being created
under review

கு.ப. ராஜகோபாலன்

From Tamil Wiki
Revision as of 09:40, 6 February 2022 by Ramya (talk | contribs)


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.

கு.ப. ராஜகோபாலன்

கு.ப. ராஜகோபாலன் (ஜனவரி 1902 - ஏப்ரல் 27, 1944) மணிக்கொடி படைப்பாளிகளில் சுருதி சுத்தமான சிறுகதைகளை எழுதிய தமிழ் எழுத்தாளர். “சிறுகதை ஆசான்” என்று அழைக்கப்படுகிறார். நாவல், கவிதை, வசன கவிதை, ஓரங்க நாடகம், திறனாய்வு, வாழ்க்கை வரலாறு, கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், ஓரங்க நாடகங்கள் எழுதியுள்ளார். மிகுந்த கவனத்துடன் மொழியைக் கையாண்ட படைப்பாளி. சொற்களின் தேர்வு, சொற்றொடர் அமைப்பு ஆகியவற்றில் அவருடைய அழகியலுணர்வும் கவனமும் தெரியும்.

தனி வாழ்க்கை

கு.ப.ரா என்று அறியப்பட்ட கு.ப. ராஜகோபாலன் பட்டாபிராமையர், ஜானகி அம்மாள் தம்பதிக்கு மகனாக கும்பகோணத்தில் ஜனவரி 1902ல் பிறந்தார். கு. ப. ரா. வின் தங்கை சேது அம்மாளும் அறியப்பட்ட ஒரு எழுத்தாளர். கு.ப.ரா.வுக்கு 6 வயதானபோது அவர்களது குடும்பம் திருச்சிக்குக் குடிபெயர்ந்தது. அங்குள்ள திருச்சி கொண்டையம்பேட்டைப் பள்ளியில் ஆரம்பக் கல்வியும், தேசியக் கல்லூரியில் இடைநிலை (இண்டர்மீடியட்) கல்வியும் பெற்றார். அப்போது, தந்தையார் இறந்துவிட்டார். தந்தையாரின் மறைவுக்குப் பிறகு குடும்பம் மீண்டும் கும்பகோணத்துக்கே குடிபெயர்ந்தது.

கும்பகோணம் அரசினர் கல்லூரியில் வடமொழியை சிறப்புப் பாடமாகக் கொண்டு இளங்கலைப் பட்டம் பெற்றார். இந்தக் காலகட்டத்தில் அவர் ஆங்கிலத்தில் கீட்ஸ், ஷெல்லி, ஷேக்ஸ்பியர் முதலான பெரும் கவிதைகளையும், கவிஞர்கள்களின் வடமொழியில் வால்மீகி, காளிதாசர், பவபூதி முதலியவர்களின் படைப்புகளையும், வங்காளத்தில் தாகூர், பங்கிம் சந்திரர் முதலானோரின் நூல்களையும் கற்றார். இக்கல்வியே பிற்காலத்தில் அவர் தமது ஒவ்வொரு படைப்புகளிலும் தனி முத்திரையைப் பதிப்பதற்கு அடிப்படையாக அமைந்தது எனலாம். மகாகவி ரவீந்திரநாத் தாகூர், கு.ப.ரா. படித்த கல்லூரிக்கு வருகை புரிந்தபோது அவருடைய கவிதைகள் அவருக்கு அறிமுகமானது. வங்க மொழியின் மேல் பற்று கொண்டு அதைப் பயின்றார். தனது 24ஆம் வயதில் அம்மணி அம்மாளை மணந்தார். மதுரை மாவட்டம் மேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கணக்கராகப் பணியாற்றினார். தன் 32ம் வயதில் கண்புரை நோயின் காரணமாக கண் பார்வை குன்றியதால் அப்பணியில் இருந்து விலகினார். சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் கண் பாரவை பெற்றார்.

