கோட்டூர் சௌந்தரராஜ பிள்ளை

From Tamil Wiki
Revision as of 22:54, 4 March 2022 by Subhasrees (talk | contribs) (கோட்டூர் சௌந்தரராஜ பிள்ளை - முதல் வரைவு)

கோட்டூர் சௌந்தரராஜ பிள்ளை (1865 -ஆகஸ்ட் 23, 1952) ஒரு புகழ்பெற்ற நாதஸ்வரக் கலைஞர், பல இசைக் கலைஞர்களை உருவாக்கிய ஆசிரியர்.

இளமை, கல்வி

மன்னார்குடியைச் சேர்ந்த கோட்டூர் ஸ்வாமிநாத பிள்ளை என்ற நாதஸ்வரக் கலைஞர் கோட்டூர் கொழுந்தீஸ்வரர் ஆலய சேவைக்காக கோட்டூரில் குடியேறினார். ஸ்வாமிநாத பிள்ளையின் மகனாக 1865 ஆம் ஆண்டு சௌந்தரராஜ பிள்ளை பிறந்தார்.

சௌந்தரராஜ பிள்ளையின் தங்கை மாரிமுத்தம்மாள் நாகப்பட்டணம் வேணுகோபால் பிள்ளையின் மனைவி. மற்றொரு தங்கை தேனாம்பாள் மன்னார்குடி சின்னப்பக்கிரிப் பிள்ளையின் மனைவி.

நான்கு வயதிலேயே நன்கு பாடும் திறன் கொண்டிருந்த சௌந்தரராஜ பிள்ளைக்கு தந்தையே நாதஸ்வர பாடத்தைத் துவக்கிவைத்தார். அதன் பின்னர் சௌந்தரராஜ பிள்ளையை விட நான்கே வயது மூத்தவரும் மைத்துனருமான நாகப்பட்டணம் வேணுகோபால் பிள்ளையிடம் இசைப்பயிற்சிக்கு சென்றார். இறுதிநாள் வரை வேணுகோபால் பிள்ளையிடம் அதீத மரியாதையுடனேயே சௌந்தரராஜ பிள்ளை இருந்தார். வேணுகோபால் பிள்ளையின் தந்தை ரக்தி வீராஸ்வாமி பிள்ளையிடமும் கீர்த்தனைகளும், தெலுங்கும், சமஸ்கிருதமும் பயின்றார் சௌந்தரராஜ பிள்ளை.

தனிவாழ்க்கை

நாகப்பட்டணம் வேணுகோபால் பிள்ளையின் தங்கை அஞ்சுகத்தம்மாளை மணந்தார். இவர்களின் ஒரே மகளான பட்டம்மாளை வேணுகோபால் பிள்ளையின் மூத்த மகன் குஞ்சிதபாதம் பிள்ளை மணந்தார்.

வைத்தியம், விஷங்களை இறக்கும் மாந்திரீகம் போன்றவற்றிலும் வல்லவராக இருந்தார். பலநேரங்களில் இவரது வாக்கு அப்படியே பலித்திருக்கிறது.

இசைப்பணி

கோட்டூர் கோவிலில் நாதஸ்வரம் வாசித்த சௌந்தரராஜ பிள்ளையின் திறமை மீது அவ்வூரின் பண்ணையாரான கிருஷ்ண முதலியாரும் அவரது மகன் திருவேங்கட முதலியாரும் மிகுந்த மதிப்பும் அன்பும் கொண்டிருந்தனர். பண்ணையார் குடும்பத்துப் பெண்களுக்கு வாய்ப்பாட்டு கற்றுத்தந்தார் சௌந்தரராஜ பிள்ளை.

மரபில் இருந்து தவறாத வாசிப்பும், புதுப்புது கீர்த்தனைகளை வாசிப்பதும், ராக ஆலாபனைகளும் இவருக்கு மிக விருப்பமானவை.

மாணவர்கள்

கோட்டூர் சௌந்தரராஜ பிள்ளையிடம் கற்ற மாணவர்கள் பலர். அதிலும் அனேகம் பேர் பெரும்புகழ் கொண்டவர்களாக விளங்கினார்கள். கோட்டூர் சௌந்தரராஜ பிள்ளையின் முக்கியமான மாணவர்கள்:

  • திருவலஞ்சுழி மாணிக்கம் பிள்ளை
  • ராஜாமடம் ஷண்முகசுந்தரம் பிள்ளை (பி.ஏ பட்டம் பெற்ற பின் நாதஸ்வரம் கற்றவர்)
  • திருக்களர் கோவிந்தஸ்வாமி பிள்ளை
  • கோட்டூர் குப்புஸ்வாமி பிள்ளை
  • மன்னார்குடி மாணிக்கம் பிள்ளை
  • ஆலங்குடி வேணுகோபால பிள்ளை
  • கோட்டூர் சுப்பிரமணிய பிள்ளை
  • திருக்கண்டீஸ்வரம் நடராஜ பிள்ளை
  • திருப்பனையூர் மீனாக்ஷிசுந்தரம் பிள்ளை
தவில் வாசித்த இசைக்கலைஞர்கள்

கோட்டூர் சௌந்தரராஜ பிள்ளையுடன் பலகாலம் தவில் வாசித்த கலைஞர் திருநெடுங்களம் மருதமுத்துப் பிள்ளை.

மறைவு

கோட்டூர் சௌந்தரராஜ பிள்ளை ஆகஸ்ட் 23, 1952, விநாயக சதுர்த்தி அன்று காலமானார்.

உசாத்துணை

  • மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013