உன்னதம்

From Tamil Wiki
Revision as of 15:54, 18 April 2022 by Navingssv (talk | contribs) (Created page with "உன்னதம் கவிதை எழுப்பும் உணர்வின் உயர்நிலையைக் குறிக்கும் கலைச்சொல். இச்சொல் கிரேக்க செவ்வியல் காலம் தொட்டு வருவது. == கலைச்சொல் == உன்னதம் குறித்த சிந்தனை கிரேக்க இலக்கியத்தில...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

உன்னதம் கவிதை எழுப்பும் உணர்வின் உயர்நிலையைக் குறிக்கும் கலைச்சொல். இச்சொல் கிரேக்க செவ்வியல் காலம் தொட்டு வருவது.

கலைச்சொல்

உன்னதம் குறித்த சிந்தனை கிரேக்க இலக்கியத்தில் பிறந்தது. கி.பி. 300 இல் லாஞ்ஜைன்ஸ் என்னும் கிரேக்க ஆசிரியர் “உன்னதத்தைப் பற்றி” என்ற தன் நூலில் விரிவான விளக்கங்களை முன்வைத்துள்ளார். உன்னதம் சொற்களில் இயல்பாக அமையும் மேன்மை என அவர் விளக்கம் அளிக்கிறார். லான்ஜைன்ஸ்க்கு முன்னால் உன்னதம் மூன்று வகை பேச்சு வழக்கோடு தொடர்புடையதாக பயன்படுத்தப்பட்டது. உயர், நடுத்தர, தாழ்ந்த என மூன்று வகைப் பேச்சு வழக்கினை மதிப்பிட இச்சொல் பயன்படுத்தப்பட்டு வந்தது. லான்ஜைன்ஸ் இதனைக் கவிதையை மதிப்பிடப் பயன்படுத்துகிறார்.

உன்னதம் என்பது படைப்பாளியின் ஆன்மாவிலிருந்து கவிதையின் ஊடாக வாசகனை அடைகிற படைப்பாளியின் ஆன்ம ஒளி. கவிதையின் ஓர் அழகியல் கூறாக அமையாமல் கவிதை முழுவதும் ஊடுருவி நிற்பது. தன்னிகரற்ற சாதனையாக, சாதனையின் சிகரமாக, உயர்வெண்ணங்களில், புனித உணர்வுகளில், படிம மொழியில், சொல்லாட்சியில், அமைப்பின் ஒழுங்கில் பரந்து நிற்பது. உன்னதம், உணர்வுபூர்வமாக அமைவதால் அதை உணர்ந்து கொள்ளவே முடியும். உன்னதம் ஒரு கலைஞனிடம் இயல்பாக அமைவது. தன் திறமையால் தேடிக் கொள்வதல்ல. உன்னதக் கலைஞனின் குறைபாடுகளை உடைய படைப்பு, சாதாரணக் கலைஞனின் வடிவச் சிறப்பினைக் கொண்ட படைப்பை விட உயர்ந்தது.

சொல்லின் வரலாறு

உன்னதம் 17 ஆம் நூற்றாண்டில் ஆங்கில மொழி இலக்கியத்தில் பயன்படத் தொடங்கியது. அதன் பின் பிற கலைகளுக்கும் பறவியது. 18 ஆம் நூற்றாண்டில் உணர்ச்சி மையவாதக் கவிஞர்களிடம் பெருந்தாக்கத்தைச் செலுத்தியது. இயற்கை அழகினின்றும் வேறுபடுத்தி, அதைவிட உயர்ந்ததாகச் சித்தரிக்கப்பட்டது. கவிதையைத் தனி மனிதனின் அனுபவ உணர்த்தலாகக் காணும் உணர்ச்சி மையக் கவிஞர்கள் இதனைப் பெரிதும் வரவேற்றது இயல்பானதே என்கிறார் பேராசிரியர் எம். வேதசகாயகுமார். படைப்பாளியின் தனித் தன்மை குறித்த சிந்தனைக்கு இது வித்திட்டது.

கான்ட் உன்னதத்தை அழகியல் தத்துவ நிலைக்கு உயர்த்தினார்.

தமிழில் உன்னதம்

தமிழில் உன்னதத்தை கம்பன் கவிதைகளில் இனங்காண இயலும். கவிதையின் கூறுகள் அனைத்திலும் முழுமையாகப் பரந்து நிற்கும் உன்னதத்தை உணர்ந்து கொள்ள முடியும். பேராசிரியர் ஜேசுதாசன் கம்பன் கவிதைகளில் உணரமுடிகிற உன்னத உணர்வை முன்னிட்டே கம்பனைத் தமிழ்க் கவிதை மரபின் சிகரமாக இனங்காண்கிறார்.

சமகால இலக்கியத்தில் க.நா.சுப்ரமணியம், புதுமைப்பித்தனை மேதை என இனங்காட்டினார். புதுமைப்பித்தன் சிறுகதைகளின் வடிவக்குறைபாடுகளைச் சுட்டிய அவர் புதுமைப்பித்தன் மேதை என்னும் காரணத்தால் தமிழின் சிகரம் என்றார்.

”உன்னதம்” இலக்கிய மதிப்பின் உயர்நிலையைக் குறிக்கின்றது.

உசாத்துணை

  • இலக்கியத் திறனாய்வுக் களஞ்சியம் - எம். வேதசகாயகுமார்