காமஞ்சேர் குளத்தார்
காமஞ்சேர் குளத்தார், சங்ககாலப் பெண்பாற் புலவர்களில் ஒருவர். சங்கத் தொகை நூல்களில் ஒன்றான குறுந்தொகையில் காமஞ்சேர் குளத்தார் இயற்றிய ஒருபாடல் இடம் பெற்றுள்ளது. ஆண்பாற் புலவர் பட்டியலில் இடம் பெற்றிருந்தாலும் காமஞ்சேர் குளத்தார் பெண்ணாகவே இருக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது.
ஆசிரியர் குறிப்பு
காமஞ்சேர் குளத்தார், ஆண்பாற் புலவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தாலும் இவர் இயற்றிய பாடலின் உணர்வும் பொருளும் இவர் பெண்பாற் புலவராகவே இருத்தல் வேண்டும் எனக் கருதப்படுகிறது. "நோம் என் நெஞ்சே" என்ற தொடர் மூன்று முறை தொடர்ந்து இடம்பெற்றிருப்பதைச் சுட்டிக்காட்டி, ஒரே வாக்கியத்தை உணர்வு மேலோங்க திரும்பத் திரும்பக் கூறுவது பெண்களின் இயல்பு என்பதன் அடிப்படையில் காமஞ்சேர் குளத்தார் பெண் எனக் கொள்கிறார்கள்.
பாடல்
காமஞ்சேர் குளத்தார் இயற்றிய ஒரே பாடல் குறுந்தொகை நூலின் 4-வது பாடலாக இடம்பெற்றுள்ளது.
குறுந்தொகை 4
நோம்என் நெஞ்சே நோம்என் நெஞ்சே
இமைதீய்ப் பன்ன கண்ணீர் தாங்கி
அமைதற் கமைந்தநங் காதலர்
அமைவிலர் ஆகுதல் நோம்என் நெஞ்சே.
எளிய பொருள்
வருந்து என் உள்ளமே வருந்து என் உள்ளமே, இமைகளைத் தீயச் செய்யும் கருவியைப் போன்ற வெம்மையைஉடைய எனது கண்ணீரைத் தாம் துடைத்து அளவளாவுவதற்கு அமைந்த நம் தலைவர் இப்பொழுது மனம் பொருந்தாரய்ப் பிரிந்திருத்தலால் வருந்து என் உள்ளமே.
உசாத்துணை
- மகடூ முன்னிலை, பெண்பாற் புலவர் களஞ்சியம், டாக்டர் தாயம்மாள் அறவாணன், பச்சை பசேல் பதிப்பகம்
- எட்டுத்தொகை, தமிழ் இணையக் கல்விக்கழகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
10-Jan-2023, 06:49:45 IST