under review

கள்வனின் காதலி

From Tamil Wiki
Revision as of 14:21, 3 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected text format issues)

To read the article in English: Kalvanin Kadhali (novel). ‎

கள்வனின் காதலி

கள்வனின் காதலி (1937) கல்கி எழுதிய இரண்டாவது நாவல். கல்கி என்னும் பெயரில் எழுதிய முதல் நாவல். இந்நாவல் ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தது. பின்னர் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது.

எழுத்து, பிரசுரம்

கள்வனின் காதலி

1929-ல் நெல்லை மாவட்டத்தில் செம்புலிங்கம் என்னும் கொள்ளையன் மக்களால் விரும்பப்பட்டவனாக இருந்தான். அவனை முத்தையா பிள்ளை என்னும் போலீஸ் அதிகாரி கொன்றார். அச்செய்தி மக்களால் அதிகம் பேசப்பட்டது. நெல்லையில் டி.கெ. சிதம்பரநாத முதலியாரின் வட்டத்தொட்டி சந்திப்பில் முத்தையா பிள்ளையை கல்கி சந்தித்தார். அப்போது நடந்த உரையாடலின் அடிப்படையில் உருவான கதை கள்வனின் காதலி. ராபின்ஹூட் என்னும் கதைநாயகனாகிய கொள்ளையனையும் கல்கி முன்னுதாரணமாகக் கொண்டிருந்தார்.

கதைச்சுருக்கம்

சந்தர்ப்ப சூழ்நிலையால் திருடனாக ஆனவன் முத்தையன். கார்வார் சங்குப்பிள்ளை என்னும் சுரண்டல் பேர்வழியால் அவன் திருட்டுப்பட்டம் கட்டப்பட்டு திருடனாகிறான். அவன் தங்கை அபிராமி. அவனுடைய காதலி கல்யாணி. முத்தையன் சிறையிலிருந்து தப்பி ராஜன் வாய்க்கால் பக்கம் காடுகளில் ஒளிந்திருக்கிறான். அவனைப் பிடிக்க இன்ஸ்பெக்டர் சர்வோத்தம சாஸ்திரி முயல்கிறார். முத்தையன் தன் தோழன் கமலபதி பெண்வேடமிட்டு வந்தபோது அவனுடன் பேசிக்கொண்டிருந்ததைக் கண்ட கல்யாணி அவனை போலீஸுக்கு காட்டிக்கொடுக்கிறாள். சர்வோத்தம சாஸ்திரி அவனை சுட்டுக்கொல்கிறார். உண்மையை உணர்ந்த கல்யாணி இறைவழிபாட்டில் ஈடுபடுகிறாள். சர்வோத்தம சாஸ்திரியின் மனசாட்சி உறுத்த அவர் வேதாந்த விசாரத்தில் ஈடுபடுகிறார். அபிராமியை சர்வோத்தம சாஸ்திரி அனாதை விடுதியில் சேர்க்கிறார்.

திரைப்படம்

கள்வனின் காதலி 1955-ல் திரைப்படமாக வெளிவந்தது. வி.எஸ். ராகவன் இயக்க சிவாஜி கணேசனும் பானுமதியும் நடித்திருந்தனர்.

இலக்கிய இடம்

கல்கியின் முந்தைய நாவலாகிய விமலாவில் கல்கி சுதந்திரப்போராட்டச் சூழலை யதார்த்தமாக விவரிக்க முயன்றார். கள்வனின் காதலி அக்காலத்தைய வாசகர்கள் விரும்பும் எல்லா கூறுகளும் கொண்டு திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. தமிழில் வணிகக்கேளிக்கை எழுத்தின் ஒரு காலகட்டத்தை கள்வனின் காதலியே தொடங்கிவைத்தது.

உசாத்துணை



✅Finalised Page