சாண்டில்யன்: Difference between revisions

From Tamil Wiki
mNo edit summary
No edit summary
Line 39: Line 39:
* தமிழ் வரலாற்று சாகசப் புனைவுகளை தமிழ் வரலாற்றுச் சூழலுக்கு வெளியே கொண்டு சென்றார். ராஜபுதனப் பின்னணியிலும், மராட்டியப் பின்னணியிலும் நாவல்களை எழுதினார்
* தமிழ் வரலாற்று சாகசப் புனைவுகளை தமிழ் வரலாற்றுச் சூழலுக்கு வெளியே கொண்டு சென்றார். ராஜபுதனப் பின்னணியிலும், மராட்டியப் பின்னணியிலும் நாவல்களை எழுதினார்


எழுத்தாளர் [[ஜெயமோகன்]] ‘நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்' நூலில் சொல்வது: <blockquote>தமிழின் வரலாற்றுக் காலகட்டங்களை பொதுவாசகர்களுக்குக் கொண்டு சென்றவை சாண்டில்யனின் நாவல்கள். வாழ்வை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் மனநிலையின் கதை வடிவமே சாகசம் என்பது. அந்தக் காலகட்டத்தில் அதற்குரிய படைப்புகளுடன் வளர்வது ஆரோக்கியமான விஷயமே. அவருடைய நாவல்கள் பெரிய திரையில் விரிவுபடுத்தப்பட்ட சாகசக் குழந்தை இலக்கியங்களே அன்றி வேறல்ல. ஒரு குறிப்பிட்ட வயதில் சாண்டில்யனின் நாவல்களைப் படிப்பதென்பது அவசியமான விஷயமே ஆகும். அவை அழுத்தமாக மனத்தில் பதிய வைக்கும் செய்திகள் தன்னம்பிக்கையும், சுயமுயற்சியின் முக்கியத்துவமும், நட்பும்தான் </blockquote>
எழுத்தாளர் [[ஜெயமோகன்]] ‘நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்' நூலில் சொல்வது:  
தமிழின் வரலாற்றுக் காலகட்டங்களை பொதுவாசகர்களுக்குக் கொண்டு சென்றவை சாண்டில்யனின் நாவல்கள். வாழ்வை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் மனநிலையின் கதை வடிவமே சாகசம் என்பது. அந்தக் காலகட்டத்தில் அதற்குரிய படைப்புகளுடன் வளர்வது ஆரோக்கியமான விஷயமே. அவருடைய நாவல்கள் பெரிய திரையில் விரிவுபடுத்தப்பட்ட சாகசக் குழந்தை இலக்கியங்களே அன்றி வேறல்ல. ஒரு குறிப்பிட்ட வயதில் சாண்டில்யனின் நாவல்களைப் படிப்பதென்பது அவசியமான விஷயமே ஆகும். அவை அழுத்தமாக மனத்தில் பதிய வைக்கும் செய்திகள் தன்னம்பிக்கையும், சுயமுயற்சியின் முக்கியத்துவமும், நட்பும்தான்.


==படைப்புகள்==
==படைப்புகள்==

Revision as of 00:51, 20 January 2022

File:SandilyanPic.jpg 31074 thumb.jpg
சாண்டில்யன்

சாண்டில்யன் (ஆர்.பாஷ்யம் ஐயங்கார்) (நவம்பர் 10, 1910-செப்டம்பர் 11, 1987) தமிழில் வரலாற்றுப் பின்புலம் கொண்ட சாகச நாவல்களை எழுதிய எழுத்தாளர். வால்டர் ஸ்காட், சார்லஸ் கிங்ஸ்லி ஆகியோருடைய தாக்கத்துடன் அரண்மனைச் சதிகளும் கடற்பயண விவரணைகளும் கொண்ட நாவல்களை எழுதினார். குமுதம் இதழில் தொடராக வெளிவந்த இவருடைய நாவல்கள் பெரும் புகழ் பெற்றவை.

தனி வாழ்க்கை

சாண்டில்யன் தமிழ் வைணவப் பின்னணி கொண்டவர். ராமானுஜம் அய்யங்கார் மற்றும் பூங்கோவில்வல்லி ஆகியோருக்கு மகனாக நவம்பர் 10, 1910ம் ஆண்டு திருக்கோவிலூரில் பிறந்தார். இயற்பெயர் பாஷ்யம் அய்யங்கார். சென்னையில் உள்ள பச்சையப்பா மற்றும் நேஷனல் மாடல் பள்ளிகளில் பயின்றார். திருச்சி செயின்ட் ஜோசஃப் கல்லூரியில் பட்டம் பெற்றார். கல்லூரியில் இருந்தபோது சி. ராஜகோபாலாச்சாரியின் (ராஜாஜி) தாக்கத்தால் இந்திய சுதந்திர போரட்டத்தில் இணைந்து இந்திய தேசிய காங்கிரசில் உறுப்பினரானார். 1929இல் ரங்கநாயகியை மணந்தார். சாண்டில்யனுக்கு இரு மைந்தர்கள். சடகோபன் பேராசிரியர். கிருஷ்ணன், வைஷ்ணவ கல்லூரி முதல்வராக இருந்து ஓய்வு பெற்றார். அவருடைய மகள் பத்மா சாண்டில்யன் இசைக்கலைஞர்.

