இறைமைந்தர் பிள்ளைத் தமிழ்

From Tamil Wiki
Revision as of 19:58, 20 April 2024 by ASN (talk | contribs) (Page Created by ASN)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
இறைமைந்தர் பிள்ளைத் தமிழ்

இறைமைந்தர் பிள்ளைத் தமிழ் (1985) இயேசுவின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் நூல். இந்நூலை இயற்றியவர் க. அருணகிரிநாதன்.

பிரசுரம், வெளியீடு

இறைமைந்தர் பிள்ளைத் தமிழ், சிதம்பரம் சுவிசேஷ மன்றத்தால் 1985-ல் வெளியிடப்பட்டது. இதனை இயற்றியவர் க. அருணகிரிநாதன்.

ஆசிரியர் குறிப்பு

இறைமைந்தர் பிள்ளைத் தமிழ் நூலை க. அருணகிரிநாதன் இயற்றினார். தமது ஐம்பதாம் வயதில் இயேசுநாதரால் ஆட்கொள்ளப்பட்டார். கிறிஸ்தவ சமயத்தை ஏற்றுக் கொண்டார். இயேசுவின் பெருமையையும், பிதா, மகன், பரிசுத்த ஆவி எனத் திகழும் இறைவனது பெருமையையும் க. அருணகிரிநாதன், இறைமைந்தர் பிள்ளைத் தமிழ் நூலில் விரிவாக விளக்கியுள்ளார். தமிழ்ப்புலவரான க. அருணகிரிநாதன், செந்தமிழ்க் கலைமணி என்று போற்றப்பட்டார்.

நூல் அமைப்பு

இறைமைந்தர் பிள்ளைத் தமிழ் நூலின் தொடக்கத்தில் காப்புப் பருவம் அமைந்துள்ளது. தந்தையர், பரிசுத்தாவியர், நோவா, ஆபிரகாம், யோபு, தானியேல், மோசே, தாவீது, சாலமோன், எலியா, சாமுவேல் ஆகியோர் காப்புப் பருவத்தில் துதிக்கப்பட்டுள்ளனர். பத்துப் பாடல்களுக்கு பதிலாக பதினொரு பாடல்கள் இப்பிரிவில் இடம்பெற்றுள்ளன. தொடர்ந்து செங்கீரைப் பருவம் தொடங்கி தாலப்பருவம், சப்பாணிப் பருவம், முத்தப் பருவம், வருகைப் பருவம், அம்புலிப் பருவம், சிற்றில் பருவம், சிறுபறைப் பருவம், சிறுதேர்ப் பருவம் எனப் பருவத்திற்குப் பத்துப் பாடல்கள் வீதம் நூறு பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

விருத்தப்பாவில் இந்நூல் அமைந்துள்ளது.

உள்ளடக்கம்

இயேசுபெருமானின் பிறப்பு, அவர் தம் பிறப்பின் பெருமை, மரியன்னையின் பெருமை, இயேசுநாதர் வளர்ந்த விதம், அவரது விளையாடல்கள் என இயேசுவின் குழந்தைப்பருவ நிகழ்ச்சிகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

பாடல் நடை

அம்புலிப் பருவம்

மனிதர்கள் பாவத்தில் வீழ்ச்சியுறல் தாளாது

மன்னுமிறை விண்தாதையர்

மனிதர்க ளிடத்தினிற் பிரியமுற் றவராகி

மறமலிவின் மீட்பருளவே

இனியதம் மைந்தரை அழைத்ததற் கானவை

இயம்பிமுத் திரைபதித்தே

இதற்கான முறையினில் மண்ணுலகில் மனுவுரு

எடுத்தெலாம் முடித்துவருவாய்

கனியவே மொழிந்துவிடை யுதவியே விடுத்திடக்

கன்னிமரி வித்துதித்துக்

காசினியில் வந்தஎம் இறைமைந்தர் உன்றனைக்

கருதிவா வெனவழைத்தும்

அநியாய மாகவே வாரா திருப்பதென்?