இலக்கிய வாழ்க்கை

மணிக்கொடி, கலைமகள், சுதந்திர சங்கு, சூறாவளி, ஹனுமான், ஹிந்துஸ்தான் போன்ற இதழ்களில் அவரது படைப்புகள் வெளியாகின. கண் பார்வை மங்கிய நிலையிலேயே அவர் ’மணிக்கொடி’ போன்ற இதழ்களுக்குக் கதைகளும், கட்டுரைகளும் எழுதினார். அரசு வேலையை விட்டு சென்னைக்கு வந்து, முழுநேர எழுத்தாளராகவே, வாழ்க்கையைத் தொடர்ந்தார். எழுதுவது ஒன்றையே தொழிலாகக்கொண்டு வாழ முற்பட்டபோது, கு.ப.ரா.வின் வாழ்க்கையில் துன்பங்கள் தொடர்ந்து வந்தன.

’பாரத்வாஜன்’, வ. ராமசாமியை ஆசிரியராகக் கொண்டு 1939 - ஆம் ஆண்டு வெளிவந்த ’பாரத தேவி’ என்ற வார இதழில் துணையாசிரியராகச் சேர்ந்தார். அதில், அவரது இயற்பெயரிலும், ’கரிச்சான்’ , ’சதயம்’ என்னும் புனை பெயர்களிலும் பற்பல கதைகள் படைத்தார் . கட்டுரைகளும் எழுதினார். பின்னர் கா.சீ.வேங்கடரமணி நடத்திய ’பாரதமணி’ என்னும் இதழில் சேர்ந்து சிறிது காலம் பணியாற்றினார்.

இரண்டாம் உலகப்போர் தொடங்கியபோது, சென்னையிலிருந்து குடும்பத்துடன் புறப்பட்டு சொந்த ஊரான கும்பகோணத்துக்கே திரும்பினார். அங்கு, ’மறுமலர்ச்சி நிலையம்' என்னும் பெயரில் புத்தக நிலையம் ஒன்றைத் தொடங்கினார். வானொலியில் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். அவருடைய சிறுகதைகள் பல வானொலியில் ஒலிபரப்பாயின. அப்போது அவருடைய திறமையை வானொலி நிலையத்தார் தொடர்ந்து பயன்படுத்திக்கொள்ள விரும்பினர். ஆனால் கு.ப.ரா. வானொலியில் பணியாற்ற மறுத்துவிட்டார். இறுதிவரை எழுத்தை நம்பி வாழ்வது என்று முடிவு செய்துவிட்டதாக உறுதியாகக் கூறிவிட்டார்.

இலக்கியப் படைப்புகள்

சுதந்திர சங்கு, மணிக்கொடி, பாரத தேவி ஆகிய இதழ்களில் ஓரங்க நாடகங்களை எழுதியுள்ளார். எழுதிய 13 ஓரங்க நாடகங்களின் தொகுப்பான ’அகலியை ' அவர் மறைந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு 1964 - ஆம் வெளிவந்தது.

‘எதிர்கால உலகம் ' என்பது கு.ப.ரா.வின் சிந்தனை நூல். உலகத்தின் எதிர்காலத்தைப் பற்றிக் கனவு காணும் பெரியோர்களில் முக்கியமான ஆறு பேரைப் பற்றிச் சுருக்கமாக எழுதியுள்ளார். ஆங்கில மொழியிலிருந்து ஸ்டீவன்ஸனின் ’டாக்டர் ஜெகில் அண்ட் மிஸ்டர் ஹைட்' என்னும் நாவலை தமிழில், ‘இரட்டை மனிதன் ' என்ற தலைப்பில் கொண்டுவந்தார். ரஷ்ய டால்ஸ்டாய் மொழியிலிருந்து சிறுகதைகளையும், வங்க மொழியில் பெரும் புகழ்பெற்ற பங்கிம் சந்திரர், சரத் சந்திரர் ஆகியோரின் நாவல்களையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். சரத் சந்திர சட்டர்ஜி, சியாராம் சரண குப்தர், வி.ச.காண்டேகர், லியோ டால்ஸ்டாய், ரமேச சந்திர தத்தர் ஆகிய ஐந்து தலைசிறந்த எழுத்தாளர்களின் புகழ்பெற்ற ஆறு நாவல்களை ‘ஆறு நவயுக நாவல்கள் ' என்னும் நூலாக வெளியிட்டுள்ளார் .

