அருஞ்சொல்
அருஞ்சொல் தமிழ் இணைய இதழ். எளிய மொழியில் தீவிரமான விஷயங்களை விவாதிக்கும் இதழ். இதன் ஆசிரியர் சமஸ்.
வரலாறு
சமஸ் ‘இந்து தமிழ்த் திசை’ நாளிதழில் நடுப்பக்க ஆசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்தபோது அவரின் மூத்த வாசகர்களில் ஒருவரான பாலசுப்ரமணியன் தமிழில் தீவிரமான விஷயங்களை இன்னும் ஆழமாக விவாதிக்க ஒரு தளம் வேண்டியிருப்பதன் தேவையையும், சுயாதீன ஊடகத்தை உருவாக்கும் கடமை அவருக்கு இருக்கிறது எனவும் சுட்டிக்காட்டினார். சமஸ் ‘இந்து தமிழ்த் திசை’ நாளிதழிலிருந்து விலகி ஆகஸ்ட் 22, 2021-ல் ‘அருஞ்சொல்’ தளத்தை ஆரம்பித்தார். காந்தியரான சமஸ் தமிழ் அரசியலைத் தன் பணிக்களமாகக் கருதுபவர். சென்னை தினமும், காந்தி பொது வாழ்வை நோக்கி அடியெடுத்து வைப்பதற்குத் தளமாக இருந்த ‘நேட்டால் இந்திய காங்கிரஸ்’ ஆரம்பிக்கப்பட்ட தினமுமான ஆகஸ்ட் 22-ஐ தளம் ஆரம்பிக்கும் தினமாக தேர்ந்தெடுத்தார். மதுரையில் காந்தி அரையுடைக்கு மாறிய தினமான செப்டம்பர் 22-ல் ‘அருஞ்சொல்’ தளம் பொது வாசிப்புக்கு வந்தது. வாசகர் பாலசுப்ரமணியன் ‘அருஞ்சொல்’ இதழின் முதல் சந்தாதாரர்.
நோக்கம்
“இனி என்னுடைய எழுத்துகளை இங்கே தொடர்ந்து வாசிக்கலாம். கூடவே தமிழின் முக்கியமான ஆளுமைகளின் கருத்துகள், படைப்புகளையும் வாசிக்கலாம். அன்றாடம் ஒரு பதிவு. அதிகபட்சம் என்றாலும் மூன்று. தமிழில் நேரடிக் கட்டுரை ஒருநாள் என்றால், மொழிபெயர்ப்புக் கட்டுரை மறுநாள் என்கிற அளவுக்கு மொழிபெயர்ப்புகளுக்கு முக்கியத்துவம் தரவிருக்கிறோம். இந்தியாவின் முக்கியமான அறிவாளுமைகள், சர்வதேச நிறுவனங்களில் பணியாற்றும் தமிழ் அறிஞர்கள் பலரும் பங்களிக்கவிருக்கிறார்கள். ‘அன்றாடம் அரை மணி நேரம் எங்கள் தளத்தில் செலவிடுங்கள்; உங்களுடைய மதிப்புமிக்க அறிவை மேலும் செறிவூட்டிக்கொள்ள உதவுகிறோம் என்ற உத்தரவாதத்தை நாங்கள் தருகிறோம்’ என்பதே ‘அருஞ்சொல்’ முன்வைக்கும் வேண்டுகோள்” என இதழ் ஆரம்பிக்கப்பட்டதற்கான நோக்கத்தை ஆசிரியர் சமஸ் குறிப்பிடுகிறார்.
அருஞ்சொல்லின் தனித்துவம்
- ‘அன்றாடம் ஒரு கட்டுரை; அதிகபட்சம் போனாலும் மூன்று பதிவுகள்’ எனும் அறிவிப்புடன் ‘அருஞ்சொல்’ வெளியானது. வாசகர்களை நுகர்வோராகவும், செய்திகள், கட்டுரைகளைப் பண்டங்களாகவும் அணுகக் கூடாது என்ற பார்வையை அது வெளிப்படுத்தியது.
- தளத்தை வாசிக்கவோ, சந்தாதாரர் ஆகவோ தனி சந்தா ஏதும் செலுத்த வேண்டியது இல்லை என்ற அறிவித்த ‘அருஞ்சொல்’ ஆசிரியர் குழு, அதேசமயம், ‘சமூக சந்தா’ எனும் முறையை அறிவித்தது. வசதியுள்ளோர் வசதியற்றோருக்கும் சேர்த்து, தம்மால் இயன்ற தொகையைச் செலுத்தும் வகையிலான சந்தா முறை இது.
