சாந்தி (இதழ்)

From Tamil Wiki
Revision as of 11:52, 14 February 2022 by Siva Angammal (talk | contribs)

This page is created by ka. siva

Template:Stub page

சாந்தி இதழ் 1950 களில் இலட்சிய வேகத்தோடும் மிகுந்த நம்பிக்கையுடன் தொடங்கப்பட்ட தமிழ் இலக்கிய இதழாகும். இதனை தொ.மு.சி. ரகுநாதன் நடத்தினார்

தோற்றம்

1954- ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்  சாந்தி இலக்கிய மாத இதழ் தொடங்கப்பட்டது. இவ்விதழ் திருநெல்வேலியில் இருந்து வெளியானது

ஆசிரியர்

சாந்தி இதழினை நடத்தியவர்  தொ.மு.சி. ரகுநாதன்.  இவரின் முழுப் பெயர்  தொண்டைமான் முத்தையா சிதம்பர ரகுநாதன. பள்ளிப் பருவத்திலேயே இலக்கியத்திற்குள் நுழைந்த தொ.மு.சி. ரகுநாதன் ஒரு முற்போக்கு எழுத்தாளர். "புதுமைப்பித்தனின்  வரலாறு"  இவரது முதன்மையான ஆக்கமாகும். இவர் எழுதிய "பாரதி:காலமும் கருத்தும்" நூல் சாகித்ய அகாடமி விருது பெற்றது. குடும்பச் சொத்தை பாகப்பிரிவினை செய்தபோது தனக்குக் கிடைத்த தொகையைக் கொண்டு "சாந்தி" இதழ் பணிகளை தொ.மு.சி. ரகுநாதன் தொடங்கினார்..

.

நோக்கம்

சொத்தைக் கருத்துகளும் சொற்சிலம்பங்களும் மிகுந்த இலக்கியப் போலிகளை இனம் காட்டவும் வெள்ளிக் காசுக்கும் விதேசியச் சிறுமைக்கும்இதயத்தையே எடைபோட்டு விற்றுவிட்ட எழுத்துலக துரோகிகளை அம்பலப்படுத்தவும், நமது பண்பாட்டையும் பாஷை வளத்தையும் இழிவுபடுத்தும் நாசக் கற்பனைகளை வேரறுக்கவும், தெம்பும் திராணியும், இளமையும், புதுமையும் நிறைந்த இலக்கிய சிருஷ்டிகளை வரவேற்கவும் வளர்க்கவும் புனித சங்கல்பம் பூண்டு சாந்தி தோன்றுகிறது என்ற அறிவிப்புடன் சாந்தி இதழ் வெளிவந்தது

படைப்பாளிகள் மற்றும் படைப்புகள்

  • .தொ.மு.சி. ரகுநாதன் எழுதிய "நெஞ்சில் இட்ட நெருப்பு" என்ற தொடர்கதை வெளியானது.
  • புதுமைப்பித்தன் நினைவுச் சிறுகதைப் போட்டி நடத்தப்பட்டது. அதில் சுந்தர ராமசாமி எழுதிய "தண்ணீர்" என்ற கதை முதல் பரிசு வென்றது.
  • சுந்தர ராமசாமி, ப. சீனிவாசன், டி. செல்வராஜ் ஆகியோரின் சிறுகதைகள் தொடர்ந்து வெளிவந்தன.
  • பல மலையாளச் சிறுகதைகள் சுந்தர ராமசாமியின் மொழியாக்கத்தில் வெளியாகின.
  • அப்பாஸ், கிருஷ்ணசந்தர், யஷ்பால், முல்கராஜ் ஆனந்த் ஆகியோரின்  இந்திச் சிறுகதைகள் வெளியாகின.
  • நா. வானமாமலை, சாமி. சிதம்பரனார், எஸ். ராமகிருஷணன் ஆகியோரின் கட்டுரைகள் வெளிவந்தன.
  • கட்டபொம்மு, மருது பாண்டியர் போன்ற நாட்டுப் பாடல்கள் குறித்து தொ.மு.சி. ரகுநாதன் விரிவான கட்டுரைகளை பிரசுரித்தது.
  • தி.க. சி எழுதிய "புத்தக விமர்சனம்" இடம்பெற்றது.

சிறப்பிதழ்

1955 டிசம்பர் மாதம் சாந்தி இதழின் பனிரெண்டாவது இதழ் "ஆண்டு மலர்" என வெளிவந்தது.

ப. ஜீவானந்தம், நா. வானமாமலை, எஸ். ராமகிருஷ்ணன், சாமி சிதம்பரனார், க. கைலாசபதி, எச். என். பி. மொஹிதீன் ஆகியோரின் கட்டுரைகளும், சுந்தர ராமசாமி, வல்லிக்கண்ணன், டி. செல்வராஜ், அகிலன், கி. ராஜநாராயணன், தொ.மு.சி. ரகுநாதன் ஆகியோரின் கதைகளும் கே.சி.எஸ். அருணாசலம், குயிலன், திருச் சிற்றம்பலக் கவிராயர் ஆகியோரின் கவிதைகளும் தி.க. சி எழுதிய நாடகமும், மேலும்,  கதகளி பற்றி எஸ். சிதம்பரம் எழுதிய நீண்ட கட்டுரையும் இந்த ஆண்டு மலர் இதழில் இடம் பெற்றிருந்தன.

மதிப்பீடு

நல்ல முற்போக்கு இலக்கிய இதழ் என்ற பெயரை சாந்தி இதழ் பெற்றதே தவிர எழுத்துலகில் எவ்விதமான தாக்கத்தையும்  ஏற்படுத்தவில்லை" என வல்லிக்கண்ணன் குறிப்பிடுகிறார்.

நிறுத்தம்

பொருளாதார பின்னடைவு காரணமாக  1956, ஏப்ரல் மாதம் சாந்தி இதழ் நிறுத்தப்பட்டது

உசாத்துணை

  • "தமிழில் சிறு பத்திரிக்கைகள்" வல்லிக்கண்ணன், மணிவாசகர் பதிப்பகம். பக்கம் 59- 64
  • இந்து தமிழ் திசை இணைய இதழ், வெளியீடு நாள் 20.10.2014
  • புகைப்படம் உதவி: https://kallarkulavaralaru.blogspot.com/2018/10/blog-post.html?m=1