under review

கார் எட்டு

From Tamil Wiki
Revision as of 11:13, 24 February 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

கார் எட்டு (காரெட்டு) பதினோராம் திருமுறையில் இடம்பெறும் எட்டு வெண்பாக்களால் ஆன சிறு நூல். காருக்கும் (மழைக்கும்) சிவபெருமானுக்கும் உவமை கூறி சிவனை வாழ்த்தும் நூல். நக்கீர தேவ நாயனாரால் இயற்றப்பட்டது.

ஆசிரியர்

கார் எட்டு நக்கீரதேவ நாயனாரால் இயற்றப்பட்டது. திருமுருகாற்றுப்படை இயற்றிய நக்கீரரும் இவரும் ஒருவர் அல்லர் என்பதும், சொல் வழக்கு முதலியவற்றாலும் பொருள் அமைதியாலும், தேவார திருவாசகக் கருத்துக்களும் சொற்றொடர்களும் இடம் பெற்றிருப்பதாலும் சமயக் குரவர்க்குப் பின் பொ.யு. 9-ம் நூற்றாண்டில் வாழ்ந்த நக்கீரர் என்ற ஒருவரால் இயற்றப்பட்டிருக்க வேண்டும் என்பதும் ஆய்வாளர்களின் கருத்து.

நூல் அமைப்பு

கார் எட்டு, எட்டு வெண்பாக்களால் ஆனது. தலைவனின் பிரிவை ஆற்றாத தலைவியை தோழி, கார்காலம் வந்துவிட்டதைக் காட்டி, தலைவன் வந்து விடுவான் என்று தேற்றும் வகையில் அமைந்தது. மேகம் உவமிக்கப்படும் பொருளாகவும் சிவபெருமானின் அங்கங்கள் உவமைகளாகவும் எதிர்நிலை உவமையாகப் பாடப்பட்டது.

மேகத்தின் நிறத்திற்கு சிவபெருமானின் நீலகண்டமும்(கழுத்தும்), மின்னலுக்கு அவரது ஒளிரும் சடையும், இடியோசைக்கு இறைவனின் கழலோசையும் மற்றும் பலவும் உவமைகளாகக் கூறப்படுகின்றன.

பாடல் நடை

வானவில்லும், மின்னலும், இடியும்

மையார் மணிமிடறு
  போற்கருகி மற்றவன்தன்
கையார் சிலை விலகிக்
  காட்டிற்றே - ஐவாய்
அழலரவம் பூண்டான்
  அவிர்சடைபோல் மின்னிக்
கழலரவம் காண்புற்ற கார். 2

மேகங்கள் சிவபெருமானது திருநீலகண்டத்தைப் போன்று கருநீல நிறத்தில், அவன் கையிலேந்திய வில்­லைப்போல வானவில்லைத் தாங்கி , அவனது ஒளிநிறைந்த சடைக்கற்றைகளைப்போல மின்னி, அவன் திருவடியில் அணியும் வீரக்கழலைப்போல் முழங்கி நிற்கும் கார்காலம்.

அன்பரைக் கொண்டுவரும் கார்

செழுந்தழல் வண்ணன்
  செழுஞ்சடைபோல் மின்னி
அழுந்தி அலர்போல்
  உயர - எழுந்தெங்கும்
ஆவிசோர் நெஞ்சினரை
  அன்பளக்க உற்றதே
காவிசேர் கண்ணாய்அக் கார். 7

தீ வண்ணக் கடவுளான சிவனாரின் செழுஞ்சடைபோல் மின்னி, ஊரின் அலர் போல உயர எழுந்து, ஏங்கும் நெஞ்சையுடைய பெண்டிருக்கு அவர்களது காதலரை அளிக்க இறைவனின் கருங்குவளை மலர்க்கண்களைப்போன்ற நிறமுள்ள மேகம் வந்தது.

உசாத்துணை


✅Finalised Page