under review

கம்பதாசன்: Difference between revisions

From Tamil Wiki
(changed template text)
(Category:கவிஞர்கள் சேர்க்கப்பட்டது)
Line 53: Line 53:
{{Finalised}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:கவிஞர்கள்]]

Revision as of 19:37, 23 December 2022

To read the article in English: Kambadasan. ‎

கம்பதாசன்
கம்பதாசன்

கம்பதாசன் (செப்டெம்பர் 15, 1916 - மே 23, 1973) தமிழ்க்கவிஞர், திரைப்பாடலாசிரியர், இதழாளர். மரபிலக்கிய முறையில் சந்தத்தில் அமைந்த கவிதைகளையும் குறுங்காவியங்களையும் எழுதியவர்.

பிறப்பு, கல்வி

கம்பதாசனின் இயற்பெயர் அப்பாவு. இவர் தந்தை சுப்பராயர் புதுச்சேரியில் உள்ள வில்லியனூரைச் சேர்ந்தவர்.  இவரது தாயார் பாலாம்பாள் திண்டிவனம் அருகேயுள்ள உலகாபுரம் என்னும் ஊரைச்சேர்ந்தவர் . கம்பதாசன் செப்டெம்பர் 15, 1916-ல் தேதி தன் தாயின் ஊரில் பிறந்தார். பெற்றோருக்கு இவர் ஒரே மகன். மற்றவர் ஐவரும் பெண்கள். தந்தை மண்பொம்மைகள் செய்து விற்கும் தொழில் செய்துவந்தார்.

கம்பதாசனின் குடும்பத்தினர் அவரது இளமைப் பருவத்திலேயே சென்னையைச் சேர்ந்த புரசைவாக்கம் பகுதிக்கு குடிபெயர்ந்துள்ளனர். அங்குள்ள குயப்பேட்டை நகர சபைப் பள்ளிக் கூட்டத்திலேயேஆறாம் வகுப்புவரை படித்தார். நடிப்புக் கலையிலே ஆர்வம் ஏற்பட்டு படிப்பை விட்டுவிட்டார்.

தனிவாழ்க்கை

நடிகராகவும் பாடகராகவும் திழந்த கம்பதாசன் நடன உலகுடன் அணுக்கமான தொடர்பு கொண்டிருந்தார்.மலையாளக் கவிஞர் வள்ளத்தோள் நாராயணமேனனின் மகளும் நாட்டியக்கலைஞருமான சித்திரலேகாவை மணந்தார். குறுகிய காலத்திலேயே அந்த மணவாழ்க்கை முறிந்தது. பின்னர் கவிஞர் சுசீலா என்ற பாடசாலை ஆசிரியையை மணந்து கொண்டார். அதுவும் தோல்வியில் முடியவே அனுசூசுயா என்ற நடனக்கலைஞரை மணந்தார்..

கம்பதாசன் கட்டற்ற வாழ்க்கை கொண்டவர். மிதமிஞ்சிய குடிப்பழக்கமும் இருந்தது. ஆகவே உடல்நலம் கெட்டு, வறுமை எய்தி இறுதிநாட்களில் அல்லல்பட்டார்.

