குடுகுடுப்பை அடித்தல்

From Tamil Wiki
Revision as of 17:31, 16 September 2022 by Navingssv (talk | contribs) (Created page with "குடுகுடுப்பை அடித்தல் குடுகுடுப்பை நாயக்கரின் குலத்தொழில். நடு சாமத்தில் குடுகுடுப்பை அடித்துக் குறிச்சொல்வர். ஒவ்வொரு ஆண்டும் அறுவடை மாதங்களான தை, மாசி, பங்குனி மாதங்களில்...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

குடுகுடுப்பை அடித்தல் குடுகுடுப்பை நாயக்கரின் குலத்தொழில். நடு சாமத்தில் குடுகுடுப்பை அடித்துக் குறிச்சொல்வர். ஒவ்வொரு ஆண்டும் அறுவடை மாதங்களான தை, மாசி, பங்குனி மாதங்களில் இரவில் குடுகுடுப்பை அடித்து குறிச் சொல்வது, பகலில் வந்து நெல் யாசகம் பெறுவது வழக்கம்.

தொழில் முறை

குடுகுடுப்பை நாயக்கர் சமூகத்தை சேர்ந்த சாமக் கோடாங்கிகள் நடு இரவில் குடுகுடுப்பை அடித்துக் குறிச் சொல்வதை தொழிலாகக் கொண்டவர்கள். ஒவ்வொரு குடும்பமும் தங்களின் உரிமையுள்ள கிராமத்தில் கூடாரம் அமைத்து பணியை மேற் கொள்வர். இந்த உரிமைக் கிராமங்கள் மரபு வழியாக வருவது. சில குடும்பங்களுக்கு 50 - 60 கிராமங்களும், சிலருக்கு 15 - 20 கிராமங்களும் இருக்கும். வாரிசு இல்லாத குடும்பங்களில் உறவினர்களுக்கு உரிமையை எழுதி வைப்பர். காசில்லாத சூழ்நிலையில் உரிமைக் கிராமங்களை மற்றவருக்கு எழுதி வைப்பதோ, அடமானம் வைப்பதோ செய்வர். அவ்வாறு அடமானம் வைக்கும் போது வாங்கும் நபரை உரிமைக் கிராமத்திற்கு அழைத்துச் சென்று இனிமேல் இவர் தான் குடுகுடுப்பை அடிப்பார் என அறிமுகம் செய்வர்.

குடுகுடுப்பை அடிக்க இரவில் சகுனம் கிடைக்கும் வரை காத்திருப்பர். நல்ல சகுனம் கிடைத்தால் மட்டுமே கிளம்புவர். முதலில் சுடுகாட்டிற்குச் சென்று நடு இரவு பன்னிரெண்டு மணியளவில் ஜக்கம்மாவையும், பிற தெய்வங்களையும் அழைத்து அருள் பெறுவர். அருள் கிடைத்ததும் கிராமத்தின் எல்லையில் நின்று குடுகுடுப்பை அடித்து தன் வருகையை தெரிவிப்பார். பொதுவாக ஒரு ஆண் மட்டுமே குறிச் சொல்லச் செல்வார். இரவு 12:30, 1 மணி வாக்கில் குறி சொல்லும் நபர் ஒவ்வொரு வீடாகச் சென்று குடுகுடுப்பை அடித்துக் குறி சொல்வார். அதிகாலை மூன்று மணியோடு குறி சொல்வதை நிறுத்திக் கொள்வார். அதற்கு மேல் சொல்லும் குறி பலிக்காது என்ற நம்பிக்கையும் இவர்களிடத்தில் உள்ளது.