இலக்கிய வாழ்க்கை

கல்லூரிப் படிப்பை முடித்தபின் 1930களில் சென்னை தி.நகரில் குடியேறினார். அருகாமையில் வசித்த பிரபல எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி மற்றும் திரு. வி. க நடத்திய வார இதழ் நவசக்தியில் பணியாற்றிய வி. சுவாமிநாதனும் அவருக்கு நண்பர்கள் ஆனார்கள். அவர்கள் அளித்த ஊக்கத்தால் சிறுகதைகள் எழுத ஆரம்பித்தார். அவர் எழுதிய முதல் சிறுகதை சாந்தசீலன். திராவிடன் இதழாசிரியர் சுப்பிரமணியம் என்பவரால் திராவிடன் இதழில் அது வெளியிடப்பட்டது. அவரது கண்ணம்மாவின் காதலி, அதிர்ஷ்டம் என்ற இரு சிறுகதைகளை ஆசிரியர் கல்கி ஆனந்த விகடனில் வெளியிட்டார். அதன் பின்னரே திருக்கண்ணபுரம் சீனிவாசாரியார் என்ற தமிழ்ப் பண்டிதரிடம் முறையாக தமிழ் மொழியைப் பயின்றார். தொடர்ந்து சுதேசமித்திரன் வார இதழில் சிறுகதைகள் எழுதினார். தன்னுடைய குலக்குழுவான சாண்டில்ய (chandilya) கோத்திரத்தின் பெயரை தன் புனைபெயராக ஆக்கிக் கொண்டார்.

பாலைவனத்துப் புஷ்பம், சாந்ததீபம் இரண்டும் அவரது தொடக்க கால வரலாற்று நாவல்கள். சாண்டில்யன் எழுதி புகழ்பெற்ற முதல் வரலாற்று நாவல் ஜீவபூமி. இது ராஜஸ்தானியப் பின்னணியில் ராஜபுதன வீரர்களின் கதையாக அமைந்தது. அந்நாவலுக்கு முன்னோடியாக அவர் ராஜபுதன வீரர்களைப் பற்றிய சிறுகதைகளையும் அமுதசுரபி மாத இதழில் எழுதியிருந்தார். ஜீவபூமி அமுதசுரபி இதழில் வெளியாகி புகழ்பெறவே தொடர்ந்து அமுதசுரபி இதழில் கன்னிமாடம், மலைவாசல் ஆகிய நாவல்களை எழுதினார். குமுதத்தில் முதலில் எழுதிய தொடர் மன்னன் மகள். பின்னர் தொடர்ச்சியாக குமுதம் வார இதழில் ஏறத்தாழ முப்பதாண்டுகள் சரித்திர நாவல்களை எழுதினார். குமுதம் வார இதழின் வெற்றிக்கு மிக இன்றியமையாத கூறாக அவருடைய நாவல்கள் அமைந்தன. சாண்டில்யனின் ஒரு நாவல் முடிந்த அதே இதழிலேயே அடுத்த நாவலை தொடங்கும் வழக்கம் குமுதத்தில் இருந்தது. இவர் எழுதிய மிகப் பெரிய நாவல் கடல்புறா. மூன்று பாகங்களிலாக ஏறத்தாழ 2,000 பக்கம் கொண்டது. அவருடைய இறுதி நாவல் சீனத்துச் சிங்காரி. அது குமுதம் இதழில் தொடராக வெளிவந்தது. அவர் அதை முடிப்பதற்குள் உயிர்துறந்தார்.

2009ல் தமிழக அரசு சாண்டில்யன் உட்பட்ட 28 எழுத்தாளர்களின் படைப்புகளை நாட்டுடைமை ஆக்கவும் அவர்களின் வாரிசுகளுக்கு இழப்பீட்டுத்தொகை வழங்கவும் முன்வந்தது. சாண்டில்யனின் வாரிசுகள் நாட்டுடைமையாக்குவதற்கு மறுத்து விட்டனர்.

