குமுதம்

From Tamil Wiki
Revision as of 16:59, 8 February 2022 by Jeyamohan (talk | contribs)
குமுதம்

குமுதம் ( 1947-) தமிழில் வெளிவரும் பல்சுவை வாரஇதழ். சென்னையில் இருந்து வெளிவருகிறது. குமுதம் குழுமத்திலிருந்து குமுதம் ரிப்போட்டர், குமுதம் தீராநதி, குமுதம் சினேகிதி, குமுதம் பக்தி, குமுதம் ஜோதிடம், குமுதம் ஹெல்த் ஸ்பெஷல், மாலைமதி உட்பட மேலும் பல இதழ்கள் வெளியிடப்பட்டன.

வரலாறு

குமுதம் இதழ் 1947ஆம் ஆண்டு எஸ்.ஏ.பி.அண்ணாமலையால் டாக்டர் ஆர்.எம்.அழகப்பச் செட்டியாரை கௌரவ ஆசிரியராகக் கொண்டு தொடங்கப்பட்டது. முப்பதாண்டுகளில் இந்தியாவில் விற்கப்படும் வார இதழ்களில் மூன்றாவது இடத்தில் ( மலையாள மனோரமா, ராணி வாராந்தரிக்கு அடுத்ததாக) ஆறு லட்சம் பிரதிகள் விற்றது. எஸ்.ஏ.பி அண்ணாமலை அதன் பொறுப்பாசிரியராகவும் பி.வி.வரதராஜன் வெளியீட்டாளராகவும் திகழ்ந்தனர். குமுதம் இதழ் லிமிட்டட் கம்பெனியாக ஆனபோது நூறு சத பங்குகளும் எஸ்.ஏ.பி.அண்ணாமலை மற்றும் அவர் மனைவி கோதை ஆச்சி ஆகியோருக்கு உரிமையானதாக இருந்தது.

துணை இதழ்கள்

குமுதம் இதழின் நிர்வாகப்பொறுப்பில் இருந்து கல்கண்டு வெளிவந்தது. பின்னர் வெவ்வேறு இதழ்கள் வெளிவந்தன.

  • மாலைமதி (மாதநாவல்)
  • குமுதம் ரிப்போர்ட்டர் ( புலனாய்வு இதழ்)
  • குமுதம் சினேகிதி (பெண்கள் இதழ்)
  • குமுதம் பக்தி (ஆன்மிக இதழ்)
  • குமுதம் சோதிடம் (சோதிட இதழ்)
  • குமுதம் ஹெல்த் ( மருத்துவ இதழ்)
  • தீராநதி (இலக்கிய இதழ்)

ஆசிரியர்கள்

குமுதம் இதழின் பொறுப்பாசிரியராக இருந்தவ எஸ்.ஏ.பி.அண்ணாமலை எழுத்தாளர். அவருடன் ரா.கி.ரங்கராஜன், ஜ.ரா.சுந்தரேசன், புனிதன் ஆகியோரும் ஆசிரியர் குழுவில் உறுப்பினர்களாக இருந்தனர். குமுதம் இதழின் வெற்றிக்கு அவர்களே காரணம் என்று கூறப்படுகிறது. அவர்கள் மூவரும் வெவ்வேறு பெயர்களில் குமுதம் இதழில் எழுதினார்கள்.

இதழின் தனித்தன்மைகள்

குமுதம் இதழ் விற்பனையில் வெற்றியடைந்தமைக்கு காரணங்கள் பல சொல்லப்படுகின்றன.

