under review

காளிதாஸ் (திரைப்படம்)

From Tamil Wiki
Revision as of 20:11, 12 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected error in line feed character)
தமிழின் முதல் பேசும்படம் காளிதாஸ் - விளம்பரம்
காளிதாஸ்

காளிதாஸ் (திரைப்படம்) (அக்டோபர் 31, 1931) தமிழின் முதல் பேசும்படம். ஐம்பது தமிழ் மற்றும் தெலுங்குப் பாடல்களுடன் சென்னை கினிமா சென்டிரல் திரையரங்கில் திரையிடப்பட்டது.

வரலாறு

இந்தியாவின் முதல் பேசும் படமான 'ஆலம் ஆரா'-வை தயாரித்த சினிமாக் கலைஞரான அர்தேஷிர் இரானி தமிழின் முதல் பேசும்படமான 'காளிதாஸ்' படத்தைத் தயாரித்தார். ‘ஆலம் ஆரா’ எடுக்கப்பட்ட அதே செட்டில் காளிதாஸ் திரைப்படமும் எடுக்கப்பட்டது. மும்பையிலிருந்து படப்பெட்டி கிளம்பி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்து வால்டாக்ஸ் சாலை வழியாக கினிமா சென்ட்ரல் திரையரங்கு வரை வந்தது.

ஆயிரக் கணக்கான மக்கள் நகரின் மத்திய ரயில் நிலையத்தில் கூடி, வால் டேக்ஸ் சாலையில் ரீல் பெட்டியைப் பின்தொடர்ந்து, ரோஜா இதழ்களை எறிந்து, தேங்காய்களை உடைத்து, சூடம் ஏற்றி வரவேற்றனர். திரைப்படம் பார்க்க மெட்ராஸில் இருந்த பாதிக்கும் மேற்பட்ட மக்கள் தியேட்டர்களுக்கு வெளியே ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் நின்றனர். இத்திரைப்படத்தின் முதல் காட்சி சென்னை ‘கினிமா சென்டிரல்’ (பின்னாளில் முருகன் தியேட்டர் என்று அழைக்கப்பட்டது) எனும் திரையரங்கில் அக்டோபர் 31, 1931-ல் திரையிடப்பட்டது.

சுதேசமித்ரன் விளம்பரம் - காளிதாஸ்

தொழில்நுட்பம்

காளிதாஸ் படத்தின் நீளம் ஆறாயிரம் அடி. திரைப்படம் 'விடா போன்' முறையில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. இம்முறையில் முதலில் இசை மற்றும் மற்ற ஒலிகள் ஒரு பெரிய தட்டில் ஒலிப்பதிவு செய்யப்படும். பின்னர் காட்சிகள் படமாக்கப் படும்போது உரையாடல்களுடன் இந்த தட்டில் பதியப்பட்டவையும் ஒலிக்கச் செய்யப் பட்டு இவை ஒரு மைக்ரோபோன் உதவியுடன் மறுபதிவு செய்யப்பட்டு திரையிடப்படும்.

கதை முடிச்சு

காளியின் மீதான பக்தியின் பயனால் அறிஞனாக உயர்ந்தவனது புராணவகைக் கதை ‘காளிதாஸ்’.

படக்குழு

காளிதாஸ் திரைப்படத்தை எச்.எம். ரெட்டி இயக்கினார். இந்தப் படத்தின் பாடல்களை மதுரகவி பாஸ்கரதாஸ்‌ எழுதினார்.

கதாப்பாத்திரங்கள்
  • பி.ஜி. வெங்கடேசன் - காளிதாஸ்
  • டி.பி.ராஜலட்சுமி - இளவரசி வித்யாதரி
  • எல்.வி. பிரசாத் - கோயில் பூசாரி
  • தேவாரம் ராஜாம்பாள்
  • டி.சுஷீலா தேவி
  • ஜே.சுஷீலா
  • எம்.எஸ்.சந்தானலட்சுமி

திரைப்படம்

காளிதாஸ் திரைப்படத்தில் ஐம்பது பாடல்கள் இடம்பெற்றன. ’ராட்டினமாம் காந்தி கை பாணமாம்’, ’இந்தியர்கள் நம்மவர்க்குள் ஏனோ வீண் சண்டை’ போன்ற தேசபத்திப்பாடல்கள் இடம்பெற்றன. கதாநாயகி தமிழிலும், கதாநாயகன் தெலுங்கிலும், சில துணை நடிகர்கள் இந்தியிலும் என மும்மொழிக்கலவையாக படம் அமைந்தது. எனினும் தமிழின் முதல் பேசும்படம் என்றே அழைக்கப்பட்டது. இப்படத்தில் குறவன்-குறத்தி ஆட்டம் இடம்பெற்றது.

சுதேசமித்திரன் நாளிதழில் ‘தமிழ், தெலுங்கு பாஷையில் தயாரிக்கப்பட்ட முதல் பேசும் படக்காட்சியைக் கேளுங்கள். மிஸ் டி.பி. ராஜலட்சுமி நடிக்கும் ‘காளிதாஸ்’ முழுதும் பேச்சு, பாடல், நடனம் நிறைந்த காட்சி. இம்பீரியல் மூவிடோன் கம்பெனியாரால் தயாரிக்கப்பட்டது. உயர்ந்த கீர்த்தனங்கள், தெளிவான பாடல்கள், கொரத்தி நாட்டியங்கள், பாதி கெஜட் காட்சிகளும் காண்பிக்கப்படும்’ என ‘காளிதாஸ்’ பட விளம்பரம் வெளியானது. எட்டாயிரம் ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் எழுபத்தி ஐந்தாயிரம் ரூபாய் வரை வசூல் செய்தது.

உசாத்துணை


✅Finalised Page