காருகுறிச்சி அருணாசலம்

From Tamil Wiki
Revision as of 16:56, 18 July 2022 by Ramya (talk | contribs) (Created page with "காருகுறிச்சி அருணாசலம் (1921 - 8 ஏப்ரல் 1964) நாதசுவரக் கலைஞர். == வாழ்க்கைக் குறிப்பு == திருநெல்வேலி சேரன்மகாதேவியிலிருந்து அம்பாசமுத்திரம் செல்லும் வழியில் உள்ள காருகுறிச்சியில் ப...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

காருகுறிச்சி அருணாசலம் (1921 - 8 ஏப்ரல் 1964) நாதசுவரக் கலைஞர்.

வாழ்க்கைக் குறிப்பு

திருநெல்வேலி சேரன்மகாதேவியிலிருந்து அம்பாசமுத்திரம் செல்லும் வழியில் உள்ள காருகுறிச்சியில் பலவேசம்பிள்ளைக்கு அருணாசலம் 1921-ல் பிறந்தார். தம்பிக்கோட்டைப் பண்ணையார் பாலசுப்பிரமணிய தேவர் போன்றவர்கள் இவரின் நண்பர்கள்.

இசை வாழ்க்கை

தந்தை பலவேசத்தின் தூண்டுதலால் நாதஸ்வரம் கற்றார். காருகுறிச்சி கோயிலில் நாதஸ்வரம் வாசித்துக் கொண்டிருந்தார். சில திரைப்படப் பாடல்களுக்கும் நாதஸ்வரம் வாசித்தார். இவரின் நாதஸ்வரக் கச்சேரிகளுக்கு யாழ்ப்பாணம் தட்சிணாமூர்த்தி பிள்ளையும், நீடாமங்கலம் சண்முக வடிவேலும் இணைந்து சிறப்புத் தவில் வாசித்துள்ளார்கள்.

சென்னைத் தமிழிசைச்சங்கத்தின் இசைவிழாவில் நடைபெற்ற காருகுறிச்சி அருணாசலத்தின் நாதஸ்வரக் கச்சேரியை, வானொலி நிலையத்தார் நள்ளிரவு வரை ஒலிபரப்பினர்.

அருணாசலம், சுத்துமல்லி சுப்பையா கம்பர் என்பவரிடம் நாதஸ்வரமும், களக்காடு சுப்பையா பாகவதரிடம் வாய்ப்பாட்டும் பயின்றார். காருகுறிச்சியில் உள்ள கு.எ. பண்ணையில் நாதஸ்வரம் வாசிக்க வந்த திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளையுடன் வாசிக்க வந்த “காக்காயி” நடராச சுந்தரத்திற்கு உடல்நிலை சரியில்லாமல் போக துணைக்கு யாராவது ஒரு சிறு பிள்ளை வேண்டும் என்று கேட்டபோது மணிசர்மா என்பவர் மூலம் அருணாச்சலம் அறிமுகமானார். அன்றிலிருந்து ராஜரத்தினம் பிள்ளையின் சீடரானார்.

உடன் வாசித்த தவில் கலைஞர்கள்
  • திருமுல்லைவாயில் முத்துவீர்ப்பிள்ளை
  • கும்பகோணம் தங்கவேல் பிள்ளை
  • நாச்சியார்கோவில் ராகவாப்பிள்ளை
  • வலங்கைமான் சண்முகச்சுந்தரம்பிள்ளை
  • வடபாதிமங்கலம் தட்சிணாமூர்த்தி பிள்ளை
  • பெரும்பள்ளம் வெங்கடேசபிள்ளை
  • கரந்தை சண்முகப் பிள்ளை
  • நீடாமங்கலம் சண்முகப்பிள்ளை
  • யாழ்ப்பாணம் தட்சிணாமூர்த்திபிள்ளை

திரைப்படம்

அருணாசலம் தனது நாதஸ்வர இசையைக் கிராமபோன் இசைத்தட்டுகளில் பதிவு செய்தார். சில திரைப்படங்களுக்கு அவற்றை வழங்கியுள்ளார். ’கொஞ்சும் சலங்கை’ திரைப்படத்தில் எஸ். ஜானகி பாட, அருணாசலம் நாகசுரம் வாசித்துள்ள “சிங்காரவேலனே” பாடல் பிரபலமானது.

மறைவு

காருக்குறிச்சி அருணாசலம் கோவில்பட்டியில் உள்ள தன் இல்லத்தில், ஏப்ரல் 8, 1964 அன்று காலமானார்.

உசாத்துணை

  • காருகுறிச்சி அருணாசலம்: தென்றல்: tamilonline