standardised

சமஸ்

From Tamil Wiki
Revision as of 10:19, 14 September 2022 by Jeyamohan (talk | contribs)
சமஸ்

சமஸ் (பிறப்பு: டிசம்பர் 4, 1979) (ச.ஸ்டாலின்) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர், கட்டுரையாளர், பத்திரிக்கையாளர், உரையாளர். ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’, ‘தி இந்து’ தமிழ் ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ’அருஞ்சொல்’ இணைய பத்திரிக்கையின் ஆசிரியர்.

சமஸ்

பிறப்பு, கல்வி

சமஸின் இயற்பெயர் ஸ்டாலின். மன்னார்குடியில் மு. சந்திரசேகரன், மு.இரா. மலர்க்கொடி இணையருக்கு டிசம்பர் 4, 1979-ல் பிறந்தார். சிறுவயதிலேயே தந்தை காலமானார். தாய்வழித் தாத்தா சு. ராஜகோபாலனின் ஆதரவில் தொடக்கக் கல்வியை மன்னார்குடி சேவியர் ஜீசஸ் பொதுப் பள்ளி, இலக்கணாம்பேட்டை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, மன்னார்குடி பின்லே தொடக்கப் பள்ளியில் பயின்றார். மேல்நிலைக் கல்வியை பின்லே மேல்நிலைப் பள்ளியில் பயின்றார். மன்னார்குடி இராஜகோபாலசாமி அரசினர் கலைக் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் பயின்றார்.

சமஸ்

தனி வாழ்க்கை

பள்ளி நாட்களில் ‘இந்தியன்’, கல்லூரி நாட்களில் ‘இந்தியன் இனி’ போன்ற இதழ்களில் மாண இதழாளராகப் பணியாற்றினார். ‘தினமலர்’, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’, ‘ புதிய தலைமுறை’, ‘தி இந்து தமிழ் திசை’ நாளிதழில் பணியாற்றினார். மனைவி ரா.ரேகா. அக்குபஞ்சர் மருத்துவர். இரு குழந்தைகள். தற்போது சென்னையில் வசிக்கிறார்.

இதழியல்

சமஸ் வெவ்வேறு இதழ்களில் உதவி ஆசிரியராகவும், பொறுப்பாசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். சந்திரசேகரன் மலர்க்கொடி ஸ்டாலின் என்னும் பெயர்களை இணைத்து சமஸ் என பெயர் சூட்டிக்கொண்டார்.

தினமணி
சமஸ்

தினமணி நாளிதழில் 2005ல் சமஸ் பணியாற்றத் தொடங்கினார். ‘ஞாயிறு கொண்டாட்டம்’ இணைப்பிதழில் ‘ஈட்டிங் கார்னர்’ பகுதியில் உணவு தொடர்பான கட்டுரைகளை எழுதினார். 2009-ல் ‘சாப்பாட்டுப் புராணம்’ என்ற பெயரில் அந்தக் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு வெளிவந்தது. ‘தினமணி’யின் தலையங்கப் பக்கக் கட்டுரையாளர்களில் ஒருவரானார்.

ஆனந்தவிகடன்

சமஸ் 28-மார்ச்-2011ல் ஆனந்த விகடன்’ வார இதழுக்கு பணிபுரியச் சென்றார். ஜூனியர் விகடன் இதழில் இதழியல் கட்டுரைகளை எழுதினார்

புதிய தலைமுறை

புதிய தலைமுறை’ நிறுவனம் தொடங்கவிருந்த ‘புது யுகம்’ தொலைக்காட்சியின் ஆரம்ப காலக் குழுவில், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளரான பால.கைலாசத்தின் கீழ் பணியாற்றினார்.

இந்து தமிழ்
சமஸ் கலைஞர் பொற்கிழி

‘தி இந்து’ குழுமம் தமிழில் நாளிதழ் தொடங்கியபோது அதன் நிறுவன அணியில் பங்கேற்க அழைக்க, ‘தி இந்து தமிழ்திசை’ நாளிதழில் பணியாற்றினார்.

அருஞ்சொல்

இந்து தமிழ் திசை நாளிதழிருந்து விலகிய பின் ஆகஸ்ட் 27, 2021-ல் அருஞ்சொல் என்ற இணைய பத்திரிக்கையைத் தொடங்கி அதன் ஆசிரியராக உள்ளார். அன்றாடம் தலையங்கம், கட்டுரைகள் என மூன்று பதிவுகளுக்கு மிகாமல் பதிவிட்டு வருகிறார். செப்டம்பர் 17, 2021-ல் ‘அருஞ்சொல்’ என்ற யுடியூப் பக்கத்தைத் தொடங்கி அதில் காணொளிகளையும் பதிவிட்டு வருகிறார் (பார்க்க, அருஞ்சொல்)

இலக்கிய வாழ்க்கை

கவிதைகள்

சமஸ் கல்லூரி நாட்களில் கவிதைகள் எழுதத் தொடங்கினார். 'நினைவுகள்’, ’கண்ணீர் காதலன்’, ’நிழல்’ என மூன்று கவிதை நூல்களை வெளியிட்டார்.