திரைப்படத்துறை

ஹிந்துஸ்தான் டைம்ஸில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது விஜயா ஸ்டுடியோவின் பி.என்.ரெட்டி, நடிகர் சித்தூர் வி. நாகையா இருவருடன் நட்பு ஏற்பட்டது. இந்த நட்பே இவர் திரைப்படத்துறையில் அடியெடுத்து வைக்க வழிவகுத்தது. நாகி ரெட்டியுடன் விஜயா ஸ்டுடியோ கதை இலாகாவில் பணியாற்றினார். சுவர்க்க சீமா(1945), என் வீடு(1953) ஆகிய இரு திரைப்படங்களுக்கு திரைக்கதைகளை எழுத உதவினார். பிற்காலத்தில் தனது திரைப்படத்துறை அனுபவங்களை சினிமா வளர்ந்த கதை(1985) என்ற புத்தகமாக வெளியிட்டார்.

தொழிற்சங்கப் பணிகள்

சாண்டில்யன் உழைக்கும் பத்திரிகையாளர்களுக்கான சங்கம் ஒன்றை நிறுவுவதில் முயற்சி எடுத்து தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் என்னும் அமைப்பை தொடங்கினார். அது "தென்னிந்தியப் பத்திரிகையாளர் சம்மேளனம்" என்ற பெயரில் வலுப்பெற்றது.

ஆவணப் படம்

சாண்டில்யன் Birth Of Newspaper என்ற ஆவணப்படமும் தயாரித்து வெளியிட்டார்.

மறைவு

சாண்டில்யன் செப்டம்பர் 11, 1987 அன்று சென்னையில் காலமானார்

இதழியல்

சாண்டில்யன் 1935-45வரை சுதேசமித்திரனில் நிருபராகப் பணியாற்றினார். சுதேசமித்திரன் ஆசிரியர் சி.ஆர். சீனிவாசன் வழிகாட்டுதலில் உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்குகள் பற்றிய செய்திகளை எழுதும் நிருபராகப் பணியாற்றினார். ஆங்கில நாளிதழ் ஹிந்துஸ்தான் டைம்சில் உதவி ஆசிரியராக பணிபுரிந்தார். 1937இல் மகாத்மா காந்தியைச் சந்தித்துப் பேட்டி கண்டு எழுதினார். தன் கதைகளை வெளியிட ’கமலம்’ என்ற வார இதழ் ஆரம்பித்தார். ஆனால் அதில் அவர் வெற்றி பெறவில்லை.

இலக்கிய இடம்

சாண்டில்யன் நினைவு அறக்கட்டளை துவக்கம். படத்திறப்பு 06/11/2010

சாண்டில்யனின் நாவல்கள் அனைத்துமே சாகசத்தன்மை கொண்டவை. இளைஞனாகிய கதைநாயகன் பல்வேறு இடர்கள் வழியாக சென்று வெற்றி பெறுகிறான். கதைமாந்தரின் உருவாக்கத்தில் கற்பனாவாத மிகை உண்டு. பொதுவாகச் சாண்டில்யனின் கதைமாந்தர்களில் எதிர்மறைத் தன்மை கொண்டவர்கள் இல்லை. சரித்திர நாயகர்கள் அனைவரையுமே மாமனிதர்களாகக் காட்டுவது அவருடைய இயல்பு. தமிழில் கல்கி எழுதிய சரித்திரக் கற்பனாவாத நாவல்களுக்குப் பின் மிகப் பெரிய அளவில் வாசகர்களை ஈர்த்தவை சாண்டில்யனின் நாவல்கள். அதற்குக் காரணம் அவர் அக்கால அளவுகோல்களின்படி பாலியலை சற்று கூடுதலாகவே எழுதினார் என்பதுதான். அவர் பாலியலை எழுத சம்ஸ்கிருதக் காவியங்களின் அழகியலை பின்பற்றினார்.

சாண்டில்யனின் புனைவுகளில் மிகவும் செல்வாக்கு செலுத்திய ஆங்கிலநாவலாசிரியர்கள் வால்டர் ஸ்காட் மற்றும் சார்ல்ஸ் கிங்ஸ்லி. வால்டர் ஸ்காட்டின் ஐவன்ஹோ (Ivanhoe, 1819), சார்ல்ஸ் கிங்ஸ்லியின் வெஸ்ட்வர்ட் ஹோ (Westward Ho!, 1855) ஆகிய நாவல்கள் வெவ்வேறு வகைகளில் அவர் நாவல்களில் ஊடாடுகின்றன. குறிப்பாக கடற்பயணம், கடற்கொள்ளையர்கள் பற்றிய நாவல்களில் சார்ல்ஸ் கிங்ஸ்லியின் செல்வாக்கைக் காணலாம்.

