கிறித்தவக் கீர்த்தனம்

From Tamil Wiki
Revision as of 11:07, 26 April 2024 by ASN (talk | contribs)
கிறித்தவக் கீர்த்தனம், ஞா. தேவநேயப்பாவாணர்
கிறித்தவக் கீர்த்தனம், பதிப்பாசிரியர்: செ. திவான்

கிறித்தவக் கீர்த்தனம் (1981) ஞா. தேவநேயப் பாவாணர் இயற்றிய கிறித்தவ இசைப்பாடல்கள் அடங்கிய நூல். இதனை வீ. ஞானசிகாமணி, 1981-ல் பதிப்பித்தார்.

பதிப்பு, வெளியீடு

கிறித்தவக் கீர்த்தனம் நூலை, பாவாணரின் மறைவுக்குப் பின் பேராசிரியர், டாக்டர் வீ. ஞானசிகாமணி, ஏப்ரல் 1981-ல், வேதாகம மாணவர் பதிப்பகம் மூலம் பதிப்பித்தார். இந்நூலில் புதிய பதிப்பை, செ. திவான், வள்ளல் வைகோ நூலகம் மூலம், ஜனவரி 2010-ல் பதிப்பித்தார்.

நூல் அமைப்பு

கிறித்தவக் கீர்த்தனம் நூலில், கடவுள் வாழ்த்து நீங்கலாக 51 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. கடவுள் வாழ்த்து தொடங்கி ஆட்டுக்குட்டியானவரின் திருமணம் வரை 51 தலைப்புகளில் செய்திகள் கூறப்பட்டுள்ளன. அவை,

  • காப்பு
  • கடவுட்பரவல்
  • அவையடக்கம்
  • உலகநேசர்க் குரைப்பது
  • திக்கற்ற பாவிக்குத் தெரிவிப்பது
  • புறமதத்தார்க்குப் புகல்வது
  • குமரற் பரவல்
  • அன்புறு பதிகம்
  • குமரவணக்கம்
  • கிறித்துவின் பிறப்பு
  • காபிரியேல் மரியாளை வாழ்த்தல்
  • ஏசுவின் ஏழைக்கோலம்
  • எட்டாம் நாள் விருத்தசேதனம்
  • தேவதூதன் யோசேப்புக்குச் சொல்வது
  • இயேசுவின் இளமை
  • திருமுழுக்கு
  • ஏசு சாத்தானால் சோதிக்கப்பட்டது
  • கானாவூர்க் கலியாணம்
  • மலைப் பிரசங்கம்
  • பரமண்டல செபம்
  • கவலைப்படாமை
  • நூற்றுக்கதிபதியின் வேலைக்காரனைக் குணமாக்கினது
  • விதைக்கிறவன் உவமை
  • காற்றையுங் கடலையு மதட்டினது
  • ஐந்தப்பங்கொண்டு ஐயாயிரவருக்கு உணவளித்தது
  • பிறவிக்குருடனுக்குப் பார்வையளித்தது
  • மருரூபமானது
  • பவனி
  • தலைவி தோழிக்குச் சொல்லியது
  • அத்திமரத்தைச் சபித்தது
  • கிறித்துவின் பாடுகள்
  • சிலுவைச் சிந்து
  • யூதாசு காட்டிக்கொடுத்தது, காய்பாவின் விசாரணை, பேதுரு மறுதலித்தது
  • பேதுரு மனங்கசந் தழுதது
  • பொந்தியுப்பிலாத்தின் விசாரணை ஏசுவின் மரணாக்கினை
  • ஏசுவானவர் சிலுவையைச் சுமந்தேகினது
  • ஏசுவைச் சிலுவையி லறைந்தது
  • வலதுபாரிசத்துக் கள்வன் வேண்டுதல்
  • சிலுவையின் ஏழு வசனங்கள்
  • மாதர் புலம்பல்
  • சிலுவைத் தியானம்
  • சுவிசேடகன் கிறித்தியானுக்குச் சிலுவையைக் காட்டிச் சொல்வது
  • உயிர்த்தெழுதல்
  • பரமேறுதல்
  • கிறித்து பிதாவின் வலப்பாரிசத்திலிருந்து பாவிகளுக்காகப் பரிந்து பேசுதல்
  • மெய்த்தெய்வம்
  • நெஞ்சோடு கூறல்
  • திருச்சபைக்கு எச்சரிப்பு
  • கிறித்துவை வேண்டுதல்
  • கிறித்துவின் இரண்டாம் வருகை
  • நடுத்தீர்ப்பு
  • ஆட்டுக்குட்டியானவரின் கலியாணம்

உள்ளடக்கம்

கிறித்தவக் கீர்த்தனம் நூலில், இயேசு கிறிஸ்துவின் பிறப்பு, வளர்ப்பு தொடங்கி அவரது இறுதி நாட்கள் வரையிலான செய்திகள் கூறப்பட்டுள்ளன. சிலுவைப்பாடுகள் நூலின் பெரும் பகுதியாக அமைந்துள்ளன. தொடர்ந்து திருச்சபைக்கு எச்சரிக்கை, கிறித்துவின் இரண்டாம் வருகை, நடுத்தீர்ப்பு, கிறித்து பெருமான் திருமணவாட்டியாம் திருச்சபையில் மேன்மை பெறுதலோடு நூல் நிறைவடைகிறது.