திரைப்பட வாழ்க்கை

கம்பதாசன் நாடகங்களில் பாடி நடித்தார். நாடகங்களுக்காக சி.எஸ்.ராஜப்பா என்று பெயர்சூட்டிக்கொண்டார். நாடகங்களுக்கான பாடல்களை எழுதினார். 'திரெளபதி வஸ்திராபரணம் (1934), 'சீனிவாச கல்யாணம் (1934) போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்தார். ஆனால் நடிப்புக்கான வாய்ப்புகள் அமையவில்லை. 1940-ஆம் ஆண்டில் வெளிவந்த 'வாமன அவதாரம் என்ற படத்திற்கு முதன் முதலாகப் பாடல் எழுதினார். அதில் அவர் பெயர் சி.எஸ்.ராஜப்பா என்று குறிப்பிடப்பட்டிருந்தது. தொடர்ந்து வேணு கானம், மகாமாயா, பூம்பாவை, மங்கையர்க்கரசி, ஞானசெளந்தரி, அவன், வானரதம் போன்ற பல திரைப்படங்களுக்கு பாடல்களும் கதைவசனங்களும் எழுதினார். புராணப்படங்களுக்கு மரபான முறையில் பாடல்கள் எழுதப்பட்ட காலகட்டத்தில் சமூகக்கருத்துக்களையும் அரசியல் கருத்துக்களையும் பாடல்களில் கொண்டுவந்தவர் என்று கருதப்படுகிறார். 1969-ல் வெளிவந்த குபேரத்தெரு வரை தொடர்ந்து பாடல்களை எழுதிவந்தார்.

கம்பதாசன் வாழ்க்கை வரலாறு

இலக்கியவாழ்க்கை

இளமையில் சிற்றிலக்கியங்களின் சந்தத்தில் பெரிதும் ஈடுபாடு கொண்டிருந்த கம்பதாசன் பின்னர் கம்பனில் பற்றுகொண்டு தன் பெயரையும் கம்பதாசன் என்று மாற்றிக்கொண்டார். மரபின் யாப்பு முறைக்குள் அமையும்படி சந்த ஒழுங்குள்ள கவிதைகளை எழுதினார். குறுங்காவிய வடிவில் பல முயற்சிகளைச் செய்தார். இந்தி மொழியில் தேர்ச்சி பெற்றிருந்த கம்பதாசன் இந்திமொழி படங்களை தமிழாக்கம் செய்யும் பணியிலும் ஈடுபட்டிருந்தார்.

கம்பதாசன் மேல் பெரும்பற்று கொண்டிருந்த சிலோன் விஜயேந்திரன் அவருடைய நூல்களை முறைப்படி தொகுத்து தொடர்ச்சியாக மறுபடியும் வெளியிட்டார்.

விருதுகள்

தமிழக அரசின் கலைமாமணி

மறைவு

கம்பதாசன் இறுதிநாட்களில் நோயும் வறுமையுமாக கைவிடப்பட்ட நிலையில் சென்னை ராயப்பேட்டை அரசுமருத்துவமனையில் மே 23, 1973-ல் மறைந்தார்.

இலக்கிய இடம்

கம்பதாசனின் கவிதைகள் பாரதிதாசனின் செல்வாக்கு கொண்டவை. சமூகக்கருத்துக்களை யாப்பின் சந்தத்திற்குள் அமைத்து முன்வைப்பவை.மரபில் இருந்து பெறப்பட்ட அணிகளையும் உருவகங்களையும் புதியமொழியில் கூறுபவை. அவருடைய குறுங்காவியங்கள் குறிப்பிடத்தக்கவை

நூல்கள்

கவிதைத் தொகுப்புகள்
  • கனவு (1941), வங்கக்கவி ஹரிந்தீரநாத் முன்னுரையுடன்
  • விதியின் விழிப்பு
  • முதல் முத்தம்
  • அருணோதயம்
  • அவளும் நானும்
  • பாட்டு முடியுமுன்னே
  • புதுக்குரல்
  • தொழிலாளி
நாடகம்
  • ஆதிகவி
  • சிற்பி
சிறுகதை
  • முத்துச் சிமிக்கி
சிலோன் விஜயேந்திரன் தொகுத்து வெளியிட்டவை
  • கம்பதாசனின் கவிதைத் திரட்டு (1987)
  • கம்பதாசன் திரை இசைப்பாடல்கள் (1987)
  • கம்பதாசன் காவியங்கள் (1987)
  • கம்பதாசன் சிறுகதைகள் (1988)
  • கம்பதாசன் நாடகங்கள் (1988)
  • கம்பதாசன் கவிதா நுட்பங்கள் (1997)

உசாத்துணை


✅Finalised Page