  • அன்று புகழ்பெற்றிருந்த இதழ்களான கலைமகள், கல்கி, ஆனந்தவிகடன் ஆகியவை பிராமணப் பண்பாட்டை முதன்மையாக முன்வைத்தவை. வாசகர்களும் எழுதுபவர்களும் முதன்மையாக பிராமணர்கள் என்பதே காரணம். குமுதம் பிராமணர்கள் எழுதினாலும்கூட பிராமணப் பண்பாட்டுச் சாயலே இல்லாமல் நடத்தப்பட்டது. ஆகவே இந்திய சுதந்திரத்திற்கு பின் கல்வி கற்று மேலெழுந்து வந்த பிராமணரல்லாத சமூகங்களின் ஆதரவை அது பெற்றது.
  • கலைமகள், ஆனந்தவிகடன், கல்கி ஆகியவை குடும்பப் பத்திரிகை என்னும் இலக்கணத்திற்குள் நின்று பாலியல் சார்ந்த எழுத்துக்களை மட்டுப்படுத்தின. குமுதம் தொடர்ச்சியாக அன்றைய பாலியல்வெளிப்பாட்டு எல்லையை மென்மையாக மீறிக்கொண்டே இருந்தது. ஆகவே இளையவாசகர்களை ஈர்த்தது.
  • குமுதம் எதிர்வினைகள் வழியாக தன்னை உருவாக்கிக் கொண்டது. ஆகவே அது சினிமாவை மிக நெருக்கமாகவே தொடர்ந்தது. சினிமாச்செய்திகளுடன் சினிமாவை பயன்படுத்தியே மற்ற அனைத்தையும் முன்வைப்பது என்னும் பாணியை மேற்கொண்டது. (உதாரணமாக காஞ்சி சந்திரசேகர சரஸ்வதி பிடியரிசி திட்டம் ஒன்றை அறிவித்தபோது அச்செய்தியை அன்றைய நட்சத்திரமான சௌகார் ஜானகி பிடியரிசி போடும் படத்துடன் வெளியிட்டது)

குமுதம் தொடர்கதைகள்

குமுதம் கல்கிக்குப் பின் மிக வெற்றிகரமாக தொடர்கதைகளை பயன்படுத்திக்கொண்ட வார இதழ்.

  • சாண்டில்யன் குமுதத்தில் மலைவாசல் என்னும் தொடர்கதையை எழுதினார். அதன்பின் கடல்புறா,யவனராணி, ராஜமுத்திரை, ராஜதிலகம், ஜலதீபம், ராஜ பேரிகை என நீளமான தொடர்கதைகள் குமுதத்தில் வெளிவந்தன. அவை பெரிய வாசகர் எண்ணிக்கையை குமுதத்திற்கு கொண்டுவந்தன.
  • ரா.கி.ரங்கராஜன் ஹென்றி ஷாரியரின் பாப்பில்யான் நாவலை மொழியாக்கம் செய்து குமுதத்தில் பட்டாம்பூச்சி என்னும் பெயரில் வெளியிட்டார். குமுதத்தில் மிக விரும்பப்பட்ட தொடர்களில் அது ஒன்று
  • மு.கருணாநிதி குமுதம் இதழில் எழுதிய ரோமாபுரிப் பாண்டியன் குமுதத்தின் புகழ்பெற்ற தொடர்
  • சுஜாதா நைலான் கயிறு என்னும் நாவல் வழியாக குமுதத்தில் அறிமுகமானார். அனிதா இளம் மனைவி புகழ்பெற்ற முதல் தொடர்கதை. தொடர்ந்து குமுதத்தில் துப்பறியும் கதைகளை எழுதினார். அவை பெரும் வாசகர் வரவேற்பைப் பெற்றன.

குமுதம் பத்திகள்

குமுதத்தின் பத்திகள் புகழ்பெற்றவை.

குமுதம் ஆசிரியர் குழுவால் எழுதப்பட்ட பத்திகள்
  • லைட்ஸ் ஆன் - வினோத் (ரா.கி.ரங்கராஜன் எழுதிய சினிமாச்செய்திகள்)
  • அரசு பதில்கள் - எஸ்.ஏ.பி. எழுதிய கேள்விபதில்கள்
  • கிசுகிசு ( சினிமா குறித்த ரகசியச் செய்திகள்)
விருந்தினர்களால் எழுதப்பட்டவை
  • வாரியார் விருந்து
  • திரும்பிப்பார்க்கிறேன்- ஜெயகாந்தன்

