ஐந்திணை எழுபது

From Tamil Wiki
Revision as of 13:45, 11 July 2022 by Siva Angammal (talk | contribs)

ஐந்திணை எழுபது, சங்கம் மருவிய கால நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று. அகப்பொருள் சார்ந்த ஐந்திணை எழுபது நூலை இயற்றியவர் மூவாதியார்.

பெயர்க் காரணம்

ஐந்திணை எழுபது நூல் ஐந்திணைகளில் ஒவ்வொன்றிற்கும் பதினான்கு பாடல்களைக் கொண்டு, எழுபது பாடல்களில் அமைந்துள்ளது. எனவே, ஐந்திணை எழுபது என்னும் பெயர் பெறுவதாயிற்று. குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் என்ற வரிசையில் திணைகள் அமைந்துள்ளன. பாலை நிலம், முல்லையும் குறிஞ்சியும் தம் இயல்பு கெட்டுத் தோன்றுவது என்பதாலும், நான்கு திணைகளுக்கும் பொதுவாய் 'நடுவண் ஐந்திணை' என்று சிறப்பிக்கப் பெறுவதனாலும் பாலைத் திணை நடுநாயகமாய் அமைக்கப்பட்டுள்ளது எனக் கருதப்படுகிறது.

ஆசிரியர் குறிப்பு

ஐந்திணை எழுபது நூலை இயற்றியவர் மூவாதியார். இவரைச் சிலர் சமணர் என்று கூறுவர். அதற்கு தக்க சான்று ஏதும் இல்லை. இவரைப் பற்றி வேறு ஒன்றும் அறியக்கூடவில்லை.

பொருண்மை

குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் என்ற திணை வரிசையில் ஒவ்வொரு திணைக்கும் பதினான்கு  பாடல்கள் என்ற அமைப்பில் இந்நூல் அமைந்துள்ளது. அனைத்து பாடல்களும் அகத்துறையை சார்ந்ததாகும். நூற்பெயர் ஒற்றுமையாலும், பாடல்களில் காணப்படும் சில ஒற்றுமையாலும்  ஐந்திணை ஐம்பது நூலை அடியொற்றி ஐந்திணை எழுபது நூல் இயற்றப்பட்டுள்ளதை உணரலாம்.

"கள்ளத்தின் ஊச்சும் சுரம் என்பர், காதலர்

உள்ளம் படர்ந்த நெற"

என்ற ஐந்திணை ஐம்பது (38) பாடலும்

"கள்ளர் வழங்கும் சுரம் என்பர், காதலர்

உள்ளம் படர்ந்த நெறி"

என வரும் ஐந்திணை எழுபது (36) பாடலும் ஒரே அச்சில் வார்த்தவை போன்றுள்ளது.

ஐந்திணை எழுபது நூலின் சில பிரதிகளில், முதலில் விநாயகரைக் குறித்த கடவுள் வணக்கப் பாடல் ஒன்று  காணப்படுகிறது. இக்கடவுள் வாழ்த்து, நூலுக்குப் புறம்பாக உள்ளதாலும், இதற்குப் பழைய உரைகாரர் உரை எழுதாமையாலும், இச்செய்யுள் நூலாசிரியரே இயற்றியது என்று துணிந்து கூற இயலாது. இச்செய்யுளின் நடைப் போக்கும் ஏனைய பாடல்களினும் வேறுபட்டுள்ளது. ஐந்திணை நூல்களில் வேறு ஒன்றிற்கும் கடவுள் வாழ்த்துப்பாடல் இல்லாமையும் கவனத்திற்குரியது. இச்செய்யுள் அனந்தராமையர் பதிப்பைத் தவிர (1931), அதற்கு முந்திய பதிப்புகளில் இல்லை. எனவே, இப் பாடல் ஆசிரியர் இயற்றியது அன்று என்றே கொள்ளலாம்.

ஐந்திணை எழுபது  நூலில் உள்ள எழுபது பாடல்களில் முல்லைத் திணையில் இரண்டு பாடல்களும் (25, 26) நெய்தல் திணையில் இரண்டு பாடல்களும் (69, 70) இறந்துபட்டன.

