under review

கார்மேகக் கவிஞர்

From Tamil Wiki
Revision as of 20:11, 12 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected error in line feed character)

கார்மேகக் கவிஞர் (பொ.யு. 17-ஆம் நூற்றாண்டு) கார்மேகக் கவிஞர் கொங்குமண்டல சதகம் என்னும் நூலின் ஆசிரியர். சமணமதத்தைச் சேர்ந்தவர்.

வரலாற்றுச் சான்றுகள்

கார்மேகக் கவிஞரின் வரலாறு பற்றி ஆதாரபூர்வச் செய்திகள் குறைவு. கொங்குமண்டல சதகம் நூலை பதிப்பித்த தி. அ. முத்துசாமிக் கோனார் சுவடிக்குறிப்புகள் மற்றும் வாய்மொழித் தொன்மங்களின் அடிப்படையில் சுருக்கமான ஒரு வரலாற்றை அளிக்கிறார்

காலம்

கார்மேகக் கவிஞரின் காலம் பொ.யு. 17-ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் என தி. அ. முத்துசாமிக்கோனார் கருதுகிறார். இவர் நூலில் படிக்காசுத் தம்புரான், தளவாய் ராமப்பையர் ஆகியோர் பற்றிய செய்திகள் உள்ளன. அவர்கள் 1699 - 1672 காலகட்டத்தைச் சேர்ந்தவர்கள். ஆகவே இவர் காலமும் அதையொட்டியதாக இருக்கலாம் என்கிறார்.

பிறப்பு, கல்வி

கார்மேகக் கவிஞரின் இயற்பெயர் ஜினேந்திரன். கொங்கு மண்டலத்தில் குறுப்புநாட்டில் விஜயமங்கலம் என்னும் சமணத்தலத்தில் இருக்கும் சமண ஆலயமான ஸ்ரீசந்திரப்பிரப தீர்த்தங்கரர் சன்னிதிக்கு ஸ்ரீவத்ஸ கோத்திரம், ஒளபாக்ய சூத்திரம் விருத்தானிய யோகசாகை காசிபப்பிரவரமான ஜைனப்பிராமண குலத்தில் பதுமநாப அய்யர் என்பவர் பூஜை செய்துவந்தார். அவர் மனைவி ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர். அவர்களுக்கு ஜினேந்திரன் பிறந்தார்.

தந்தையிடமும் சமண ஆசிரியரிடமும் சமணநூல்களையும், சம்ஸ்கிருதம் தமிழ் மொழிகளையும் ஜினேந்திரன் கற்றார். ஒருமுறை அவையொன்றில் ஸ்ரீ பாரிச தீர்த்தங்கரர் பற்றி ஒரு வெண்பா பாடுமாறு சந்திரப்பிரபா ஆலத்தின் பூசகர் கோரியபோது

பச்சை மணிவடிவாய்ப் பாரில்விசுவ சேனனக
மெச்சு மகவாய் வெளிவந்த - உச்சிதனாம்
பாரிச நாதன் பதநினைந்தோர் வாழ்வரே
சீரிசைநூ லின்பஞ் சிறந்து

என்ற பாடலை பாடினார்.

அவருடைய சைவக் கல்வியை சோதனை செய்யும்பொருட்டு ஸ்ரீ சுப்ரமணியர் மீது ஒரு செய்யுள் கூறுமாறு வேண்டினர். அவர் உடனே

ஆறு விழியிலுறு மாறுபொறி நீர்க்கரையில்
ஆறுமக வாயொன்றா யன்னைசத்தி வீறுகொடு
ஆறுபடை வீடுற் றசுரரறத் தேவர்தொழும்
ஆறுமுக னம்மையளிப் பான்

என்னும் பாடலைப் பாடினார்.

அவருடைய கல்வித்திறனை பாராட்டிய ஊர்ச்சபை அளித்த உதவியுடன் தன் தாயின் ஊரான சேது சமஸ்தானத்தைச் சார்ந்த அநுமந்தக்குடிக்குச் சென்று அங்கே சமண நூல்களை கற்றார். பின்னர் பாண்டிநாடு, சோழநாடு, தொண்டை நாடுகளில் சைவநூல்களையும் இலக்கண நூல்களையும் கற்றார். அவருடைய சொற்பொழிவுத்திறன் காரணமாக கார்மேகக் கவிஞர் என்னும் புகழ்ப்பெயரை அடைந்தார்

தனிவாழ்க்கை

தன் இருபது வயதில் விஜயமங்கலம் வந்த கார்மேகப் புலவர் மைசூரைச் சார்ந்த கொல்லாபுரத்தில் (கோலாப்பூர்) சேர்ந்த சாந்தம் அம்மாளை மணந்து அங்கே சில ஆண்டுகள் வாழ்ந்தபின் விஜயமங்கலம் வந்து அங்கேயே வாழ்ந்தார்.

இலக்கிய வாழ்க்கை

கார்மேகக் கவிஞர் கொங்கு மண்டல சதகம் நூலை இயற்றினார். அவர் இயற்றிய சில தனிப்பாடல்களும் கிடைக்கின்றன. அவற்றை தி.அ. முத்துசாமிக் கோனார் கண்டடைந்து கொங்குமண்டல சதகம் நூலின் முன்னுரையில் அளித்துள்ளார்.

திருச்செங்கோடு வீமணக் கவிராயர் இவரைப்பற்றி இச்செய்யுளை பாடியிருக்கிறார்

தளையவிழ் தாமரை ஒளித்த பேட்டடியில் சூட்டனந்தன் தலைகீழாக
வளைய வணங்கப் புலவி நீங்குவன வயல் விஜய மங்கை ஓங்கு
இளையசந் திரப் பிரப நாயகரை ஏத்தி மனத்து இடரை யெல்லாம்
களையவரு கார்மேகக் கவியரசே வந்தனனிற் காண வென்றே

இலக்கிய இடம்

கார்மேகக் கவிராயரின் கொங்குமண்டல சதகம் அதன் சந்த நயத்துக்காகவும் கொங்குமண்டலம் பற்றிய செய்திகளுக்காகவும் குறிப்பிடத்தக்க நூலாகக் கருதப்படுகிறது.

உசாத்துணை

கொங்குமண்டல சதகம் இணையநூலகம். முத்துசாமிக்கோனார் முன்னுரை


✅Finalised Page