under review

ஆ. கார்மேகக் கோனார்

From Tamil Wiki
Revision as of 15:56, 2 August 2022 by Siva Angammal (talk | contribs)
ஆ. கார்மேகக் கோனார்

கார்மேகக் கோனார்( பொ.யு. 1889 - 1957),  தமிழறிஞர், சொற்பொழிவாளர், எழுத்தாளர்.  மதுரை அமெரிக்கன் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவராகத் திகழ்ந்தவர். தமிழிலக்கிய, இலக்கணத்தைக்  கற்பிப்பதில் வல்லவர்.

பிறப்பு மற்றும் இளமை

ஆ. கார்மேகக் கோனார் 1889- ஆம் ஆண்டு,  இராமநாதபுரம் மாவட்டத்தின் கமுதியருகே உள்ள அகத்தார் இருப்பு கிராமத்தில் ஆயர்பாடிக் கோனார் மற்றும் இருளாயி தம்பதியினருக்குப் பிறந்தார். பள்ளிக்கல்விக்குப் பின் ஆ. கார்மேகக் கோனாரது தமிழார்வத்தைக் கண்ட தந்தை, அக்காலத்தில் மதுரைமாநகரில் புகழ் பெற்றிருந்த தமிழ்ச்சங்கத்தை அணுகினார். அங்கு செந்தமிழ்க் கல்லூரி இயங்கிவந்தது.  மாணவர்களின் தமிழார்வம், திறமை போன்றவற்றை முழுமையாகச் சோதித்த பின்பே கல்லூரியில் சேர்த்துக் கொள்வதே அக்கல்லூரியின் முதல்வராக இருந்த நாராயண ஐயங்காரின்  வழக்கம். அதன்படி,  சோதித்துவிட்டு ஆ. கார்மேகக் கோனாருக்கு  கல்லூரியில் இடமளித்தார். அதுவே கார்மேகத்தின் வாழ்வில் திருப்புமுனை. அங்கு நடத்தப்பட்ட பிரவேச, பால, பண்டித வகுப்புகளில் தேர்ச்சிபெற்றார்.

பேராசிரியர் பணி

ஆ. கார்மேகக் கோனார், கல்லூரிப் படிப்பை முடித்ததும் அமெரிக்கன் கல்லூரியில். 1914- ஆம் ஆண்டு தன் 25- ஆம் வயதில், தமிழ்ப் பேராசிரியர் பணியில் சேர்ந்தார். தாம் பணியாற்றிய 37 ஆண்டுகளும்  சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் நன்மதிப்பைப் பெற்ற பேராசிரியராகத் திகழ்ந்தார். பொதுவுடைமைக் கட்சித் தலைவர் என். சங்கரய்யா, நிலச்சீர்திருத்தப் போராளி கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன், தமிழ்நாடு பொதுநூலகத் துறை இயக்குநராக இருந்த வே. தில்லைநாயகம் போன்றவர்கள்  ஆ. கார்மேகக் கோனாரிடம் பயின்றவர்கள். மேலும், சென்னை பல்கலைக் கழகப் பாடத்திட்டக் குழுவில் ஆ. கார்மேகக் கோனார் தொடர்ந்து 21ஆண்டுகள் தலைவராக இருந்தார். அமெரிக்கன் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவராக பதவி வகித்து,  1951- ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

எழுத்து

மாணவர்கள் உயர்வில் அக்கறை கொண்டிருந்த ஆ. கார்மேகக் கோனார் எளிதாகத் தமிழ் பயிலுமாறு பல பாடநூல்களை எழுதி வெளியிட்டார். அவை அமெரிக்கன் கல்லூரியில் மட்டுமில்லாமல் பல பல்கலைக்கழகங்களிலும் பாடநூல்கள் ஆகின. இவர் எழுதிய 'நல்லிசைப் புலவர்கள்' நூல் மிகவும் புகழ்பெற்றது. இந்நூல் சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம், திருவாங்கூர் பல்கலைக்கழகம், மைசூர் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இண்டர்மீடியட் தேர்வுக்குப் பாடமாக வைக்கப்பட்டிருந்தது. இது தவிர, 'அறிவு நூல் திரட்டு' (இரண்டு தொகுதிகள்), 'ஆபுத்திரன் அல்லது புண்ணியராஜன்', 'இதிகாசக் கதாவாசகம்' (இரண்டு தொகுதிகள்), 'கார்மேகக் கோனார் கட்டுரைகள்', 'கார்மேகக் கோனார் கவிதைகள்', 'கண்ணகி தேவி', 'காப்பியக் கதைகள்', 'செந்தமிழ் இலக்கியத் திரட்டு' போன்ற நூல்களை எழுதியிருக்கிறார். மதுரைக்காஞ்சி, மலைபடுகடாம் ஆராய்ச்சி, மூவருலா ஆராய்ச்சி போன்ற ஆராய்ச்சி நூல்கள் இவருக்கு பெருமை சேர்த்தன. இவை தவிர்த்து நூற்றுக்கணக்கான ஆய்வுக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இவர் எழுதியிருக்கும் 'பாலபோத இலக்கணம்', இலக்கணத்தை எளியமுறையில் மாணவர்களுக்கு போதிப்பதற்காக எழுதப்பட்டது. இவரது 'தமிழ்ச்சங்க வரலாறு' என்னும் கட்டுரை நூல் குறிப்பிடத்தக்க ஒன்று. பல்வேறு இலக்கியச் சான்றுகள் கொண்டு அக்காலத்தில் தமிழை ஆராயச் சங்கம் இருந்தது என்ற உண்மையை நிலைநாட்டி, பிற்காலத்தில் சங்கம் எவ்வாறு வளர்ந்தது என்பதையும் கார்மேகக் கோனார் அந்நூலில் விரிவாக விளக்கியிருந்தார்.