'முட முதிர் புன்னை' எனத் தொடங்கும் ஒரு பாடல் 69- ஆம் செய்யுளாக இலக்கண விளக்க ஆசிரியர் பரம்பரை திரு. சோமசுந்தர தேசிகர் பதிப்பில்(1926) காணப்படுகிறது. திரு. அனந்தராமையர் பதிப்பில் இது தரப்படவில்லை. தொல்காப்பிய உரையில் நச்சினார்க்கினியர் இதனைக் 'காமம் சிறத்தல்' என்னும் துறைக்கு மேற்கோள் காட்டியுள்ளார் (தொல். பொருள். 111). ஆயினும், நூற்பெயரை அவரும் சுட்டவில்லை. எனவே, இச் செய்யுள் இந் நூலின் பகுதியென்று உறுதியாகக் கொள்ளுவதற்கு இல்லை. எனினும், சில பதிப்புகளின் இறுதியில் இப் பாடலும் தனியாக இணைக்கப் பெற்றிருக்கிறது.

ஐந்திணை எழுபது நூல் செம்பாகமான தெள்ளியநடையை மேற்கொண்டுள்ளது.

"சான்றவர் கேண்மை சிதைவு இன்றாய், ஊன்றி,

வலி ஆகி, பின்னும் பயக்கும்" (5)

"பெருத் தகு தாளாண்மைக்கு ஏற்க,

அரும் பொருள் ஆகும்" (29)

என்றாற் போன்ற கருத்துகள் சில அங்கங்கே உள்ளன. அக்காலப் பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், முதலியனவற்றையும்  ஐந்திணை எழுபது  நூல் காட்டுகிறது.

ஐந்திணை எழுபது  நூல் செய்யுள்கள் பலவற்றை இளம்பூரணர், நச்சினார்க்கினியர் முதலியோர் தத்தம் உரைகளில் எடுத்தாண்டுள்ளனர். பழைய உரையும் கிளவிக் குறிப்புகளும் முதல் 24 பாடல்களுக்கே கிடைத்துள்ளன

உதாரணப் பாடல்கள்

குறிஞ்சித்திணை

கொல்லைப் புனத்த வகில்சுமந்து கல்பாய்ந்து

வானி னருவி ததும்பக் கவினிய

நாட னயமுடைய னென்பதனா னீப்பினும்

வாடன் மறந்தன தோள் (ஐ.எ- 2)

பொருள்;

மழையினாலே பெருக்கெடுத்த அருவியானது,  மலைகளிலிருந்து இறங்கிச் சென்று, தோட்டமாகிய தினைப்புனத்தில் உள்ள, அகிற்கட்டைகளை மேற்கொண்டு எங்கும் நிரப்பும் அழகு மிகுந்த மலை நாட்டிற்குரிய தலைமகன் வாய்மை முதலிய நற்பண்புகள் வாய்த்துள்ளவன் என்பதானால்   அவன் பொருள் தேடல் காரணமாக என்னை  நெடுநாளாய்ப் பிரிந்து சென்றிருந்தும் என்தோள்கள் வருத்தத்தால் மெலிதலை  மறந்தன.

முல்லைத்திணை

தண்ணறுங் கோட றுடுப்பெடுப்பக் காரெதிரி

விண்ணுயர் வானத் துருமுரற்றத் - திண்ணிதிற்

புல்லுந ரில்லார் நடுங்கச் சிறுமாலை

கொல்லுநர் போல வரும். (ஐ.எ- 17)

பொருள்;

  குளிர்ந்த மணத்தினையுடைய வெண்காந்தளானது துடுப்பினைப் போன்ற அரும்புக்குலைகளை  ஏந்திக்கொண்டு நிற்க  கார்காலத்தை எதிர்கொண்டு விண் வெளியிலே உயர்ந்து திரியும்படியான  முகில்களிடத்திலே இடிகள் ஒலிக்க, நன்றாக தழுவிக் கொள்பவர்களாகிய காதலரை  பிரிந்தவர்களாகிய காதலிமார்கள் துன்பமிகுதியாற் றுயருற்று நடுங்கும்படியாக கொலையாளிகளைப் போன்று சிறு பொழுதாகிய அந்தி வரும்.

