being created

கோட்டாறு ஞானியார் சாகிபு அப்பா

From Tamil Wiki
Revision as of 17:13, 8 February 2022 by Thangapandiyan (talk | contribs)

கோட்டாறு ஞானியார் சாகிபு அப்பா என்கிற ஷெய்கு ஞானியார் சாகிபு ஒலியுல்லாஹ் (1747 - 1794) நாகர்கோவிலில் வாழ்ந்த இஸ்லாமிய மதஞானி. இஸ்லாமிய சூஃபி ஞானப்பாடல்களைத் தமிழில் இயற்றிவர்.

பிறப்பு, இளமை

கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாறு (தற்போதைய நாகர்கோவில்) அருகில் உள்ள இளங்கடை என்னும் சிற்றூரில் ஷெய்கு அபூபக்கர் - செய்யது மீரான் பீவி தம்பதியரின் புதல்வனாக ஞானியார் சாகிபு அப்பா (ஹிஜ்ரி 1167; கி.பி 1747) பிறந்தார். ஞானியார் அப்பாவின் இயற்பெயர் ஷெய்கு முகியிதீன் மலுக்கு முதலியார். இரண்டு மனைவிகளும், பிள்ளைகளும் இருந்தனர். சதாவதானி கா.ப. செய்கு தம்பி பாவலர் ஞானியார் அப்பாவின் பெண்வழிப் பேரர்.

இறை பணி

ஞானியார் அப்பா சமாதி தர்கா - கோட்டாறு

ஷெய்கு ஞானியார் சாகிபு ஒலியுல்லாஹ் பதினான்கு வயது வரை இறை சிந்தனையில் ஈடுபட்டிருந்தார். ஹிஜ்ரி மூன்றாம் நூற்றாண்டில் பாரசீகத்தில் தோன்றிய சூஃபி ஞானி மன்சூர் ஹல்லாஜின் சீடர்களில் ஒருவரான மவுலானா சையிது தமீம், கோட்டாறு பாவா காசிம் பள்ளிவாசலில் தங்கியிருந்துபோது ஞானியார் அப்பா சென்று ஞானநெறிகளைக் கற்று தீட்சைப் பெற்றார். பதினாறு வயது வரை தியான யோகங்களில் ஈடுபட்டு வந்தார். மன்சூர் ஹல்லாஜு ரஹ்மத்துல்லாஹி அலைஹியை ஞானகுருவாகக் கொண்டு அருள் ஞானம் பெற்றவர்.

மெய்ஞ்ஞானத் திருப்பாடற்றிரட்டு ஒலைச்சுவடி

ஞானியார் அப்பா இறை பணிகளுக்காக கமுதிக்குச் சென்றபோது முதன்முதலாக மெய்ஞ்ஞானத் திருப்பாடல்களைப் பாடத் துவங்கினார். ஞானியார் சாகிப்பிற்கு கோட்டாறு, திருவிதாங்கூர், கமுதி, பழனி, தேரூர், கன்னியாகுமரி, நாகர்கோவில், ஏர்வாடி, மேலப்பாளையம், ஆளூர், தக்கலை, திட்டுவளை, தோவாளை, திருவனந்தபுரம், பறக்கை, சுசீந்திரம் ஆகிய ஊர்களில் சீடர்கள் இருந்தனர்.

ஞானியர் மரபின் அனைத்து நிகழ்வுகளும் ஹாமீம் என்னும் முத்திரைச் சொல்லுடன் தான் ஆரம்பிக்கின்றன.

மறைவு

ஞானியார் அப்பா ஹிஜ்ரி 1209 ம் வருடம் (கி.பி. 1794 ) ஜமாத்துல் அவ்வல் மாதம் 14 வெள்ளிக்கிழமை இரவு உயிர் நீத்தார். ஞானியார் சாகிபை கோட்டாறு வில் அடக்கம் செய்து தர்கா கட்டப்பட்டது.

மெய்ஞ்ஞானத் திருப்பாடற்றிரட்டு நூல் (முதல் பிரதி)

ஞானப் பாடல்கள்

ஷெய்கு ஞானியார் சாஹிப் ஞான தோத்திரம், ஞான காரணம், ஞான தேவாரம், ஞான ஏகதேசம், ஞான ஆனந்தம், ஞான அனுபவ விளக்கம், ஞான அந்தாதி, ஞானக் கும்மி, ஞான வேதாட்சர வருக்கம், ஞானத் திருப்புகழ், ஞானத் திருநிதானம், ஞானக் குருவடி விளக்கம், ஞான அம்மானை, ஞான கீதாமிர்தம், ஞானப் பிள்ளைத்தமிழ் ஆகியவற்றைப் படைத்துள்ளார். ஞானியார் அப்பாவின் பக்திப் பாடல்கள் அனைத்தும் ”மெய்ஞ்ஞானத் திருப்பாடற்றிரட்டு” என்ற பெயரில் தொகுக்கப்பட்டு நூலாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளது. மெய்ஞ்ஞானத் திருப்பாடற்றிரட்டு பாடல்கள் விருத்தப்பா, வெண்பா, கலிப்பா, தாழிசை, சொச்சகம், பிள்ளைத்தமிழ், கும்மி, சிந்து போன்ற பா வகைகளில் பாடப்பட்டுள்ளன.

ஞானியார் அப்பா தர்கா-(ஹாமீம்புரம் )
ஞானியார் அப்பா தர்கா பள்ளி - திருநெல்வேலி, மேலப்பாளையம்.

தர்கா

ஷெய்கு ஞானியார் சாஹிப்பின் மக்பரா (சமாதி) கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாறு, தக்கலை, திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம், இராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஆகிய இடங்களில் உள்ளது. ஞானியார் அப்பா தர்கா பள்ளிகளில் ஞானியார் பாடல் பாராயணம், குரு மகான் துதி, நியம நிஷ்டையனுஷ்டானங்கள் ஆகியன தொடர்ந்து நடத்தப் பெற்று வருகின்றது.

நூல் தொகுப்பு

மெய்ஞ்ஞானத் திருப்பாடற்றிரட்டு - 1895

ஞானியார் அப்பா பற்றிய நூல்கள்

  • திருக் கோட்டாற்றுக் கலம்பகம் (கொட்டாம்பட்டி எம். கருப்பையா பாவலர்)
  • தோத்திரப்பா (நெல்லை - சாத்தான்குளம் சி.வெ. அரவமூர்த்தி உபாத்தியாயர்)
  • தியான மஞ்சரி (கமுதி கா. மீறானயினார் புலவர் )
  • திருக்கோட்டாற்றுப் பிள்ளைத்தமிழ் ( கோட்டாறு சதாவதானி கா.ப. செய்கு தம்பி பாவலர் )
  • திருக்கோட்டாற்றுப் பதிற்றுப் பத்தந்தாதி ( கா.ப. செய்கு தம்பி பாவலர் )

உசாத்துணை

தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள் - 1981 - தொகுப்பாசிரியர் மணவை முஸ்தபா

தமிழ் இசுலா, உருவாக்கமும் திருகுரான் தமிழ் வாசிப்பும் (ஆய்வியல் சிந்தனை) - 2011. உலகத் தமிழ் ஆரய்ச்சி வெளியீடு. ஆசிரியர்: ஹமீம் முஸ்தபா.

இந்து தமிழ் திசை - இறைநேசர்களின் நினைவிடங்கள்: கோட்டாறு ஞானியார் சாகிபு அப்பா



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.