சாண்டில்யனின் புனைவுகளின் சிறப்புகள்.

  • அவை மிக விரிவான காட்சி விவரணைகள் கொண்டவை. நிலக்காட்சிகள், போர்க்களக் காட்சிகள் ஆகியவற்றை காட்சிகளாக விரித்து எழுதிய முதல் தமிழ் எழுத்தாளர் அவர்தான்
  • அவருடைய புனைவுகளில் உள்ள காவிய அழகியல் கூறுகள். அவர் சம்ஸ்கிருத, தமிழ் பெருங்காவியங்களிலுள்ள காட்சிகளையும் உணர்ச்சிகளையும் தன் நூல்களில் பின்பற்றினார். நேரடியாகவே காவியங்களின் பல நுட்பங்களை அவருடைய நூல்களில் விவாதித்தார்.
  • தமிழ் வரலாற்று சாகசப் புனைவுகளை தமிழ் வரலாற்றுச் சூழலுக்கு வெளியே கொண்டு சென்றார். ராஜபுதனப் பின்னணியிலும், மராட்டியப் பின்னணியிலும் நாவல்களை எழுதினார்

எழுத்தாளர் ஜெயமோகன் ‘நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்' நூலில் சொல்வது:

தமிழின் வரலாற்றுக் காலகட்டங்களை பொதுவாசகர்களுக்குக் கொண்டு சென்றவை சாண்டில்யனின் நாவல்கள். வாழ்வை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் மனநிலையின் கதை வடிவமே சாகசம் என்பது. அந்தக் காலகட்டத்தில் அதற்குரிய படைப்புகளுடன் வளர்வது ஆரோக்கியமான விஷயமே. அவருடைய நாவல்கள் பெரிய திரையில் விரிவுபடுத்தப்பட்ட சாகசக் குழந்தை இலக்கியங்களே அன்றி வேறல்ல. ஒரு குறிப்பிட்ட வயதில் சாண்டில்யனின் நாவல்களைப் படிப்பதென்பது அவசியமான விஷயமே ஆகும். அவை அழுத்தமாக மனத்தில் பதிய வைக்கும் செய்திகள் தன்னம்பிக்கையும், சுயமுயற்சியின் முக்கியத்துவமும், நட்பும்தான்.

படைப்புகள்

வரலாற்று நாவல்கள்
  • ஜீவபூமி
  • கன்னிமாடம்
  • மன்னன்மகள்
  • கடல் புறா
  • யவன ராணி
  • ராஜ முத்திரை
  • விஜய மகாதேவி
  • பல்லவ திலகம்
  • விலை ராணி
  • ராஜ திலகம்
  • ஜல தீபம் (3 பாகங்கள்)
  • கன்னி மாடம்
  • சேரன் செல்வி
  • கவர்ந்த கண்கள்
  • மலை வாசல்
  • மஞ்சள் ஆறு
  • மூங்கில் கோட்டை
  • சித்தரஞ்சனி
  • மோகினி வனம்
  • இந்திர குமாரி
  • இளைய ராணி
  • நீள்விழி
  • நாக தீபம்
  • வசந்த காலம்
  • பாண்டியன் பவனி
  • நாகதேவி
  • நீல வல்லி
  • ராஜ யோகம்
  • மோகனச் சிலை
  • மலை அரசி
  • கடல் ராணி
  • ஜலமோகினி
  • மங்கலதேவி
  • அவனி சுந்தரி
  • உதய பானு
  • ராஜ்யஸ்ரீ
  • ராஜ பேரிகை
  • நிலமங்கை
  • சந்திரமதி
  • ராணா ஹமீர்
  • அலை அரசி
  • மலை வாசல்
  • கடல் வேந்தன்
  • பாலைவனத்துப் புஷ்பம்
  • சாந்நதீபம்
  • மண்மலர்
  • மாதவியின் மனம்
  • பல்லவ பீடம்
  • நீலரதி
சமூக நாவல்கள்
  • நங்கூரம்
  • செண்பகத் தோட்டம்
  • மனமோகம்
  • மதுமலர்
  • புரட்சிப் பெண்
சிறுகதைகள்
  • ராணியின் கனவு
கட்டுரைகள்
  • கம்பன் கண்ட பெண்கள்
  • போராட்டங்கள் (தன்வரலாறு)
  • ஸ்ரீராமானுஜர் (வாழ்க்கை வரலாறு)
  • சினிமா வளர்ந்த கதை

உசாத்துணை

நவீன தமிழ் இலக்கைய வரலாறு: ஜெயமோகன்

தினமணி இணைப்பிதழில் அமுதசுரபி விக்ரமன் கட்டுரை