கி. ராஜநாராயணன்

From Tamil Wiki
Revision as of 00:23, 1 May 2022 by Navingssv (talk | contribs)
Ki.Ra2.jpg

கி. ராஜநாராயணன் (16 செப்டம்பர் 1922 - 17 மே 2021), நவீன தமிழிலக்கியத்தின் முதன்மைப் படைப்பாளிகளுள் ஒருவர். கரிசல் நிலத்தை தன் இலக்கியத்தில் எழுதியவர். கரிசல் மண் சார்ந்த நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், அனுபவ கட்டுரைகள் எழுதியவர். ”கரிசல் வட்டார அகராதி” என்ற வட்டார தமிழ் அகராதி உருவாக்கியவர். ”கதைச்சொல்லி” என இலக்கிய வட்டாரத்தில் அழைக்கப்படுபவர்.

பிறப்பு, கல்வி

கணபதி அம்மாள் - கி. ராஜநாராயணன்

கி.ரா என்றழைக்கப்படும் கி. ராஜநாராயணனின் இயற்பெயர் ராயங்குல ஸ்ரீ கிருஷ்ண ராஜ நாராயணப் பெருமாள் ராமனுஜ நாயக்கர். கி. ராஜநாராயணன் செப்டம்பர் 16 1922 அன்று ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டம் (தற்போது தூத்துக்குடி மாவட்டம்) கோவில்பட்டி அருகில் உள்ள இடைசேவல் என்னும் கிராமத்தில் ஸ்ரீ கிருஷ்ண ராமானுஜம், லட்சுமி அம்மாள் தம்பதிக்கு ஐந்தாவது மகனாகப் பிறந்தார். ஏழாம் வகுப்பு வரை படித்த கி.ரா. பின் விவசாயம் செய்தார். இயல்பில் விவசாயி ஆக இருந்த கி.ரா தன் பள்ளிக் கல்வியைப் பற்றிச் சொல்லும் போது, “நான் மழைக்குத் தான் பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்கியவன். பள்ளியைப் பார்க்காமல் மழையைப் பார்த்துக் கொண்டு நின்றுவிட்டேன்” என்கிறார்.

தனி வாழ்க்கை

Ki.Ra3.jpg

கி. ராஜநாராயணன் கணபதி அம்மாளை செப்டம்பர் 6 1954 அன்று திருமணம் செய்துக் கொண்டார். கி.ரா கணபதி அம்மாள் தம்பதியருக்கு திவாகரன், பிரபாகரன் இரண்டு மகன்கள். மருமகள்கள் முறையே விஜயலட்சுமி, நாச்சியார். கி. ரா 1989 இல் பாண்டிசேரி வந்த போது அங்கே பாண்டிசேரி பல்கலைக்கழகத்தின் சிறப்பு பேராசிரியராகப் பணியாற்றினார். ஓய்விற்கு பின் மனைவி, மகன்களுடன் பாண்டிசேரியில் வசித்தார். அங்கே கணபதி அம்மாள் 2019 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.

இலக்கிய வாழ்க்கை

Kirajanarayanan.jpg

கி.ரா எழுதி முதல் சிறுகதை “சொந்த சீப்பு”. 1958 ஆம் ஆண்டு அவர் சரஸ்வதி இதழில் எழுதிய “மாயமான்” சிறுகதை பெரும் கவனம் பெற்றது. அதன் பின் இவரது “கதவு” சிறுகதையும் பெரும் வாசகர் கவனம் பெற்றது. அக்கதையைப் பாராட்டி சுந்தர ராமசாமி, அக்கதை ஆண்டன் செகாவ் பாணியில் இருப்பதாகக் கடிதம் எழுதினார். கி.ராவின் கதையுலகம் கரிசல் வட்டாரத்து மக்களின் நம்பிக்கைகளையும், ஏமாற்றங்களையும், வாழ்க்கைப்பாடுகளையும் பற்றி பேசுபவை. கரிசல் மண்னையும், அதன் மனிதர்களையும் பற்றி எழுதிய கி.ரா , கதைகள், நாவல்,  குறுநாவல், கட்டுரை என விரிவான தளத்தில் இயங்கினார்.  கரிசல் வட்டாரத்தில் சிறப்பாக வழங்கும் தமிழ்ச் சொற்களுக்கான கரிசல் வட்டார வழக்கு அகராதியை உருவாக்கினார். நாட்டுப்புற இலக்கியங்களைத் தேடி, ஆராய்ந்து ஒரு தொகுப்பாக வெளியிட்டார். ”நாட்டுப்புறக் கதைக் களஞ்சியம்” என்ற தலைப்பில் நூலாக அன்னம் வெளியீட்டில் வந்தது.

இலக்கிய இடம்

Kirajanarayanan1.jpg

கி. ராஜநாராயணன் தன் கதைகளில் யதார்த்தவாத அழகியலில் நாட்டார் கூறுகளை சேர்த்து எழுதியவர். கி. ராஜநாராயணன் பற்றி எழுத்தாளர் ஜெயமோகன் தன் இலக்கிய முன்னோடிகள் நூலில் இனக்குழு அழகியலின் முன்னோடி எனக் குறிப்பிடுகிறார். தெலுங்கு நாயக்கர்களின் சமூக வரலாற்று, அன்றாட வாழ்க்கை பின்புலம் கி.ராவின் ஆக்கங்களில் தீவிரமாக வெளிப்படுவதை நாம் காணலாம்.