சரத் சந்திர சட்டர்ஜி, சியாராம் சரண குப்தர் , வி.ச.காண்டேகர், லியோ டால்ஸ்டாய் , ரமேச சந்திர தத்தர் ஆகிய ஐந்து தலைசிறந்த எழுத்தாளர்களின் புகழ்பெற்ற ஆறு நாவல்களை 11 " ஆறு நவயுக நாவல்கள் ' என்னும் நூலாக வெளியிட்டுள்ளார் . " ஸ்ரீஅரவிந்த யோகி ', " டால்ஸ்டாய் வாழ்க்கையும் உபதேசமும்’ என்னும் வாழ்க்கை வரலாற்று நூல்கள் இரண்டு படைத்துள்ளார். தமிழிலும் ஆங்கிலத்திலும், பல கட்டுரைகளையும் மதிப்புரைகளையும் எழுதியுள்ளார். அவை இன்னும் நூல் வடிவம் பெறாதது தமிழ் இலக்கிய உலகுக்கு பெரும் இழப்பாகும் . துறையூரிலிருந்து வெளிவந்த ‘கிராம ஊழியன் ' என்ற இதழின் சிறப்பாசிரியர் பொறுப்பை 1943 ஆம் ஆண்டு ஏற்றார். கிராம ஊழியனில் ஆசிரியர் பொறுப்பை 1944 - ஆம் ஆண்டு ஏற்றபோது, " காங்க்ரின் ' என்னும் கொடிய நோய் கு.ப.ரா.வின் கால்களைத் தாக்கியது. உணர்ச்சியற்றுப் போனதால் , முழங்காலுக்குக் கீழே இரண்டு கால்களையும் உடனடியாக எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால், உடல் நலிவுற்று, 1944 - ஆண் எடு ஏப்ரல் 27 - ஆம் தேதி காலமானார் .

அவர்தம் இறுதிக் காலத்தில் ‘வேரோட்டம்' என்ற நாவல் ஒன்றை எழுதத் தொடங்கி , ஐந்து அத்தியாயங்கள் வரை எழுதினார் . ஆனால் , அந்நாவல் முடிவதற்குள் , அவரது வாழ்க்கை முடிந்துவிட்டது . அந்த முற்றுப் பெறாத நாவல் , கு.ப.ரா.வின் பெயரையும் பெருமையையும் தமிழ் நாவல் உலகில் பறைசாற்றிக்கொண்டிருக்கிறது .

பாரதியே மகாகவி

கு.ப.ரா.வும் சிட்டியும் சேர்ந்து பாரதியாரைப் பற்றி எழுதிய ‘கண்ணன் என் கவி’, தமிழ்த் திறனாய்வு வரலாற்றில் முக்கியமான ஒன்று. ’பாரதியார் மகாகவி அல்லர்' எனும் கல்கியின் கூற்றை மறுத்து , ’பாரதியே மகாகவி' என்பதை நிலைநாட்டும் முயற்சியாக இந்நூலை கு.ப.ரா.வும் சிட்டியும் இணைந்து வெளியிட்டனர்.

புனைப்பெயர்

  • பாரத்வாஜன்
  • கரிச்சான்
  • சதயம்

இலக்கிய இடம்

ஒருவகையில் புதுமைப்பித்தனுக்கு நேர் எதிரான போக்குகள் கொண்டவர். பல முக்கியமான விவாதங்கள் கு.ப.ராவுக்கும் புதுமைப்பித்தனுக்கும் இடையேதான் நடைபெற்றுள்ளன. கு.ப.ரா. மிகுந்த கவனத்துடன் மொழியைக் கையாண்ட படைப்பாளி. சொற்களின் தேர்வு, சொற்றொடர் அமைப்பு ஆகியவற்றில் அவருடைய அழகியலுணர்வும் கவனமும் தெரியும். சிறுகதையின் வடிவத்திலும் மிகுந்த நுட்பம் கொண்டிருந்தார். மணிக்கொடி படைப்பாளிகளில் சுருதி சுத்தமான சிறுகதைகளை கு.ப.ரா.வே எழுதியுள்ளார் என்று க.நா. சுப்ரமணியம், வெங்கட் சாமிநாதன் போன்ற திறனாய்வாளர்கள் சொல்கின்றனர்.