தியாகராஜ சுவாமிகளின் மெட்டுக்களை அடிப்படையாகக் கொண்ட பாடல்கள், தேவார, திருவாசகத்தை அடிப்படையாகக் கொண்ட பாடல்கள், தெம்மாங்கு, சிந்து போன்ற வகைகளில் அமைந்துள்ள பாடல்கள் மெட்டுக்கள், நாடக மெட்டுக்கள் என பல்வகைப் பாடல்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

பாடல் நடை

குமரற் பரவல்

பாவிகளை மீட்டருளப் பாரேழை யாகிச்
சேவடியுஞ் சிவந்துளையச் சேணடந்து நாளும்
ஓவறஊ ழியஞ்செய்த உன்னதனாம் ஏசு
தேவகன்சீர் கேளாத செவியென்ன செவியே
திறமிருந்துங் கேளாதார் செவியென்ன செவியே.

சிரந்தானுஞ் சாய்க்கவிடஞ் சிறிதுமின்றி யெங்குங்
கரந்தாள்மெய் கண்ணுயிர்வாய் கருதியவர்க்கீந்து
பரந்தேதன் பகைவர்வரப் பருவம்வரு முன்னே
கரந்தானைக் காணாத கண்ணென்ன கண்ணே
கண்விழித்துக் காண்பார்தங் கண்ணென்ன கண்ணே.

மடந்தீரப் பலவுரைத்து மாநிலத்திற் சுற்றிப்
படர்ந்தாடும் படவரவு பாதாளஞ் சாவு
கடந்தானைப் பன்னிருவர் கண்டஞ்ச நீர்மேல்
நடந்தானை யேத்தாத நாவென்ன நாவே
நசரேய நமவென்னா நாவென்ன நாவே.

விண்ணொளியும் விரிநீரும் விரைந்தபெருங் காற்றும்
மண்ணுயிரு மிருடீர மலருமிரு சுடரும்
தண்ணளியுந் தானாகித் தனிநின்ற நிலையைக்
கண்ணியதுங் குவியாத கையென்ன கையே
கைவீசிச் செல்வார்தங் கையென்ன கையே.

பண்ணியமைந் தால்வனத்திற் பகருமையா யிரவர்
உண்ணியநல் விருந்தளித்த உம்பர்பெருங் கோனை
நண்ணியெனை மீட்டருளும் நாதனைநள் ளிரவும்
எண்ணியெண்ணி யுருகாத நெஞ்சென்ன நெஞ்சே
இடம்பரந்து வல்லென்ற நெஞ்சென்ன நெஞ்சே.

விதைக்கிறவன் உவமை

(நொண்டிச்சிந்து)

கேளீர் உவமை யொன்று - முடியக்
கிளக்கும் வரையும் உள்ளக் கிளர்ச்சியுடன்
விதைக்கும்படி யுழவன் - ஒருவன்
விதைக ளெடுத்துக்கொண்டு விரைந்து சென்றான்

விதைக்கும் பொழுது சில - விதைகள்
விழுந்தன புறமான வழியருகே
பறவை பலவந்தே - அவற்றைப்
பட்சித்தன முழுவதும் நட்டமாகவே

கற்பாறை நிலத்து - விதைகள்
கடிதில் முளைத்தன மண்காணாமல்
வெயிலேறின போதோ - அவைகள்
வெந்து கருகினவே வேரின்றி

முள்ளா ரிடம்விழுந்த - விதையும்
முளைக்கமுள் வளர்ந்ததை நெருக்கினதே
பண்ணார் நன்னிலத்து - விதைகள்
பத்தும்நூறு மாகப்பெரும் பலன்தந்தன

விதைப்போன் மனுடமகன் - அந்த
விதைகளும் விண்ணரசின் வசனங்களே
நிலமோ மனிதர்மனம் - அதுவும்
நிகழ்தரும் நால்வகை நிலையறிவீர்

மதிப்பீடு

கிறித்தவக் கீர்த்தனம், ஞா. தேவநேயப்பாவாணரால் இயேசுவின் மீதான பக்தி மேலீட்டில் இயற்றப்பட்ட நூல். பாடல்கள் அனைத்திற்கும் ராகம், தாளம், மெட்டு போன்றவை தரப்பட்டுள்ளன. பாடல்களுக்குப் பொருத்தமான கர்நாடக இசைவழியான பண்கள் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. உரையிடப்பட்ட பாட்டுடைச் செய்யுள் நூலாகவும், குறிப்பிடத்தகுந்த கிறிஸ்தவக் கீர்த்தனை நூல்களில் ஒன்றாகவும் கிறித்தவக் கீர்த்தனம் நூல் மதிப்பிடப்படுகிறது.

உசாத்துணை