கோணங்கி

From Tamil Wiki
Revision as of 11:09, 29 January 2022 by Thangapandiyan (talk | contribs)
கோணங்கி

நவீன தமிழ் இலக்கியத்தின் மாய யதார்த்தவாத கதை சொல்லியாக அறியப்படுபவர் எழுத்தாளர் கோணங்கி (நவம்பர் 1, 1958). இயற்பெயர் இளங்கோ. ஓவியம் ஒன்றைச் சொற்களாக்க முனைந்தால் அவையே கோணங்கியின் படைப்புகள். சூலாகும் விண்மீன்கள் ஒன்றை ஒன்று மோந்துகொள்ளும் மையலின் பால்வீதிதான் தன் கலை என சொல்லிக்கொள்பவர் [1]. ‘கல்குதிரை’ என்னும் இலக்கியச் சிற்றிதழின் ஆசிரியர்.

தனிவாழ்க்கை

கோவில்பட்டியில் வசிக்கும் கோணங்கி நவம்பர் 1, 1958ல் விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகில் உள்ள நென்மேனி மேட்டுப்பட்டி கிராமத்தில் பிறந்தவர். சுதந்திரப் போராட்ட வீரரும் நாடக ஆசிரியருமான மதுரகவி பாஸ்கர தாஸ் அவர்களுக்கும் பர்மாவில் தினகரன் நாளிதழைத் தொடங்கியவருமான தினகரனுக்கும் பேரன் ஆவார். அப்பா சண்முகம், அண்ணன் ச. தமிழ்ச்செல்வன் ஆகியோர் எழுத்தாளர்கள். தம்பி முருகபூபதி தமிழின் முக்கியமான நாடகக் கலைஞர். கோணங்கியின் அப்பாவை சந்திக்க வரும் எழுத்தாளர்கள் மற்றும் பொதுவுடமை இயக்கத்தினர்கள் தொடர்பால் பொதுவுடமை இயக்கத்தின் சித்தாந்தங்கள் மீது இவருக்கு ஈடுபாடு ஏற்பட்டது. கோவில்பட்டியில் வாழ்ந்து வரும் கோணங்கி கூட்டுறவு சங்கம் ஒன்றில் பணி செய்தவர். பின்னர் எழுத்துக்காக வேலையை உதறியவர். கோணங்கி திருமணம் செய்துகொள்ளவில்லை.

இலக்கிய வாழ்க்கை

    கோணங்கியின் படைப்புகள் மிகை எதார்த்தம், மாய எதார்த்தம் மீ-எதார்த்தம் என்ற எதார்த்தத்தை நோக்கி நகர்த்தும் கனவு வடிவங்களாக உள்ளன. புதுமைப்பித்தன், மௌனி, நகுலன், ந.முத்துச்சாமி, கி.ராஜநாராயணன் ஆகியோரது எழுத்துகளால் கவரப்பட்ட கோணங்கி 1980 ஆண்டு முதல் சிறுகதைகள் மற்றும் நாவல்களை எழுதி வருகிறார். கவிஞர் பிரம்மராஜன் நடத்திய மீட்சி இதழில் புதிதாக எழுதத் தொடங்கியவர்.

கோணங்கி (நன்றி: விகடன் தடம்)


தமிழ் இலக்கியச் சூழலில் தனது மதிப்பைத் தொடர்ந்து தக்கவைத்திருக்கும் ‘கல்குதிரை’ எனும் சிற்றிதழை முப்பதாண்டுகளாகச் சீரற்ற இடைவெளிகளில் நடத்திவருகிறார். தமிழ் எழுத்தாளர் நகுலன், ருஷ்ய எழுத்தாளர் பியோதர் தஸ்தயெவ்ஸ்கி, லத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்து ஸ்பானிஷ் மொழியில் எழுதும் கபிரியேல் கார்சியா மார்க்கேஸ் ஆகியோருக்கு கல்குதிரை சிறப்பிதழ் கொணர்ந்தவர். பெரும்பத்திரிகைகள் மற்றும் வணிக இதழ்களில் இவர் எழுதுவதில்லை.  பாழி, பிதிரா, த, நீர்வளரி என்ற இவருடைய நான்கு நாவல்களும் புதிய கதைசொல்லும் முறையில் எழுதப்பட்டு கவனம் பெற்றவை. இவரைப் பற்றி விமர்சகர்கள் நாகார்ஜுனன், எஸ். சண்முகம் ஆகியோர் எழுதியிருக்கிறார்கள். இவருடைய முதல் ஐந்து சிறுகதை நூல்கள் யாவும் தொகுக்கப்பட்டுள்ளன.


