கருணானந்தம்

From Tamil Wiki
Revision as of 22:37, 12 December 2023 by ASN (talk | contribs) (Page Created; Para Added, Image Added)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
கருணானந்தம்

கருணானந்தம் (ஆனந்தம்; எஸ். கருணானந்தம்; கவிஞர் கருணானந்தம்) (அக்டோபர் 15, 1925 – செப்டம்பர் 27, 1989) கவிஞர், எழுத்தாளர், இதழாளர், மொழிபெயர்ப்பாளர், நாடக ஆசிரியர், பத்திரிகையாளர். தமிழக அரசின் செய்தித் துறையில் துணை இயக்குநராகப் பணியாற்றினார். அரசியல், சமூகம் சார்ந்து பல நூல்களை எழுதினார். திராவிடர் கழகத்தின் முன்னோடி உறுப்பினர்களில் ஒருவர். தமிழக அரசு இவரது நூல்களை நாட்டுடைமை ஆக்கியது.

பிறப்பு, கல்வி

கருணானந்தம், அக்டோபர் 15, 1925 அன்று, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சுங்கந்தவிர்த்த சோழன் திடலில், சுந்தரமூர்த்தி - ஜோதி அம்மாள் இணையருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். தொடக்கக் கல்வியை தஞ்சாவூர் மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் படித்தார். எட்டாம் வகுப்பு முதல், பத்தாம் வகுப்பு வரை தஞ்சை செயின்ட் பீட்டர்ஸ் பள்ளியில் பயின்றார். கும்பகோணம், அரசு ஆடவர் கல்லூரியில் இடைநிலை வகுப்பு படித்தார். ராமசாமிப் பெரியாருடனனான சந்திப்பால், படிப்பை முடிக்காமல் இடை நின்றார்.

தனி வாழ்க்கை

கருணானந்தம், தபால் தந்தித் துறையில் அஞ்சல் பிரிப்பாளராகப் பணியாற்றினார். 1969-ல் விருப்ப ஓய்வு பெற்றார். அதே ஆண்டில் தமிழக அரசின் செய்தி - மக்கள் தொடர்புத் துறையில், பிரசார அலுவராகப் பணியில் சேர்ந்தார். சில ஆண்டுகள் பணிக்குப் பின் துணை இயக்குநராகப் பதவி உயர்வு பெற்றார். தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தில் மக்கள் தொடர்பு அலுவலராகப் பணியாற்றினார். மணமானவர்.