இதழியல் கட்டுரைகள்
சமஸ் மருத்துவர் ஜீவா விருது

சமஸ் இந்தியத் தேர்தலை நாட்டின் பல்வேறு தரப்பு மக்களும் எப்படிப் பார்க்கிறார்களென நாடெங்கும் பயணித்து 'இந்தியாவின் வண்ணங்கள்' நூலை எழுதினார். ஆதிகுடிகளான கடலோடிகள், விவசாயிகள், வனவாசிகள் நிலையைக் களத்தில் தங்கிப் பதிவு செய்யும் 'நீர், நிலம், வனம்' இரு தொடர்களும் முக்கியமான முயற்சிகள். 2016-ல் தமிழகச் சட்டமன்றத் தேர்தலின் போது இவர் எழுதிய 'அரசியல் பழகு' தொடர், அரசியலுக்கும் பொதுமக்கள் சமுதாயத்துக்கும் இடையேயான பிணைப்பையும், பரஸ்பர சார்பையும் எடுத்துரைத்தது. சமஸ் எழுதிய சாப்பாட்டுப் புராணம் தமிழகத்தின் உணவுக்கலாச்சாரம் பற்றிய இதழியல் பதிவு.

பயணக்கட்டுரை

’லண்டன்’ என்ற பயணக்குறிப்பு நூலை எழுதியுள்ளார்.

தொகைநூல்கள்

தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ கருணாநிதியை அருகிலிருந்து பார்த்தவர்களின் நேர்காணல்கள் அடங்கிய தொகுப்பு. 'மாபெரும் தமிழ்க்கனவு’ அண்ணா வாழ்க்கை வரலாறு, அவருடைய தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற, நாடாளுமன்ற உரைகள், பேட்டிகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு நூல்.

விருதுகள்

  • எழுத்தாளர் சுஜாதா விருது
  • எழுத்தாளர் சுந்தர ராமசாமி விருது
  • பத்திரிகையாளர் சின்ன குத்தூசி விருது
  • 2021இல் மருத்துவர் ஜீவா பசுமை விருது சமஸுக்கு வழங்கப்பட்டது.
  • 2021இல் கலைஞர் பொற்கிழி விருது வழங்கப்பட்டது.

இலக்கிய இடம்

சமஸ் தமிழின் மிகவும் கவனிக்கப்படும் இதழியலாளராக உள்ளார். 2018-ல் பிரிட்டன் அரசால் லண்டன் அழைக்கப்பட்டிருந்த காமன்வெல்த் பத்திரிகையாளர்களில், இந்தியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பத்து பேரில் ஒருவர் சமஸ். தமிழகம் முழுக்க பயணம் செய்து, ஒரு பொதுத்தலைப்பின் கீழ் அவர் எழுதிய இதழியல் ஆக்கங்கள் தமிழ் இதழியலெழுத்தில் முக்கியமானவை என கருதப்படுகின்றன. சமஸ் சுதந்திர ஜனநாயகப் பார்வை கொண்ட இதழாளராக அறியப்படுகிறார்.

நூல்கள்

கவிதைத்தொகுப்பு
  • நினைவுகள்
  • கண்ணீர் காதலன்
  • நிழல்
கட்டுரை
  • சாப்பாட்டுப் புராணம் (2015, துளி வெளியீடு)
  • இந்தியாவின் வண்ணங்கள் 2011
  • கடல் (நீர், நிலம், வனம்) (2015, இந்து தமிழ் திசை)
  • ஒரு பள்ளி வாழ்க்கை (2022, அருஞ்சொல் வெளியீடு)
அரசியல்
  • அரசியல் பழகு (2015, துளி வெளியீடு)
  • ஊடகர் கலைஞர் (2011, மணற்கேணி பதிப்பகம்)
  • யாருடைய எலிகள் நாம்? (2017, துளி வெளியீடு)
தொகுப்புகள்
  • தெற்கிலிருந்து ஒரு சூரியன் (2017, இந்து தமிழ் திசை)
  • மாபெரும் தமிழ்க்கனவு (2020, இந்து தமிழ் திசை)
பயணம்
  • லண்டன் (2022, அருஞ்சொல் வெளியீடு)

உரைகள்

இணைப்புகள்


⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.