்க முற்படுகிறார். ஆனாலும் சாவித்ரி பிடிவாதமாக அவனையே மணக்கிறாள். கணவனுடன் சேர்ந்து இல்லற வாழ்வில் ஈடுபடுகிறாள். கணவன் உயிர் காக்க தவத்திலும், நோன்பிலும், விரதத்திலும் ஈடுபடுகிறாள். நாரதர் குறிப்பிட்ட நாளில் சத்தியவான் இறந்து விடுகிறான். அதனைக் கண்டு மனம் தளராத சாவித்ரி, தன் கணவனின் உயிரைக் கவர்ந்து செல்லும் எமதர்மனைப் பின் தொடர்ந்து செல்கிறாள். பூவுலகைக் கடந்து சென்று, அவனுடன் போராடி, தன் அறிவுத் திறமையால் வாதாடி சத்தியவானை உயிர்ப்பிக்கிறாள். மீண்டும் பூமிக்குத் தன் கணவனுடன் திரும்புகிறாள். குடிமக்களுடன்  நல் வாழ்வு வாழ்கிறாள்.

அரவிந்தரின் சாவித்ரி

பரோடாவில் பேராசிரியராகப் பணியாற்றி வந்த அரவிந்தர், ஒரு சமயம் ‘சாவித்ரி’ கதையை வாசித்தார். அதில் மறைபொருளாகச் சில செய்திகள் இருப்பதை உணர்ந்தார். அதைப் பற்றி விரிவாக எழுத வேண்டும் என நினைத்து சில முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால், அவர் சுதந்திரப் போரில் ஈடுபட்டதால் அம்முயற்சி முழுமையாகாமல் தடைப்பட்டது.

பிற்காலத்தில் அரவிந்தர் புதுச்சேரிக்கு வந்து வசித்த போது, சாவித்ரி பற்றிய தனது ஆய்வைத் தொடர்ந்தார். சத்தியவான் என்பது தெய்வீக ஆன்மாவைத் தன்னுள் சுமக்கும் மனிதனையும், ‘சாவித்ரி’ என்பது இறை அருளின் ஒளியையும் குறிப்பதாக அரவிந்தர் கருதினார். இறையருளின் மானிட வடிவே சாவித்ரி என்றும், எதிர்ச் சக்திகளோடு போராடி மீண்டும் தெய்வீக வாழ்வைப் புவியில் நிறுவும் முயற்சியே அவள் பணி என்பதையும்  அரவிந்தர் உணர்ந்தார். தாம் கண்டறிந்த உண்மைகளை ‘சாவித்ரி’ என்னும் நூலாகப் படைத்தார்.

அந்நூல் எழுதப்போவது குறித்து ஸ்ரீ அரவிந்தர், சாதகர்களிடம், “நான் ஒரு புதிய தீரச் செயல் புரியும்படி தூண்டப்பட்டுள்ளேன். தொடக்கத்தில் எனக்குச் சிறிது தயக்கம் தான். ஆனாலும் இப்பொழுது முடிவெடுத்துவிட்டேன். இதில் எந்த அளவிற்கு வெற்றியடைவேன் என்பது இப்போது எனக்குத் தெரியாது. அதற்காக இறைவனின் உதவியையே நாடுகிறேன். மாலுமி அற்ற படகில் ஏறி, எல்லையற்ற இறைவனின் பெருங்கருணைப் பரப்பில் நான் பயணம் செய்யத் தொடங்கியுள்ளேன். இறைவனே அனைத்தையும் அறிவார்." என்று குறிப்பிட்டார்.

நூலை எழுதி முடித்த பின்பு, “நான் சாவித்ரியை எழுச்சி பெற ஒரு சாதனமாக உபயோகித்தேன். நான் ஒரு விதமான மனநிலையுடன் அதை ஆரம்பித்தேன். ஒவ்வொரு முறையும் அதைவிட உயர்ந்த நிலைகள் வரும் பொழுது, அந்தந்த நிலைக்கேற்றபடி எழுதியவற்றைத் திரும்ப எழுதினேன். சாவித்ரியை நான் ஒரு கவிதையாகக் கருதவில்லை. யோகத்தின் உச்ச நிலையில் உருவாகும் வளமானதொரு சிருஷ்டியாகவே அதைக் கருதினேன். உண்மையில் சாவித்ரி நான் பார்த்ததின் பதிவாகும். ஒரு அசாதரணமான அனுபவத்தின் பதிவே சாவித்ரி. இது ஒரு புது விதமான மறைநெறிக் கவிதை. புதுவிதமான தரிசனமும் வெளிப்பாடும் கொண்டது” என்றார்.

