under review

கபிலர் (திருவள்ளுவமாலைப் பாடல்)

From Tamil Wiki
Revision as of 21:39, 28 June 2022 by Manobharathi (talk | contribs)

கபிலர் (திருவள்ளுவமாலைப் பாடல்) திருவள்ளுவரை புகழ்ந்து எழுதப்பட்ட திருவள்ளுவ மாலை என்னும் நூலின் ஆசிரியர். இவர் இவருக்கு முன்பிருந்த சங்ககாலக் கபிலர், பன்னிரு பாட்டியல் கபிலர், இன்னா நாற்பது கபிலர் ஆகியோரிலிருந்து வேறுபட்டவர். காலத்தால் பிந்தியவர்.

(பார்க்க : கபிலர்கள்)

திருவள்ளுவமாலை

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான திருக்குறள் சமணர் காலகட்டத்திலும், பின்னர் சோழர்களின் காலகட்டத்திலும் பெரும் புகழ்பெற்ற நூலாக மாறியது. வெவ்வேறு காலகட்டங்களில் கவிஞர்கள் திருக்குறளை போற்றி எழுதிய தனிப்பாடல்களை தொகுத்து 'திருவள்ளுவமாலை' என்னும் பெயரில் நூலாக்கியவர் கபிலர் எனப்படும் ஆசிரியர்.

காலம்

திருவள்ளுவ மாலை தொடக்க காலத் தமிழறிஞர்களால் தொன்மையான நூலாக, திருவள்ளுவரின் காலத்தைச் சேர்ந்ததாக கருதப்பட்டது. அதிலுள்ள கவிஞர்களின் பெயர்கள் பல தொன்மையானவை என்பதே காரணம். உ.வே.சாமிநாதையர் இந்நூலை தொன்மையானது என்றே கருதினார். தமிழில் வேறெந்த கவிஞருக்கும் இப்படி ஒரு புகழ்மாலை இல்லை என்று எழுதினார்.

பண்டைய குறள் உரை ஆசிரியர்கள் பதின்மருக்கு முந்தியது திருவள்ளுவமாலை என்று அக்கால அறிஞர்கள் பலர் கூறியிருக்கின்றனர். கருத்து. இப்பாடல்கள் கி.பி. எட்டாம் நூற்றாண்டு வரையில் உள்ள காலகட்டத்தில் தொகுக்கப்பட்டதெனச் சில அறிஞர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். சிலர் இதன் காலம் பன்னிரண்டாம் நூற்றாண்டுக்கு முந்தியதாக அமையும் என்று கூறியுள்ளனர். திருவள்ளுவமாலை வரலாறு பன்னிரண்டாம் நூற்றாண்டுக்கு முந்தியதென்பதில் ஐயம் இல்லை என்று தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் சொல்கிறார்.

திருவள்ளுவமாலை என்பது ஒரு பொய்நூல் என கருதும் ஆய்வாளர்களும் உள்ளனர். தீக்கதிர் இதழில் நா.முத்துநிலவன் எழுதிய கட்டுரையில் திருவள்ளுவ மாலை திருக்குறள் புகழ்பெற்ற பின்னர் சங்கப்புலவர்களுடன் அவரையும் ஒரே நிரையில் வைக்கும் ஒரு புனைவின் விளைவாக எழுதப்பட்டது என்றும், அதிலுள்ள பாடல்களை பாடிய பலருக்கு சங்கப்புலவர்கள் என பொய்யாக பெயர் அளிக்கப்பட்டுள்ளது என்றும், திருக்குறளுக்கு நேர் எதிரான கருத்துக்கள் திருவள்ளுவ மாலையில் உள்ளன என்றும், திருக்குறளை வைதிகமரபுக்குள் இழுப்பதற்காக ஒரு தொன்மத்தை உருவாக்கி எழுதப்பட்ட நூல் அது என்றும், சங்கப்புலவர் கபிலரின் பெயர் அதன் ஆசிரியருக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடுகிறார் (திருவள்ளுவமாலை என்னும் தில்லுமுல்லு மாலை )

இந்நூலின் நம்பகத்தன்மை, காலப்பெறுமதி ஆகியவை இன்று விவாதத்திற்குரியவையாகவே உள்ளன.வள்ளுவமாலையில் உள்ள பாடல்களுக்குள்ளேயே, குறள் அமைப்பு பற்றிய பால், இயல், அதிகாரம் என்ற கூறுகளைப் பற்றி தவறான செய்திகள் கூறப்பட்டுள்ளன. முப்பாலான குறள் நான்கு நாலு உறுதிப் பொருளையும் கூறுகிறது என்று இரண்டு பாடல்கள் கூறுகின்றன. குறளை வடமொழி இலக்கியங்களான இராமாயணம், மகாபாரதம் ஆகியவைகளோடு இணைத்துக் கூறும் பகுதிகளும், திருக்குறள் முதல்நூல் அல்ல; அது வழிநூல்; குறள் வடமொழி வேதத்தைத் தழுவியது போன்ற கருத்துக்களும் இந்நுலில் உள்ளன.

கபிலர்

திருவள்ளுவமாலையை தொகுத்தவர் கபிலர் எனப்படுகிறார். அவர் பாடிய ஒரு பாடல் அந்நூலில் உள்ளது.


தினையளவு போதாச் சிறுபுன் னீர்நீண்ட

பனையளவு காட்டும் படிததான்- மனையளகு

வள்ளைக் குறங்கும் வளநாட வள்ளுவனார்

வெள்ளைக் குறட்பா விரி

தினையளவு சிறிய நீர்த்துளி நீண்ட பனையை காட்டுவதுபோலத்தான் வள்ளுவரின் குறள் வெண்பா பொருளை விரித்துக் காட்டுகிறார்

உசாத்துணை


✅Finalised Page