சஞ்சாரம் (நாவல்)
சஞ்சாரம் (2014) எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய நாவல். நாதஸ்வரக் கலைஞர்களைப் பற்றிய படைப்பு இது. சாதிய அடிப்படையில் நாதஸ்வரக் கலைஞர்கள் ஒடுக்கப்பட்ட விதம், தொழில்நுட்ப வளர்ச்சியால் நாதஸ்வர இசை வளர்ச்சியில் ஏற்பட்ட தேக்கம், தமிழக இசைவேளாளர்களின் பெருமைமிகு வாழ்வு மற்றும் காலவோட்டத்தில் அவர்களின் வாழ்வில் ஏற்பட்ட தாழ்வு போன்றவற்றை வரலாற்று அடிப்படையிலும் புனைவின் ஓட்டத்திலும் இந்த நாவல் விளக்குகிறது. இந்த நாவலுக்காக 2018-ல் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது.
பதிப்பு
சஞ்சாரம் நாவலை உயிர்மை பதிப்பகம் டிசம்பர் 2014-ல் அச்சுப் பதிப்பாக வெளியிட்டது. அதன் பின்னர் தேசாந்திரி பதிப்பகம் வெளியிட்டது.
ஆசிரியர்
சஞ்சாரம் நாவலை எழுதியவர் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன். இவர் தமிழில் சிறுகதைகள், நாவல், கட்டுரைகள், நாடகம்,குழந்தைகள் இலக்கியம், மொழிபெயர்ப்பு ஆகிய தளங்களில் எழுதி வருபவர். 'யாமம்','நெடுங்குருதி', 'உப பாண்டவம்','உறுபசி' போன்ற நாவல்களை எழுதியவர். 2018-ல் 'சஞ்சாரம்’ நாவலுக்காக சாகித்ய அகாடமி விருதைப் பெற்றார்.
கதைச்சுருக்கம்
ரத்தினமும் பக்கிரியும் இணைந்து நாதஸ்வரம் வாசிக்கின்றனர். ரத்தினம் மூத்தவர். திருமணமானவர். எல்லாவிதமான அவமானங்களையும் சகித்துக்கொள்பவர். பக்கிரி இளைஞர். திருமணமாகாதவர். தனக்கு ஏற்படும் அவமானங்களை உடனடியான நேர்செய்துவிட விரும்புபவர். சாதிய நோக்கிலும் கலையைக் கீழ்மை செய்யும் நோக்கிலும் தான் அடைந்த அவமானத்தை நேர்செய்ய நேர்கையில் சில உயிர்கள் பலியாவதற்குக் காரணமாகிவிடுகிறார். இவர்கள் இருவரையும் காவல்துறை தேடுகிறது. பல ஊர்களுக்குத் தப்பியோடுகின்றனர். இறுதியில் அகப்படுகின்றனர். தண்டனை பெறுகின்றனர். இவர்கள் தலைமறைவாக வாழும் வாழ்க்கையின் வழியாக நாதஸ்வரக் கலையும் நாதஸ்வரத்தில் கோலோச்சிய கலைஞர்களும் அவர்களின் பெருமைமிகு வாழ்வும் காட்டப்படுகின்றன. மூதூர், அரட்டானம், டெல்லி, கரிசக்குளம், உறங்காப்பட்டி, ஒதியூர், மருதூர், அருப்புக்கோட்டை, சித்தேரி, கலிபோர்னியா, கொடுமுடி, பனங்குளம், சென்னை, லண்டன், சோலையூர், காரியாப்பட்டி, பொம்மக்காபுரம், நாரைக்குளம், திருச்சுழி, நடுக்கோட்டை கோயமுத்தூர், வேப்பங்காடு, புதுக்குடி, மதுரை, தொடுமாக்கல்-தென்மலை, மருதூர் எனப் பல ஊர்களில் இந்த நாவலின் கதை நிகழ்கிறது.
கதைமாந்தர்கள்
ரத்தினமும் பக்கிரியும் இந்த நாவலின் முதன்மைக் கதைமாந்தர்களாகவும் ரத்தினத்தின் அக்கா குடும்பத்தினரும் பக்கிரியின் மனைவி, பிள்ளைகள், பிற கலைஞர்கள் முதலியோரும் துணைமைக் கதைமாந்தர்களாகவும் இடம்பெற்றுள்ளனர்.
இலக்கிய மதிப்பீடு
தமிழில் இசைகலைஞர்களைப் பற்றி எழுதப்பட்ட குறிப்பிடத்தக்க படைப்பு இந்நாவல். தஞ்சை போன்ற ஊர்களில் நாதஸ்வரக் கலைஞர்கள் நிலக்கிழார்களின் மதிப்பையும் அதன் வழியாக செல்வத்தையும் ஈட்டி வாழ்ந்தபோது வரண்ட நிலமாகிய கரிசலில் நாதஸ்வரக் கலைஞர்கள் மதிக்கப்படவோ நாதஸ்வர இசை பெரிய அளவில் வளர்ச்சியடையவோ இல்லை. தமிழில் நாதஸ்வரக்கலைஞர் பற்றிய முதன்மையான நாவல் தில்லானா மோகனாம்பாள். அந்நாவல் முன்வைக்கும் தஞ்சையின் நாதஸ்வர உலகுக்கு நேர்மாறான இன்னொரு உலகை இந்நாவல் காட்டுகிறது. இது நாதஸ்வரக் கலைஞர்கள் சமூகத்தாலும் அமைப்பாலும் ஒடுக்கப்பட்டு, குற்றவாளிகளாக வேட்டையாடப்படும் சித்திரத்தை அளிக்கிறது. "எஸ்ராவின் எழுத்துக்களை 'ரசனை இலக்கியம்’ என்று வகைப்படுத்தலாம். கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள், சிறுவர் இலக்கியம் என்று அவர் பயணித்துக் கொண்டிருக்கும் அனைத்திலும் ஆர்ப்பாட்டமில்லா ரசனை இழையோடியபடி இருக்கிறது. அதற்கு சஞ்சாரமும் விதிவிலக்கல்ல" என விமர்சகர் சிவானந்தம் நீலகண்டன் கருதுகிறார்.
உசாத்துணை
சஞ்சாரம் நாவல் பற்றிய விமர்சனங்கள்
- நாதஸ்வரக் கலைஞர்களின் வாழ்வை கவனப்படுத்தும் 'சஞ்சாரம்' நாவல்
- எஸ்.ராமகிருஷ்ணன், சஞ்சாரம் – கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்
- சஞ்சாரம் விமர்சனம் – எஸ். ராமகிருஷ்ணன்
- சஞ்சாரம் – நாவல் விமர்சனம் – சொல்வனம் | இதழ் 268 | 10 ஏப்ரல் 2022
- Search Results for "சஞ்சாரம்" – எஸ். ராமகிருஷ்ணன்
அடிக்குறிப்புகள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:33:14 IST