நூல் அமைப்பு

‘சாவித்ரி’  23813 ஏற்றசை வரிகள் கொண்ட காப்பியம். 12 பனுவல்களும், 49 காண்டங்களையும் கொண்டு, மூன்று பிரிவுகளாக அமைந்துள்ளது. சாவித்ரி, சத்தியவானின் மரணத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து அஸ்வபதியின் தவம், அவருக்குக் கிடைத்த அருள், உலக நன்மைக்காக அன்னையிடம் அவர் பெற்ற வரம் ஆகியன விளக்கப்படுகின்றன. தொடர்ந்து சாவித்ரியின் பிறப்பு தொடங்கி, சத்தியவானுடன் திருமணம், சத்தியவானின் மரணம், சாவித்ரி மேலுலகம் சென்று சத்தியவானின் உயிரை மீட்டு வருதல் என்பதைப் பல்வேறு குறியீட்டுச் செய்திகள் மற்றும் யோக விளக்கங்களுடன் அரவிந்தர் எழுதியுள்ளார். சாவித்ரியின் யோகம் ஏழாவது பனுவலில், ஏழு காண்டங்களில் மிக விளக்கமாகச் சொல்லப்பட்டுள்ளது.

இந்நூலை அரவிந்தர் தனது தாய்மொழியான வங்காளத்தில் எழுதாமல் நேரடியாக ஆங்கிலத்திலேயே எழுதினார். இந்நூலில் அரவிந்தர், இறை நிலை, மறை பொருள் என்பது முதல் கடவுளின் வரலாறு, சிருஷ்டியின் வரலாறு, பிரபஞ்சத்தின் வரலாறு, பிரபஞ்சம் படைக்கப்பட்டதன் நோக்கம், அதன் விதி எனப் பலவற்றுக்கு விரிவாக விளக்கம் அளித்துள்ளார்.

பிரிவுகள்
  • முதல் பகுதி (ஆரம்பங்களின் புத்தகம் - The Book of Beginnings): சத்தியவானின் மரணத்தையும், அஸ்வபதி தனது தனிப்பட்ட சுய உணர்தலுக்காக மேற்கொண்ட யோக முயற்சிகளைப் பற்றியும் கூறுகிறது.
  • இரண்டாவது பகுதி (பயணியின் புத்தகம் - The Book of the Traveller of the Worlds): அஸ்வபதி நனவின் பல்வேறு தளங்களை ஆராய்வதைப் பற்றியும், மேல்நிலைக்குச் செல்வதற்காக மேற்கொண்ட முயற்சிகளைப் பற்றியும் விளக்குகிறது.
  • மூன்றாவது பகுதி (தெய்வீக அன்னையின் புத்தகம் - The Book of the Divine Mother): அஸ்வபதி உலகளாவிய உணர்தலுக்காகத் தனது யோகத்தைத் தொடர்வதையும், தெய்வீக அன்னையின் அருள் பெறுவதையும் கூறுகிறது.
  • நான்காவது பகுதி (பிறப்பு மற்றும் தேடலின் புத்தகம் - The Book of Birth and Quest): சாவித்திரியின் பிறப்பு, வளர்ப்பு, அவளது குணங்கள், அவள் கணவனைக் (சத்தியவானைக்) கண்டுபிடிக்கும் தேடலைப் பற்றி விவரிக்கிறது.  
  • ஐந்தாவது பகுதி (காதலின் புத்தகம் - The Book of Love): சத்தியவான்-சாவித்திரி சந்திப்பை இப்பகுதி விளக்குகிறது.
  • ஆறாவது பகுதி (விதியின் புத்தகம் - The Book of Fate): இந்தப் பகுதி, சத்தியவானுக்குக் காத்திருக்கும் விதியைப் பற்றி சாவித்திரி அறிவதையும், அவனை மணப்பதையும் பற்றிக் கூறுகிறது.
  • ஏழாவது பகுதி (யோகத்தின் புத்தகம் - The Book of Yoga) சாவித்ரியின் யோகம், மனநலம், பிரபஞ்ச உணர்வை அவள் புரிந்து கொண்டது போன்றவற்றை விளக்குகிறது.
  • எட்டாவது பகுதி (மரணத்தின் புத்தகம் - The Book of Death): விதிப்படி சத்தியவான் மரணம் எய்துவது பற்றியும், சாவித்திரி மற்றும் அவர்களது குடும்பத்தினரின் துயரைப் பற்றியும் கூறுகிறது.
  • ஒன்பதாவது பகுதி (நித்திய இரவின் புத்தகம் - The Book of Eternal Night): சத்யவானைத் திரும்பக் கொண்டுவர சாவித்ரி மரணத்தை மாற்றும் யோகத்தை மேற்கொள்வதைப் பற்றிக் கூறுகிறது.
  • பத்தாவது பகுதி (ஒளியைத் தேடும் பயணப் புத்தகம் - The Book of the Double Twilight): சாவித்ரி மரணத்தை மாற்றும் யோக முயற்சிகளைத் தொடர்வதைப் பற்றி, அதற்காக மேற்கொள்ளும் பயணம் பற்றிக் கூறுகிறது.
  • பதினோராவது பகுதி (நித்திய நாளின் புத்தகம் - The Book of Everlasting Day): சாவித்ரி மரணத்தை மாற்றும் யோகாவைத் தொடர்வதில் வென்றதைப் பற்றியும், ஆன்மாவின் தேர்வு மற்றும் உச்ச நிறைவு பற்றியும் கூறுகிறது.
  • பனிரண்டாவது பகுதி (நிறைவுப் பகுதி - Epilogue): சத்யவானுடன் சாவித்ரி பூமிக்குத் திரும்புதல் - மரணத்தை வென்ற ஆன்மா, உயர்நிலை உணர்வுடன் பூமிக்குத் திரும்புவது - பற்றிக் கூறுகிறது.