உள்ளடக்கம்
- தமிழிலும், தமிழுக்கு வெளியிலும் என முக்கியமான அறிவாளுமைகள் தமிழில் எழுதும் களமாக ‘அருஞ்சொல்’ உள்ளது.
- நாடு தழுவிய பொது நுழைவுத் தேர்வு குறித்த ஒரு பார்வை, ‘அமுல் 75’ நிகழ்வை ஒட்டி இந்திய வேளாண் துறை மற்றும் உற்பத்தித் துறையை மறுபார்வைக் குள்ளாக்குதல், தமிழ்நாட்டுக்குள் நிலவும் பிராந்திய ஏற்றத்தாழ்வுகளைச் சீரமைப்பதற்கான வழிகள் என முக்கியமான விஷயங்களில் தொடர்ந்து பலதரப்புக் கோணங்களையும் வெளிப்படுத்தும் கட்டுரைகளை அருஞ்சொல் வெளியிடுகிறது.
- ‘காலை உணவுத் திட்டம்’ போன்ற சில முக்கியமான திட்டங்களை அரசு செயல்படுத்த தொடர்ந்து அழுத்தமும், உத்வேகமும் தரும் கட்டுரைகளை வெளியிடுகிறது.
- ஆட்சியாளர்கள், செயல்பாட்டாளர்கள், படைப்பாளிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுத் தேர்வர்கள் என அவசியம் வாசிக்க வேண்டிய தரப்பினரின் தேவையைக் கருத்தில் கொண்டு அது இயங்குகிறது.
பொறுப்பாசிரியர்
- சமஸ்
பதிவு வகைகள்
- தலையங்கம்
- கட்டுரை (ஆரோக்கியம், அரசியல், சட்டம், கலாச்சாரம், வரலாறு)
- பேட்டி
- புதையல்
- தொடர்
- இன்னொரு குரல்
- காணொளி
அருஞ்சொல் பதிப்பகம்
அருஞ்சொல் இதழின் ஓர் அங்கமாக ‘அருஞ்சொல் வெளியீடு’ எனும் பதிப்பகம் உள்ளது. இதழியல் பண்பு கொண்ட நூல்களை வெளியிடுவதை இது இலக்காகக் கொண்டிருக்கிறது. நீதிபதி கே.சந்துருவின் சுயசரிதையான ‘நானும் நீதிபதி ஆனேன்’ நூல் இதன் முதல் வெளியீடாக அமைந்தது. பெரிய நிறுவனங்களோடு இணைந்து முக்கியமான நூல்களைப் பதிப்பிக்கும் பணியிலும் ‘அருஞ்சொல்’ ஈடுபடுகிறது.
அயல்பணி ஒப்படைப்பு முறையில், ‘முதல் பிரதி’ அடிப்படையில் நூல்கள்/இதழ்களை உருவாக்கித் தருகிறது. இதற்கான உருவாக்கச் செலவை ஏற்கும் நிறுவனங்கள் அந்நூலுக்கான பதிப்புரிமை, விற்பனையுரிமையைப் பெற்று அந்நூல்களை வெளியிடுகின்றன. தேர்ந்த ஆசிரியர் குழுவின் கீழ் இதழியல் களப் பணி அடிப்படையிலான நிறைய நூல்களை உருவாக்கிடுவதற்கு இம்முறை உதவுகிறது. ‘அருஞ்சொல் எடிட்’ பிரிவு மூலம் இப்படிக் கொண்டுவரப்பட்ட முதல் நூல், ‘ஒரு பள்ளி வாழ்க்கை’. கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசனின் வாழ்க்கை வரலாற்றோடு, கல்வியை உள்ளூர்மயமாக்குவதன் தேவையைப் பேசும் நூல்.
உசாத்துணை
இணைப்புகள்
- அருஞ்சொல்: வலைதளம்
- அருஞ்சொல் (Arunchol): யுடியூப் சேனல்
- அருஞ்சொல்,தேவையும் எதிர்பார்ப்பும்: ஜெயமோகன்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
14-Sep-2022, 10:38:32 IST