மௌனமே கலையின் வலிமை என்று நம்பியவர் கு.ப.ரா. ஏறத்தாழ அவருடைய எல்லாக் கதைகளுமே மிதத் தன்மையையும் சுருக்கத்தையும் தங்கள் ஆதார இயல்புகளாகக் கொண்டவை. மனித உறவுகளின் நுட்பமான தருணங்களை நோக்கியே கு.ப.ரா.வின் பார்வை விரிந்தது. இயல்பாகவே ஆண்பெண் உறவு பற்றி அவர் அதிகம் எழுதினார். ஃபிராய்டிய உளவியலாய்வின் தாக்கம் அவரிடம் அதிகம் இருந்தது.

சிறுகதையின் வடிவத்தில் மிகுந்த நுட்பம் கொண்டிருந்தார். பெண்களின் வலி, வேதனைகள், காமம் போன்ற நுட்பங்களை தன் எழுத்தில் மிக நேர்த்தியாக வடித்தவர்.

படைப்புகள்

நாவல்

  • வேராட்டம் (5 அத்தியாயங்கள்: முற்று பெறவில்லை)

சிறுகதைத் தொகுதி

  • ஆத்மசிந்தனை (1986)
  • ஆற்றாமை (1990)
  • கனகாம்பரம் முதலிய கதைகள் (1944)
  • காணாமலே காதல் (1943)
  • புனர்ஜன்மம் சிறுகதைகள்(1943)

கட்டுரைத்தொகுதி

  • கண்ணன் என் கவி (1937)
  • எதிர்கால உலகம் (1943)
  • ஸ்ரீஅரவிந்த யோகி (1940)
  • டால்ஸ்டாய் வாழ்க்கையும் உபதேசமும் (1985)
  • பக்தியின் சரிதை (1992)

மொழிபெயர்ப்புகள்

  • அனுராதா (சரத்சந்திரர் - புதினம்)
  • ஆறு நவயுக நாவல்கள் (புதினம்) (1940)
  • இரட்டை மனிதன் (ஆர்.எல்.ஸ்டீவன்ஸன் - புதினம்)
  • டால்ஸ்டாய் சிறுகதைகள் - I,II,III பாகங்கள்
  • துர்க்கேஸநந்தினி (பக்கிம் சந்திர சாட்டர்ஜி - புதினம்)
  • தேவி ஸௌதுராணி (பக்கிம் சந்திர சாட்டர்ஜி - புதினம்)
  • ஹரிலட்சுமி (சரத்சந்திரர் - புதினம்)
  • ஹிரண்மயி (சரத்சந்திரர் - புதினம்) (1949)

நாடகங்கள்

  • அகலியை (1967)

படைப்புத் தொகுதிகள்

  • கு.ப.ரா. கட்டுரைகள் (2012)
  • கு.ப.ரா கதைகள் (2009)
  • கு.ப.ரா சிறுகதைகள் (2014)
  • கு.ப.ரா. படைப்புகள் (நாடகங்களும் கவிதைகளும்) (2010)
  • சிறிது வெளிச்சம் (தொகுப்பில் வராத கதை, குறுநாவல்கள், கவிதைகள் (1969)

இறுதிக்காலம்

தன் 32 வயதிலிருந்தே கண்புரை நோயால் தொடர் தொல்லைகளுக்கு ஆளாகி வந்த அவர் இழைய அழுகல் நோயால் தாக்கப்பட்டு ஏப்ரல் 27, 1944ஆம் ஆண்டு இறந்தார்.

உசாத்துணைகள்



Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.