குரங்கு குசலா

From Tamil Wiki
குரங்கு குசலா
குரங்கு குசலா

குரங்கு குசலா ( 1962) ராணி வாராந்தரி இதழில் வெளிவந்த கேலிச்சித்திரம். இதில் நெட்டையான மனைவியும் குட்டையான கணவரும் இடம்பெறுவார்கள். அன்றாட வாழ்க்கையின் ஒரு தருணம் கேலியுடன் சித்தரிக்கப்பட்டிருக்கும்

வெளியீடு

1862ல் ராணி வாராந்தரி வெளிவரத்தொட்ங்கியபோதே குரங்கு குசலா கேலிச்சித்திரம் அதில் இருந்தது. பெரும்பாலும் அட்டையில் இருந்து மூன்றாவது பக்கத்தில் இது இடம்பெறும். 1990ல் இந்த கேலிப்படம் நிறுத்தப்பட்டுவிட்டது.

தினத்தந்தியில் கருத்துப்படங்கள் எனும் கேலிச்சித்திரங்களை வரைந்த வாலி என்பவர் இதை வரைந்தார்.

குணச்சித்திரங்கள்

இக்கேலிச்சித்திரத்தின் கதைநாயகி குரங்கு குசலா. குரங்கு போல முக அமைப்பு கொண்ட பெண். உயரமானவள். அவள் கணவனும் அதேபோன்ற முகம் கொண்ட குள்ளமான மனிதர். அவர்களுடைய குடும்பத்தில் நிகழும் ஒரு நிகழ்வு கேலியாகச் சித்தரிக்கப்பட்டிருக்கும். பொங்கல் தீபாவளி தேர்தல் ஆகியவற்றை ஒட்டி அந்தந்தக் கால நிகழ்வுகள் அதில் கேலிசெய்யப்படும். குசலா தன்னம்பிக்கை கொண்ட பெண்ணாகவும் அவள் கணவர் அப்பாவியாகவும் காட்டப்பட்டிருப்பார்

குரங்கு குசலா கருத்துப்படங்களில் அக்கால அரசியல் விமர்சனங்களும் இடம்பெற்றன. ஒரு கிளையில் கணவர் தொங்கிக்கொண்டிருக்க ஏணியை எடுத்துச் செல்லும் குசலா ‘சுயேச்சையாக நில்லுங்கள், கிருஷ்ணமேனன் மாதிரி’ என்று சொல்கிறார்.

செல்வாக்கு

குரங்கு குசலா எழுபது எண்பதுகளில் புகழ்பெற்ற கேலிச்சித்திரமாக இருந்தது. உயரமான மனைவியும் குள்ளமான கணவரும் என்றால் குரங்கு குசலா என கேலிசெய்யும் வழக்கம் இருந்தது. இதில் இருந்த உருவக்கேலி குறித்த விமர்சனம் எழுந்தபின் இது நிறுத்தப்பட்டது.

உசாத்துணை

http://tamilpokkisham.blogspot.com/2009/09/blog-post_20.html