விவாதங்கள்

குமுதம் இதழ் பலவகையான விவாதங்களை தொடர்ச்சியாக உருவாக்கிக் கொண்டிருந்தது. நடிகர்கள் அரசியல் வாதிகள் பற்றிய செய்திகள் சார்ந்து விவாதங்கள் உருவாயின. முதன்மையான விவாதம் சுஜாதா குமுதம் இதழில் சிப்பாய் கலவரத்தின் பின்னணியில் ‘கறுப்பு சிவப்பு வெளுப்பு’ என்னும் தலைப்பில் ஒரு தொடர்கதையை எழுதியபோது அதில் நாடார் சாதியினர் பற்றி இழிவாக எழுதப்பட்டுள்ளது என்று கருதிய சாதிச்சங்கங்களின் வன்முறை நிறைந்த எதிர்ப்பு. சுஜாதா மன்னிப்பு கோரினார். தொடர் நிறுத்தப்பட்டது சாதி குறிப்புகள் இல்லாமல் ‘ரத்தம் ஒரே நிறம்’ என்ற பெயரில் அந்நாவலை எழுதினார்.

உரிமைப்பூசல்

குமுதம் எஸ்.ஏ.பி அண்ணாமலையின் முதலீட்டில் தொடங்கப்பட்டது. அது லிமிட்டட் கம்பெனியாக நிர்வாக இயக்குனர் எஸ்.ஏ.பி. அண்ணாமலையும், அவரது மனைவி கோதை ஆச்சியும்  100 சதவீத பங்குதாரர்களாக இருந்தனர். இந்த நிறுவனத்தின் வெளியீட்டாளர் மற்றும் செயலாளராக பி.வி. பார்த்தசாரதி இருந்தார்.   1994 ஆம் ஆண்டு எஸ்.ஏ.பி. அண்ணாமலை காலமானபோது தந்தையின் பங்குகள் அவர் மகன் ஜவகர் பழனியப்பன் பெயருக்குச் சென்றன. கோதை ஆச்சி நிர்வாக இயக்குனரானார். பிவி. பார்த்தசாரதியும் அவரது மகன் பி.வரதராஜனும் நிறுவனத்தின் அன்றாடப் பணிகளை கவனித்து வந்தனர். அவர்களுக்கு 33.39 சதவீத பங்குகள் கொடுக்கப்பட்டன. எஸ்.ஏ.பி. அண்ணாமலையும், பார்த்தசாரதியும் நெருங்கிய நண்பர்கள். குமுதம் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு இருவரும் இணைந்து பாடுபட்டனர். அந்த தொடர்பினால்காரணமாகவே 33.9 சதவீத பங்குகள் பார்த்தசாரதி குடும்பத்துக்கு தரப்பட்டன. ஜவகர் பழனியப்பன் அமெரிக்காவில் மருத்துவர். ஆகவே 2008 ஆம் ஆண்டு நிர்வாக இயக்குனர் பொறுப்பை பார்த்தசாரதியின் மகன் பி. வரதராஜனிடம் ஒப்படைத்தார்

2010 ல் ஜவஹர் பழனியப்பன் பி.வரதராஜன் குமுதம் நிறுவன நிதி மற்றும் பங்குகளில் மோசடி செய்து நிறுவனத்தைக் கைப்பற்றிக்கொண்டதாக காவல் துறையில் புகார் கொடுத்தார். அமெரிக்க பிரஜையான ஜவகர் பழனியப்பன் குமுதம் பங்குகளை வைத்திருக்க முடியாது என பி.வரதராஜன் வாதாடினார். வழக்கு பல படிகளாக நீண்டு இறுதியாக 2020 ஜூன் மாதம் ஜவகர் பழனியப்பனுக்கே குமுதம் நிர்வாகம் சொந்தம் என்று தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது.

உசாத்துணை

https://www.kumudam.com/

தி ஹிந்து செய்தி குமுதம் தீர்ப்பு