கோ. கமலக்கண்ணன்

From Tamil Wiki
Revision as of 14:18, 28 January 2024 by Kaliprasadh (talk | contribs) (இ)
கோ. கமலக்கண்ணன்

கோ. கமலக்கண்னன் ( ஆகஸ்ட் 03, 1986 ) தமிழ் எழுத்தாளர். உலக செவ்வியல் இலக்கியங்களைத் தமிழில் மொழியாக்கம் செய்தவர். கட்டுரைகளும் சிறுகதைகளும் எழுதியுள்ளார்.

பிறப்பு கல்வி

கமலக்கண்ணன் திருச்சிராப்பள்ளி மாநகரத்தில் உள்ள பொன்மலையில் ஆ. கோபிநாதன் - கோ. கெம்புலெட்சுமி இணையருக்கு மகனாய்ப் பிறந்தார்.

தனது பள்ளிக் கல்வியை பொன்மலைப்பட்டி திரு இருதய மேனிலைப்பள்ளி மற்றும் இ.ஆர். மேனிலைப்பள்ளி யில் நிறைவு செய்தார்.

கமலம் விஸ்வநாதன் இயன்முறை மருத்துவக் கல்லூரியில் பட்டப்படிப்பை நிறைவு செய்தார்

தனிவாழ்க்கை

கமலக்கண்ணன் க. நர்கிஸ் பானு என்பவரை மணந்தார். 2011இல் திருமணம் ஆனது. இவர்களுக்கு க. கவினெழில், க. ஸ்வரலிபி என் இரு குழந்தைகள் உள்ளனர்.

இவரது இளவயது வாழ்க்கை பொன்மலை ரயில்வே காலனியில் கழிந்தது. தற்போது தமிழக அரசுப்பணியில் உள்ளார். வேளாண்மை விற்பனைத் துறையில் பணிபுரிகிறார். திருச்சியில் வசிக்கிறார்.

இலக்கிய வாழ்க்கை

கமலக்கண்ணனின் முதல் சிறுகதை ஏப்ரல் 2019 ல் வெளியானது. கோதார்டின் குறிப்பேடு என்னும் அந்த அறிபுனை சிறுகதை அரூ இணைய இதழில் வெளியானது. பிற சிறுகதைகள் பதாகை மற்றும் தமிழினி இதழ்களில் வெளியாயின. ஐசக் பாஷவிஸ் சிங்கர் எழுதிய ‘ஷோஷா’ வின் தமிழ் மொழியக்கத்தைச் செய்தார். அது அவருடைய முதல் மொழிபெயர்ப்பு நூலாக தமிழினி பதிப்பகத்தில் 2021ஆம் ஆண்டு வெளியானது

இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகள் என விக்டர் ஹியுகோ, ராபர்டோ பொலான்யோ, தல்ஸ்தோய், தஸ்தயேவ்ஸ்கி, ஆண்டன் செகாவ், ஐசக் பாஷவிஸ் சிங்கர், நீகாஸ் கசந்த்சாகீஸ், வள்ளுவர்,  கு. அழகிரிசாமி,  ஜெயமோகன், ஃபிரான்சிஸ் கிருபா, எலீனா ஃபெராண்டே, முன்ஷி பிரேம்சந்த் ஆகியோரைக் குறிப்பிடுகிறார்

செல்வாக்கு செலுத்திய பிற துறை முன்னோடிகள் என புத்தர், காந்தி, சார்ல்ஸ் டார்வின், நிகோலய் வாவிலோவ், கெஞ்சி மிசோகுச்சி, மசாகி கோபயாஷி,  அகி கெளரிஷ்மகி, லூயி புனுவல் ஆகியோரைக் குறிப்பிடுகிறார்

இலக்கியத்துக்கு இணையாக சினிமாத்துறையிலும் ஆர்வமுண்டு. உலகத் திரைப்பட மேதைகளைப் பற்றிய கட்டுரைகள் வெளியாகி உள்ளன. திரைப்படங்கள் குறித்தான நிலம் சிந்தும் குருதி என்கிற கட்டுரை நூல் 2019 ம்ஆண்டில் கிண்டிலில் வெளியானது.

இலக்கிய இடம்

கோ.கமலக்கண்ணன் கட்டுரைகள் சிறுகதைகள் எழுதியுள்ளார். உலக செவ்வியங்களை மொழிபெயர்த்ததே அவரது முதன்மை பங்களிப்பாகும். மொழிபெயர்ப்பில் தனது சரளமான நடைக்கும், மொழியாக்கங்களில் கைக்குள்ளும் மரபுச் சொற்களுக்காக அவர் கவனிக்கப் படுகிறார். பழந்தமிழ் இலக்கியங்கள் மீதான அவரது ஈடுபாடு, அவருடைய மொழிபயர்ப்புகளில் வெளிப்படுகிறது.

நூல் பட்டியல்