under review

கலித்தாழிசை

From Tamil Wiki

கலித்தாழிசை கலிப்பாவின் பாவின உறுப்புக்களில் ஒன்றான தாழிசையின் வகைகளுள் ஒன்று.

கலித்தாழிசை நூற்பா

”அடியெனைத் தாகியு மொத்துவந் தளவினிற்
கடையடி மிகுவது கலித்தா ழிசையே”

என்கிறது யாப்பருங்கலம்.

“அந்தடி மிக்குச் சிலபல வாயடி
தந்தமு ளொப்பன தாழிசை யாகும்”

என்கிறது காக்கைபாடினியம்.

கலித்தாழிசை இலக்கணம்

  • கலித்தாழிசை, ஒரே எதுகை கொண்டு அமைந்திருக்கும்.
  • இரண்டு அடிகளோ, இரண்டிற்கு மேற்பட்ட பல அடிகளோ வரும்.
  • ஈற்றடி மிகுந்து பல சீர்கள் கொண்டதாகவும் அமையும். ஏனைய அடிகள் தம்முள் அளவொத்து வரும்.
  • ஒரு பொருள் மேல் மூன்று முறை அடுக்கி வரும். தனியே வருவதும் உண்டு.

உதாரணப் பாடல் -1

வாள்வரி வேங்கை வழங்கும் சிறுநெறியெங்
கேள்வரும் போழ்தி லெழால்வாழி வெண்திங்காள்
கேள்வரும் போழ்தி லெழாலாய்க் குறாலியரோ.
நீள்வரி நாகத் தெயிறே வாழி வெண்திங்காள்

- நான்கு அடிகளில் அமைந்துள்ள மேற்கண்ட பாடலில் முதல் மூன்று அடிகளிலும் அடிக்கு நான்கு சீர்கள் அமைந்துள்ளன. இறுதி அடியில் ஐந்து சீர்கள் வந்துள்ளதால் இது கலித்தாழிசை.

உதாரணப் பாடல் - 2

பெரியவனை மாயவனைப் பேருலகம் எல்லாம்
விரிகமல உந்தியுடை விண்ணவனைக் கண்ணும்
திருவடியும் கையும் திருவாயும் செய்ய
கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே?
கண்ணிமைத்துக் காண்பார்தம் கண்ணென்ன கண்ணே?

- நான்கு அடிகளில் அமைந்துள்ள மேற்கண்ட பாடலில் முதல் மூன்று அடிகளிலும் அடிக்கு நான்கு சீர்கள் அமைந்துள்ளன. இறுதி அடியில் எட்டு சீர்கள் வந்துள்ளதால் இது கலித்தாழிசை.

உதாரணப் பாடல் - 3

கொய்தினை காத்தும் குளவி அடுக்கத்தெம்
பொய்தல் சிறுகுடி வாரல்நீ ஐய நலம்வேண்டின்
ஆய்தினை காத்தும் அருவி அடுக்கத்தெம்
மாசில் சிறுகுடி வாரல்நீ ஐய நலம்வேண்டின்
மென்தினை காத்தும் மிகுபூங் கமழ்சோலைக்
குன்றச் சிறுகுடி வாரல்நீ ஐய நலம்வேண்டின்

- ஒரு பொருள் மேல் மூன்று முறை அடுக்கி வந்த மேற்கண்ட பாடலில், முதல் அடியில் நான்கு சீர்களும் அடுத்த அடியில் ஐந்து சீர்களும் அமைந்துள்ளன. மூன்று தாழிசைகளிலும் சொற்களும் தொடர்களும் பொருளும் திரும்பத் திரும்ப அடுக்கி வந்துள்ளதால் இது கலித்தாழிசை.

உசாத்துணை


✅Finalised Page