சாவித்ரி பற்றி அன்னை

சாவித்ரி பற்றி அன்னை, "சாவித்ரி ஓர் அதி உன்னதப் படைப்பு. அரவிந்தராலேயன்றி வேறு யாராலும் சாத்தியப்படாதது. சாவித்ரியின் ஒவ்வொரு வரியும் மந்திரத்தைப் போன்றது. அரவிந்தர் மனித குலத்திற்கு வழங்கியுள்ள மிக உயரிய கொடை இது. இதற்காக அரவிந்தர் மிகக் கடுமையாக உழைத்தார். இதில் உள்ளவை அனைத்தும் மிக உயரிய மேற்பரப்பிலிருந்து, முழுமையாகக் கீழறங்கி வந்தவையாகும். அதனை அரவிந்தர் தனது மேதைமைத் திறனால், வரிசைக் கிரமமாக, அழகாக ஒழுங்குபடுத்தித் தந்துள்ளார். நான் பல மொழிகளில் படித்துள்ள புத்தகங்களில் எதுவுமே சாவித்ரிக்கு முழுமையாக ஈடாகாது. உலகின் சிறந்த முழுமையான படைப்புகளில் சாவித்ரி தலையானது. ஒரு மனிதன் யோக வாழ்வை மேற்கொள்ளத் தேவையான அனைத்தும் இதில் உள்ளன. அஞ்ஞானத்திலிருந்து விடுபட்டு, அதி மானஸ வாழ்விற்கு நம்மை இட்டுச் செல்லும் வல்லமை மிக்கது 'சாவித்ரி'. அரவிந்தரின் திருவுருமாற்ற யோகம் முழுமையும் உள்ளடக்கியது. புவி மீது தோன்றப் போகும் அதி மானஸ மனத்தை நோக்கி நம்மை இட்டுச் செல்லும் வல்லமை படைத்தது சாவித்ரி.” என்றார்.

Savitri book by Dr. Prema nandakumar

சாவித்ரி - உரை நூல்கள்

எழுத்தாளரும், பேச்சாளரும், ஆய்வாளருமான பிரேமா நந்தகுமார், அரவிந்தரின் சாவித்ரி பற்றி, ‘Sri Aurobindo's Savitri: A Study of the Cosmic Epic' என்ற தலைப்பில் விரிவாக ஆய்வு செய்து, முனைவர் பட்டம் பெற்றார்.

காவல் துறை அதிகாரியான இரவி ஆறுமுகம், சாவித்ரி பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். அதனை நூலாகவும் வெளியிட்டார்.

‘ஸ்ரீ அரவிந்தரின் மகா காவியம்: சாவித்ரி எனும் ஞான இரகசியம்' என்ற தலைப்பில் அன்னை ஓம் பவதாரிணி நூல் ஒன்றை எழுதினார்.

சாவித்ரி பற்றி இந்திய அளவில் பலர் ஆய்வு செய்துள்ளனர். நூல்களை வெளியிட்டுள்ளனர்.

மதிப்பீடு

அரவிந்தர் தம் வாழ்நாள் முழுவதும் எழுதிய காவியம் சாவித்ரி. தன் யோக சாதனை மற்றும் தான் பெற்ற அனுபவங்களுக்கேற்ப அரவிந்தர், பத்து முறைக்கும் மேல் அந்நூலைத் திருத்தி அமைத்தார். அரவிந்தர் தன்னுடைய பூரண யோகத்தின் விளைவையே, அனுபவங்களையே சாவித்ரி எனும் காவியமாகப் படைத்தார். அரவிந்தரின் ஆழ்ந்த ஆன்மிக அனுபவத்தின் விளக்கமே சாவித்ரி எனும் காப்பியமாகப் பரிணமித்தது. ஒரு பெண் காப்பியத்தின் நாயகியாகப் படைக்கப்பட்ட முதல் ஆங்கிலப் படைப்பாக சாவித்ரி கருதப்படுகிறது.

சாவித்ரி நூல் குறித்து எழுத்தாளர் திருப்பூர் கிருஷ்ணன், “மகான் அரவிந்தரின் சொற்சேர்க்கை காரணமாக சாவித்திரி காப்பியம் முழுவதும் மந்திர அந்தஸ்து பெற்றுள்ளது. அதைப் படித்தாலும் அந்த நூலை இல்லத்தில் வைத்திருந்தாலும் மங்கலங்கள் நிகழும் என்பது அரவிந்த அன்பர்களின் நம்பிக்கை. [1]” என்று குறிப்பிடுகிறார்.

உசாத்துணை

அடிக்குறிப்பு



🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.