அம்புலீ ஆடவாவே

அழகுமிகு பெத்தலைச் சிறுவலுடன் சேர்ந்துநீ

அம்புலி ஆடவாவே.

தாலாட்டு

விண்ணாள் அரசின் இளவரசே

விடிவை கறையில் ஒளிர்மின்னே

வெய்ய கரிசில் மனந்திரும்பி

விரும்பு வோர்க்கே அருளமுதே

பண்ணே ரிசையே இசைப்பயனே

பரவுங் கலையே கலைநுணுக்கே

பாட்டே பாட்டின் உட்பொருளே

பாரில் உதித்த இறைமதலாய்

மண்ணே நிறைந்த பொருள்களினால்

மகிழ வெண்ணி யுழன்றலுத்தோம்

மகிழ்வுக் குரிய கொடைவள்ளல்

மனுவே இசுர வேலரசே

கண்ணே மணியே யெம்முளத்தாற்

கருதும் உருவே தாலேலோ

கதிரார் சுடரே கன்னிமரிக்

கருவே தாலே தாலேலோ.

முத்தப் பருவம்

தீய பாவம் உணர்ந்திடுதல்

திரும்பி அதனில் மனம்மாறல்

தேவ மைந்தர் தமையென்றும்

சிந்தை கொண்டே கனிவுறுதல்

ஆய விசுவா சப்பெருக்கில்

ஆழ்ந்தே யென்றும் நிலைத்திருத்தல்

அல்லல் உற்ற உற்ற போதினிலும்

அசையா துள்ளம் திடம்பெறுதல்

மாய வுலகின் அழிபொருளால்

மகிழ்வைப் பெறலா மெனவெண்ணும்

மயக்க நிலையில் மாறுபடல்

மற்றும் பரிசுத் தாவியரால்

ஏய வுதவி இரட்சிக்கும்

எந்தாய் முத்தந் தருகவே

இயேசு கிறிஸ்து நாதரெனும்

இனியாய் முத்தந் முத்தந் தருகவே.

சிறுதேர்ப் பருவம்

பெற்றதம் கைப்பொருள் சிறிதாக வெண்ணியும்

பெறாதபிறர்க் குரியபொருளைப்

பெரிதாக வெண்ணியும் பேராசை நெஞ்சினால்

பேதையேம் மயங்கிநின்றேம்

உற்றதா யென்றென்றும் அழிவின்றி நல்வரம்

உதவியே துயர்துமிக்கும்

உண்மையாம் மெய்ப்பொருள் உமையன்றி யமையுமோ

உலகெலாம் நிறைந்தபொருளே

முற்றறிவும் பேரின்பும் நீதியும் இரக்கமும்

முதன்மையுங் கொண்டமதலாய்

முழுவதும் நீர்பெருகி எமைச்சிறுக வைத்திடும்

முடிவிலா அன்புநிறைவே

சிற்றறிவில் ஆனந்தம் சேர்க்கின்ற அமுதமே

சிறுதேர் உருட்டியருளே

சீரார்ந்த கலிலேய நசரேயச் செல்வமே

சிறுதேர் உருட்டியருளே

மதிப்பீடு

இறைமைந்தர் பிள்ளைத் தமிழ் நூல் இலக்கியச் சுவையும், கற்பனை வளமும், கொண்டது. எளிய தமிழில் அமைந்துள்ளது. தமிழ் இலக்கியங்கள் கூறும் பிள்ளைத் தமிழ்க் கூறுகளை இயேசு மீது புனைந்து இந்நூல் இயற்றப்பட்டுள்ளது. இயேசுநாதர் மீது நூலாசிரியர் கொண்டிருந்த பக்தியை, அன்பை, நம்பிக்கையை வெளிப்படுத்தும் விதத்தில் எழுதப்பட்டுள்ளது.

உசாத்துணை