under review

கானல்நதி: Difference between revisions

From Tamil Wiki
(changed template text)
(Corrected error in line feed character)
Tag: Manual revert
 
(One intermediate revision by the same user not shown)
(No difference)

Latest revision as of 20:11, 12 July 2023

To read the article in English: Kanal Nadhi (Novel). ‎

கானல்நதி

கானல்நதி (2006 ) யுவன் சந்திரசேகர் எழுதிய நாவல். இந்துஸ்தானி இசைக்கலைஞர்களின் வாழ்க்கையை சித்தரிப்பது. இந்துஸ்தானி இசையின் உலகம் இந்நாவலின் பின்னணியாக உள்ளது. இசை அக்கலைஞர்களின் வாழ்க்கையில் ஆக்கும் விசையாகவும் அழிக்கும் சக்தியாகவும் இருப்பதைக் காட்டும் நாவல்.

எழுத்து, வெளியீடு

யுவன் சந்திரசேகர் இந்நாவலை 2006-ல் எழுதினார். முதல்பதிப்பை உயிர்மை பதிப்பகம் வெளியிட்டது

கதைச்சுருக்கம்

குஜராத்தி மொழியில் எழுதப்பட்டு தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருப்பதான புனைவுப் பாவனையுடன் இந்த நாவல் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்துஸ்தானி இசையைப் பற்றி எழுதும் கேசவ் சிங் சோலாங்கி என்றஎழுத்தாளர், ஸ்ரீ குருதரண் தாஸ் என்கிற தபேலா மேதையின் வேண்டுகோளின் பேரில் அவருடைய நண்பரான ஸ்ரீ தனஞ்செய் முகர்ஜியின் வாழ்க்கையைப் பற்றி எழுதுவதே இந்நாவல். இதை எழுத அவர் தனஞ்சசெயனின் கிராமத்திற்கு சென்று அவருடைய உறவினர்களையும் நண்பர்களையும் சந்தித்து அவனைப்பற்றி அறிந்து கொள்கிறார்.

இந்நாவல் பால்யம், வாலிபம், நாட்குறிப்பு, அழைப்பு என நான்கு பகுதிகளாக பகுக்கப்பட்டிருக்கிறது. கல்கத்தாவிற்கு அருகேயுள்ள மாமுட்பூர் என்ற ஊரில் தனஞ்செய் முக்கர்ஜி பிறக்கிறான். அவனுடைய இளமைப்பருவம், இசையார்வம், இசைக்கல்வி என்று நாவல் விரிகிறது. அவன் தந்தை கிரிதர முகர்ஜி அவனுக்கு இசைக்கல்விக்காக எல்லாவற்றையும் செய்கிறார். விஷ்ணுகாந்த் சாஸ்திரி என்ற இசைமேதை தனஞ்செயனைத் தன் மாணவனாக ஏற்றுக் கொள்கிறார். இசையுடன் காதலும் தனஞ்செயனை ஆட்டுவிக்கிறது ஸரயு என்னும் பெண்ணிடம் ஈர்ப்படைகிறான்.

தனஞ்செயனை குருசரண் தாஸ் என்னும் தபலா கலைஞன் கண்டடைகிறான். அவனை புகழ்பெறச்செய்வதும் குருசரண்தான். ஸரயுவை மணக்க முடியாமல் தனஞ்சயன் குடிக்க ஆரம்பிக்கிறான். துயரை மறக்க காமத்தில் ஈடுபடுகிறான். காஞ்சனா தேவி என்ற சாரங்கிக் கலைஞருடன் உறவு ஏற்படுகிறது. குருசரண் தாஸின் வெறுப்பையும் சம்பாதிக்கிறான். தன் கணவனாலேயே பாலியல் தொழிலுக்குள் தள்ளப்பட்ட ஸரயுவைக் காண நேர்கிறது. இறுதியில் அஸ்லம் என்கிற செருப்பு தைப்பவனின் ஆதரவில் வாழும் தனஞ்செயன் சாலையோரம் அநாதையாக செத்துப் போகிறான். அவன் குடும்பம் அழிகிறது.

இலக்கிய இடம்

இசை, தாளம் என்னும் இரண்டு உருவகங்களைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நாவல் இது. தாளம் சீர் கொண்டது, ஆனால் இறுக்கமானது. இசை தன்னிச்சையான பெருக்கு கொண்டது, கட்டற்றது. தாளத்தை இழந்த இசை தறிகெட்டு அழிய இசையை இழந்த தாளம் இறுகி நிலைகொண்டு விடுகிறது. இந்துஸ்தானி இசையின் உலகை காட்டும் இந்நாவலை, அந்த இசையை வாழ்க்கையின் குறியீடாக எடுத்துக்கொண்டு மேலும் விரித்துக்கொள்ள முடியும். தமிழில் இசைக்கலைஞரின் வாழ்க்கையைச் சொல்லும் நாவல்களில் ந. சிதம்பர சுப்ரமணியனின் இதயநாதம் இந்நாவலுக்கு முன்னோடியாக் கொள்ளத்தக்கது.

உசாத்துணை


✅Finalised Page