காவேரியின் பூர்வ காதை எனும் நூலில் தலை முதல் கடைவரை காவிரியின் பயணம், பதிவு என நம் தொண்மங்கள் கூறுவது என்ன?, நமது கலை இலக்கியங்களின் காவிரி எவ்வாறு பதிவாகியுள்ளது. புராணங்கள் காட்டிய காவிரியின் ஆழ அகலங்கள் என்ன? என காவிரி பற்றிய கோணங்கி வரையும் முழுமையான சித்திரமும் உள்ளது. கோணங்கியின் புதினங்களில் உள்ள ஏறு தழுவுதலின் படிமங்களை வைத்து ’என் பெயர் காஞ்சர மரம்’ என்கிற நவீன நாடகம், சென்னையில் 2017ல் நடைபெற்றது.

இலக்கிய இடம்

கோணங்கி, நவீன், ஓவியர் மணிவண்ணன்

ஆரம்பகாலக் கதைகளை வைத்து கோணங்கியைத் தன் தலைமுறையின் முதன்மைச் சிறுகதையாளனாக நினைப்பதாக எழுத்தாளர் ஜெயமோகன் கூறுகிறார் . மொழித்தேர்ச்சியின்றி சொல்லப்பட்டவையானாலும் இவரது ஆரம்பகாலக்கதைகளில் மனித உறவுகளின் விசித்திரமும் வசீகரமும் களங்கமில்லாத குழந்தைக்கதைகள் போல வெளிப்படும் விதமும் முக்கியமானது. கோணங்கியின் எழுத்து தானியங்கி எழுத்து என்ற வகையைச் சேர்ந்தது. தன் மனஓட்டங்களை அப்படியே பின்பற்றும் விதமாக மொழியை அமைத்துக்கொள்வது. கட்டற்று பாயும் தன்மை கொண்டது . அவரது படைப்புப் பிரக்ஞை என்பது நாட்டார் தன்மை உடையதே ஒழிய இத்தகைய தானியங்கிப் படைப்பை எழுதும் அளவுக்கு மொத்தப் பண்பாட்டுக்குமாக விரியும் வீச்சுள்ளது அல்ல. கோணங்கியின் முதலிரு சிறுகதைத் தொகுதிகளுக்குப் பின்னால் வந்த எழுத்துக்கள் அனைத்தும் அர்த்தத்தையும் அனுபவத்தையும் அளிக்காத சொற்பிரவாகங்களையும், சில தேய்வழக்குகளையும் ஒரேமாதிரி சொற்றொடரமைப்புகளையும் கொண்டவை[2]. 1989 ம் ஆண்டிலிருந்து ‘கல்குதிரை’ என்னும் இலக்கியச் சிற்றிதழை நடத்திக்கொண்டுவருகிறார்.


நூல் பட்டியல்

சிறுகதைகள்

1. இருட்டு – சிகரம் இதழ் – அக்டோபர் 1980.

2. கருப்பு ரயில் – தேடல் இதழ் – அக்டோபர் 1981.

3. மதினிமார்கள் கதை – மீட்சி இதழ் – 1982.

குறுநாவல்கள்

1. கைத்தடி கேட்ட நூறு கேள்விகள்

2. அப்பாவின் குகையில் இருக்கிறேன்

3. தழும்புகள் சிவந்த அணங்கு நிலம்

சிறுகதைத்தொகுப்புகள்

1.  மதினிமார்கள் கதை (1986)

2.  கொல்லனின் ஆறு பெண் மக்கள் (1989)

3.  பொம்மைகள் உடைபடும் நகரம் (1992)

4.  பட்டுப்பூச்சிகள் உறங்கும் மூன்றாம் ஜாமம் (1994)

5.  உப்புக்கத்தியில் மறையும் சிறுத்தை (1997)

6.  இருள்வ மௌத்திகம் (2007)

7.  சலூன் நாற்காலியில் சுழன்றபடி (2008) – (மேற்கண்ட முதல் ஐந்து நூல்களில் உள்ள சிறுகதைகள் யாவும் அடங்கியது).

8.  வெள்ளரிப்பெண் (2016)

9.  கருப்பு ரயில் (2019)

நாவல்கள்

1.  பாழி (2000)

2.  பிதிரா (2004)

3.  த (2014)

4.  நீர்வளரி (2020)

கட்டுரைகள்

1. காவேரியின் பூர்வ காதை (2017)

2. பாட்டியின் குரல் வளையை காப்பாற்றி வைத்திருக்கிறேன் (நேர்காணல்).

விமர்சனம்

1. எஸ். ராமகிருஷ்ணனின் ’தாவரங்களின் உரையாடல்’ சிறுகதை தொகுப்பு - 1998 (https://www.sramakrishnan.com/கோணங்கி)

விருதுகள்

1.   விளக்கு விருது (2013)

2.   கி.ரா. விருது (2021)

உசாத்துணை

https://www.hindutamil.in/news/literature/712481-konangi.html

http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=8610

https://www.youtube.com/watch?v=b-XO3_-K728 தாஸ்தோயெவ்ஸ்கி "ஒரு எழுத்தாளரின் நாட்குறிப்பு' தமிழில் : சா.தேவதாஸ் | கோணங்கி உரை


Template:Stub page