being created

கு. சின்னப்ப பாரதி

From Tamil Wiki
Revision as of 21:53, 5 January 2023 by ASN (talk | contribs) (Page created; Para Added, Images Added, Inter Link Created)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
எழுத்தாளர் கு. சின்னப்ப பாரதி
கு. சின்னப்ப பாரதி (படம் நன்றி: இந்து தமிழ் திசை)
கு. சின்னப்ப பாரதி - கி. ராஜநாராயணன் (படம் நன்றி: முனைவர் மு. இளங்கோவன் தளம்)
கு. சின்னப்ப பாரதி நூல்கள்

கு. சின்னப்பபாரதி (சின்னப்பன்; கு.சி.பா.) (மே 2, 1935-ஜூன் 13, 2022) கவிஞர். எழுத்தாளர். அரசியல்வாதி. தொழிற்சங்கவாதி. இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் முழுநேர ஊழியராகப் பணியாற்றினார். இடதுசாரிக் கொள்கைகளைத் தனது படைப்புகளில் முன் வைத்தார். தனது படைப்புகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றார்.

பிறப்பு, கல்வி

கு. சின்னப்பபாரதி, நாமக்கல்லில் உள்ள பொன்னேரிப்பட்டியில் குப்பண்ணக் கவுண்டர்-பெருமாயி இணையருக்குப் பிறந்தார். உள்ளூர் திண்ணைப் பள்ளியில் ஆரம்பக் கல்வி பயின்றார். உயர்நிலைப் பள்ளிக் கல்வியை பரமத்தி வேலூரில் உள்ள கந்தசாமிக் கண்டர் உயர்நிலைப் பள்ளியில் கற்றார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இண்டர்மீடியட் படித்தார். டெல்லிப் பல்கலைக்கழகத்தில் ரஷ்ய மொழிபெயர்ப்புப் பாடப்பிரிவில் சேர்ந்தார். பெற்றோரின் வற்புறுத்தலுக்கு இணங்கி அப்படிப்பைக் கைவிட்டார்.

தனி வாழ்க்கை

கு. சின்னப்பபாரதி விவசாயத் தொழிலை மேற்கொண்டார். இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் முழுநேர ஊழியராகப் பணியாற்றினார். மனைவி செல்லம்மா. மகள்கள் பாரதி, கல்பனா.

இலக்கிய வாழ்க்கை

கு. சின்னப்பபாரதி பள்ளியில் படிக்கும்போது திராவிடக் கொள்கையால் ஈர்க்கப்பட்டார். நண்பர் மூலம் மார்க்சிய சித்தாந்த அறிமுகம் ஏற்பட்டது. பொதுவுடைமை இயக்க நூல்கள் அறிமுகமாகின. மேலைநாட்டுப் புரட்சிகளையும், மார்க்சியத்தையும் அறிந்து கொண்டார். பாரதியின் கவிதைகளும், மு.வ. வின் எழுத்துக்களும் இவரைக் கவர்ந்தன. பாரதி மீது கொண்ட பற்றால் சின்னப்ப பாரதி என்ற பெயரில் எழுதினார்.

நில உடைமை எப்போ? என்னும் தலைப்பிலான முதல் கவிதை, 1955-ல் வெளிவந்தது. கவிஞர் தமிழ் ஒளி இக்கவிதையைப் பாராட்டினார். ஜனசக்தியில் இவரது கவிதைகள் தொடர்ந்து வெளியாகின. அவை தொகுக்கப்பட்டு நில உடைமை எப்போ? என்னும் தலைப்பில் நூலாக வெளிவந்தன. முதல் சிறுகதை தெய்வமாய் நின்றான். ஒட்டர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து கிணற்றோரம் என்னும் படைப்பைத் தந்தார். தொடர்ந்து சமூக உயர்வை அடிப்படையாக வைத்துப் பல நாவல்களை எழுதினார். கொல்லிமலையில் வாழும் மக்களின் சிரமங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட புதினம் சங்கம். பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட முதல் தமிழ் புதினமாக இது கருதப்படுகிறது. இவரது சுரங்கம் என்ற நாவல் நிலக்கரிச் சுரங்கத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டதாகும்.  மேற்கு வங்காளம் அசன்சாவில் உள்ள நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களுடன் பல மாதங்கள் தங்கிகள ஆய்வு செய்து இந்நாவலை எழுதினார்.

இவரது நாவல்களில் சில சமஸ்கிருதம், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி, குஜராத்தி, வங்காளம், மராத்தி, ஆங்கிலம், பிரெஞ்சு, டேனிஷ், சிங்களம், உஷ்பேக் உள்ளிட்ட 13 மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளன.




🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.