பாலைத்திணை

சூரற் புறவி னணில்பிளிற்றுஞ் சூழ்படப்பை

யூர்கெழு சேவ லிதலொடு - போர்திளைக்குந்

தேரொடு கானந் தெருளிலார் செல்வார்கொ

லூரிடு கவ்வை யொழித்து. (ஐ.எ- 35)

பொருள்;

இவ்வூரில் நமக்காக செய்யவேண்டிய காரியத்தை விட்டுவிட்டு, பொருளைவிட அருளே சிறந்தது என்னும் தெளிவினை கொண்டிராத நம்காதலர், பிரப்பம் புதர்கள் மிகுந்த காட்டினிடத்தே அணிற்பிள்ளைகள் ஒலிக்கும்படியான கொல்லைகளாற் சூழப்பெற்ற, பாலைநிலத்து ஊர்களில் பொருந்தியுள்ள, சேவலானது  காடைப்பறவையுடனே சண்டை செய்யும்படியான  நிலம் வழியே   நம்மைப் பிரிந்து  தேரின் மீது போவாரோ ?

மருதத்திணை

காதலிற் றீரக் கழிய முயங்கன்மி

னோதந் துவன்று மொலிபுன லூரனைப்

பேதைப்பட் டேங்கன்மி னீயிரு மெண்ணிலா

வாசை யொழிய வுரைத்து. (ஐ.எ- 52)

பொருள்;

  நான் மட்டுமல்லாது நீங்களும், வெள்ளமானது நெருங்கி மிகுதலால் உண்டாகி ஒலிக்கின்ற நீர்வளமிக்க மருதநிலத் தலைவனாகிய நம் தலைமகனை உள்ளன்பின் மிகுதியினின்று முழுவதும், நீங்கும்படியாக இனித் தழுவாதிருப்பீர்களாக, அறியாமையிலே அகப்பட்டு  அளவில்லாத தலைமகனது விருப்பம் நீங்கும்படி  கூறி குறையிரக்கா திருப்பீர்களாக. (இங்ஙனம் சில காலம் நாம் ஒற்றுமையாக இருப்போமாயின், தலைமகன் முன்போல் நம்மாட்டுக் காதலுடன் இருப்பான்).

நெய்தல்

61கண்டிரண் முத்தம் பயக்கு மிருமுந்நீர்ப்

பண்டங்கொ ணாவாய் வழங்குந் துறைவனை

முண்டகக் கானலுட் கண்டே னெனத்தெளிந்தே

னின்ற வுணர்விலா தேன். (ஐ.எ- 61)

பொருள்;

கண்களிலுள்ள விழிகளைப்போல் திரட்சியுற்றிருக்கும் படியான முத்துகளை கொடுக்கும்படியான  பெரிய கடலினிடத்தே, பொருள்களை ஏற்றுமதி செய்யும்படியான மரக்கலங்கள் வந்து போகும்படியான துறைமுகத் தலைவனை தாழைகள் சூழ்ந்த கடற்கரைச் சோலையினிடத்தே (இன்று அரிதாகக்) காணப்பெற்றேன், (ஆயினும்) (இவனைக் காணுதல் முன்பு இன்பந்தருமென உணர்ந்து) நிலைபெற்றிருந்த உணர்ச்சியானது (இப்பொழுது) இல்லாத யான்(புணர்ச்சி துன்பம் தரும்) என்று தெளிந்தேன்.

உசாத்துணை
  • ஐந்திணை எழுபது, தமிழ் இணையக் கல்விக் கழகம் https://www.tamilvu.org/library/l2D00/html/l2D00ind.htm
  • ஐந்திணை எழுபது, வஸந்தா அச்சுக்கூடம், மாயூரம் - தமிழ் மின்நூலகம். https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZMeluMy&tag=%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%20%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81#book1/