கி. ரா வை பற்றி ஜெயமோகன், “நாட்டுப்புற வாய்மொழிக் கதைசொல்லிகளின் வம்சத்தை சேர்ந்தவர் தான் கி. ராஜநாராயணன். அவரது மொழியும் கூறுமுறையும் அந்த அழகியல்புகளை கொண்டிருக்கின்றன.” என்கிறார். மேலும், “கி. ரா வின் கதைக்கருக்கள் பல தெலுங்கு நாயக்கர் சமூகத்தின் தொன்மங்களில் இருந்து உருவானவை. ஆனால் தன் நாற்பது வயதுக்கு மேல் மார்க்ஸிய அரசியலில் ஆர்வம் கொண்ட பிறகு தான் எழுத ஆரம்பித்தார். அதாவது அதுவரை இனக்குழு மனநிலை அவரில் நேரியக்கமாகவே இருந்தது. மார்க்ஸிய அரசியல் கருத்துகளும் சமூக ஆய்வுக் கோட்பாடுகளுமே எதிரியக்கமாக அமைந்தன. இவை இரண்டும் உருவாக்கும் முரணியக்கமே அவரது இலக்கியம். தன் கதைகள் முழுக்க கி. ராஜநாராயணன் மார்க்ஸிய அழகியலைக் கரிசல் படுத்த முயன்றார்.” என்கிறார்.

கி. ராவின் நாவல்களை முன்வைத்து எஸ். ராமகிருஷ்ணன், “வாய்மொழி வரலாற்றைப் பொது வரலாறு ஒருபோதும் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால், அதை மாற்றித் தனது படைப்புகளின் வழியே வாய்மொழி வரலாற்றின் உண்மைகளை வரலாற்றின் சாட்சியங்களாக மாற்றினார். கி.ரா. ‘கோபல்ல கிராமம்’, ‘கோபல்லபுரத்து மக்கள்’ இரண்டு படைப்புகளும் இதற்கான சிறந்த உதாரணங்கள்” என்கிறார்.

மரணம்

கி. ராஜநாராயணன் தனது 99 வயதில் பாண்டிசேரியில் இயற்கை எய்தினார். கி.ரா வின் உடல் அவரது சொந்த ஊரான இடைசெவலில் அரசு மரியாதியுடன் அடக்கம் செய்யப்பட்டது.

விருதுகள்

  • தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சி மன்றம் விருது (1971)
  • சாகித்ய அகாடமி விருது (1991)
  • இலக்கிய சிந்தனை விருது (1979)
  • தமிழக அரசின் 2021ம் ஆண்டுக்கான உ.வே.சா விருது
  • கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2016ம் ஆண்டுக்கான தமிழ் இலக்கியச் சாதனை விருது
  • பேரா. சுந்தரனார் விருது
  • மா. சிதம்பரம் விருது (2008)

நூல்கள்

அகராதி
  • கரிசல் வட்டார வழக்கு அகராதி
நாவல்கள்
  • கோபல்லபுரத்து கிராமம்
  • கோபல்லபுரத்து மக்கள் (1991, சாகித்திய அகாடமி விருது வென்றது)
  • அந்தமான் நாயக்கர்
குறுநாவல்கள்
  • கிடை
  • பிஞ்சுகள்
சிறுகதை தொகுதிகள்
  • கன்னிமை
  • மின்னல்
  • கோமதி
  • நிலை நிறுத்தல்
  • கதவு(1965)
  • பேதை
  • ஜீவன்
  • நெருப்பு
  • விளைவு
  • பாரதமாதா
  • கண்ணீர்
  • வேட்டி
  • மாயமான்
  • மிச்சக் கதைகள் (2021)
கட்டுரைகள்
  • வயது வந்தவர்களுக்கு மட்டும்
  • காதில் விழுந்த கதைகள்
  • ருஷ்ய மண்ணின் நிறம் என்ன?
  • புதுமைப்பித்தன்
  • மாமலை ஜீவா
  • இசை மகா சமுத்திரம்
  • அழிந்து போன நந்தவனங்கள்
  • கரிசல் காட்டுக் கடுதாசி
  • மாந்தருள் ஒரு அன்னப்பறவை
  • கிராமிய விளையாட்டுகள்
  • புதுவை வட்டார நாட்டுப்புறக்கதைகள்
அனுபவக் கட்டுரை
  • கரிசல்கதைகள்
  • கி.ரா- பக்கங்கள்
  • கிராமியக் கதைகள்
  • குழந்தைப் பருவக் கதைகள்
  • கொத்தை பருத்தி
  • பெண்கதைகள்
  • பெண்மணம்
  • கதை சொல்லி(2017)
தொகுதி
  • நாட்டுப்புறக் கதைக் களஞ்சியம்
திரைப்படமாக்கப்பட்ட கதைகள்
  • ஒருத்தி (கிடை என்ற கதையினை அடிப்படையாகக் கொண்டு அம்சன் குமார் இயக்கிய திரைப்படம்)
  • கரண்டு (கரண்டு என்ற கதையினை அடிப்படையாகக் கொண்டு ஹரிகரன் இயக்கிய இந்தி திரைப்படம்)

வெளி இணைப்புகள்