சொற்பொழிவு

ஆ. கார்மேகக் கோனார்,  சிறந்த சொற்பொழிவாளராகவும்  திகழ்ந்தார். சென்னை பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம், கரந்தைத் தமிழ்ச் சங்கம் போன்றவற்றில் இவர் ஆற்றிய சொற்பொழிவுகள் சிறப்பானவை. இவர் 'சிறப்புரை வித்தகர்' என்று தமிழறிஞர்களால் பாராட்டப்பெற்றார்.  ஆ. கார்மேகக் கோனார், மதுரை தமிழ்ச் சங்கம் நடத்திய விழா ஒன்றில் ஆற்றிய 'மலைப்படுகடாம்' பற்றிய சொற்பொழிவும், சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஆற்றிய 'பண்டை தமிழர் நாகரிகம்' என்ற தொடர் சொற்பொழிவுகளும் முக்கியமானவை. மேலும், இவர்    மதுரை திருவள்ளுவர் கழகத்தில், 1955- ஆம் ஆண்டு நடந்த ஐங்குறுநூறு மாநாட்டுக்குத் தலைமையேற்று ஆற்றிய சொற்பொழிவுகள் அறிஞர் பலரால் பாராட்டப்பட்டன. அச்சொற்பொழிவுகள் பின்னர் 'ஐங்குறுநூற்றுச் சொற்பொழிவுகள்' என்ற தலைப்பில் திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தாரால் நூலாக வெளியிடப்பட்டது.

பட்டம்

மதுரையில் 1955- ஆம் ஆண்டு சோமசுந்தர பாரதியார்  தலைமையில் நடைபெற்ற விழாவில் "செந்நாப்புலவர்".என்னும் பட்டத்தை   ஆ. கார்மேகக் கோனாருக்கு பி.டி. ராஜன்  வழங்கினார்.

ஆக்கங்கள்

ஆ. கார்மேகக் கோனார், கீழ்காணும் நூல்களை இயற்றியுள்ளார்;

  • அறிவு நூல் திரட்டு (2 தொகுதிகள் - உரைநூல்)
  • ஆபுத்திரன் அல்லது புண்ணியராஜன் (உரைநூல்)
  • கண்ணகி தேவி நூல்
    இதிகாசக் கதாவாசகம் (2 தொகுதிகள்)
  • ஐங்குறு நூற்றுச் சொற்பொழிவுகள்
  • ஒட்டக்கூத்தர்
  • கண்ணகி தேவி
  • காப்பியக் கதைகள்
  • கார்மேகக் கோனார் கட்டுரைகள்
  • கார்மேகக் கோனார் கவிதைகள்
  • செந்தமிழ் இலக்கியத்திரட்டு I
  • பாலபோத இலக்கணம்
  • மதுரைக் காஞ்சி
  • மலைபடுகடாம் ஆராய்ச்சி
  • மூவருலா ஆராய்ச்சி
  • தமிழ்ச்சங்க வரலாறு (கட்டுரை)
  • தமிழ்மொழியின் மறுமலர்ச்சி
  • நல்லிசைப் புலவர்கள் (உரைநூல்)

ஆ. கார்மேகக் கோனாரது படைப்புகளை தமிழ்நாடு அரசு நாட்டுடைமையாக்கி உள்ளது.

மறைவு

ஆ. கார்மேகக் கோனார், 1957- ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23- ஆம் நாள் மதுரையில் காலமானார்.

உசாத்துணை

  • தமிழ் வளர்த்த பெருமக்கள், என் ஸ்ரீநிவாசன், அல்லயன்ஸ் நூற்றாண்டு வெளியீடு


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.