under review

ஆஷாபூர்ணா தேவி

From Tamil Wiki
Revision as of 22:12, 6 April 2024 by Tamizhkalai (talk | contribs) (→‎விருதுகள்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
நன்றி:சொல்வனம்

ஆஷாபூர்ணா தேவி (ஆஷாபூர்ணா தேபி, ஜனவரி 8,1909 – ஜூலை 12,1995) வங்காள எழுத்தாளர், கவிஞர், சிறார் எழுத்தாளர். ஒரு நூற்றாண்டில் வங்க சரித்திரம், சமூகம் அடைந்த மாற்றங்களை, குறிப்பாக பெண்களைச் சுற்றிச் சுழலும் சரித்திரத்தின் போக்கை, ஏற்றத்தாழ்வுகளைத் தம் எழுத்துக்களில் இயல்பாகப் பதிவு செய்தார். நூற்றுக்கும் மேற்பட்ட நாவல்களையும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகளும், எழுதினார். அவரது படைப்புகள் வீடு என்ற அமைப்புக்குள் மனிதர்களின் மனங்கள் உரசும்போது ஏற்படும் திரிபுகளையும் அவை வெளிப்படுத்தும் நுண்ணிய வன்முறை, ஆதிக்கம் ஆகியவற்றையும் மையமாகக் கொண்டவை. பெண் கல்வியின் அவசியத்தையும், அவள் தன் சொந்த பலத்தால் விடுதலை பெறவேண்டியதன் தேவையையும் வலியுறுத்தியவை. 'ப்ரதொம் ப்ரதிஸ்ருதி' நாவலுக்காக ஞானபீடப் பரிசு பெற்றார். பத்மஸ்ரீ விருது உட்பட பல விருதுகளைப் பெற்றார். வங்காளத்தின் தலைசிறந்த பெண் எழுத்தாளர்களில் ஒருவராக மதிப்பிடப்படுகிறார்.

பிறப்பு, கல்வி

ஆஷாபூர்ணா தேவி வட கல்கத்தாவில் ஜனவரி 8,1909 அன்று ஹரேந்திரநாத் குப்தா-சரோளா தேவி இணையருக்குப் பிறந்தார். ஓவியரான ஹரேந்திரநாத் வடிவமைப்பாளராக புகழ்பெற்ற லாஸரஸ் கம்பெனியில் பணிபுரிந்தார். தாய் வாசிப்பில் ஆர்வமுடையவர். பள்ளிக்குச் சென்று கல்வி கற்க இயலாத சூழலில் அவருடைய சகோதரர்களுக்கு ஆசிரியர்கள் வீட்டிற்கே வந்து கற்பிக்கும்போது தானும் கற்றுக்கொண்டார். சிறுவயதிலிருந்தே வாசிப்பில் ஆர்வம் கொண்டிருந்தார். நூலகத்திலிருந்து வந்த புத்தகங்கள் மூலம் விடுதலைப் போராட்டம் மற்றும் சமூக மாற்றங்களை அறிந்து கொண்டார். 13 வயதில் ரவீந்திரநாத் தாகூருக்கு கடிதம் எழுதி, அவரிடம் பதிலும் பெற்றார்.

ஆஷாபூர்ணா சன் சகோதரிகளுடன் இணைந்து கவிதைகள் எழுதுவதிலும், வாசிப்பதிலும் ஈடுபட்டார். 1922-ல் அவர் எழுதிய 'பாய்ரே தாக்' (வெளியிலிருந்து அழைப்பு) என்ற கவிதை 'சிஷு சாத்தி' என்ற இதழில் வெளிவந்தது. அதன் ஆசிரியர் மேலும் கவிதைகள் அனுப்பும்படி ஆஷாபூர்ணாவை ஊக்குவித்தார்.

தனிவாழ்க்கை

ஆஷாபூர்ணா 1924-ல் பதினைந்து வயதில் காளிதாஸ் குப்தாவை மணந்தார். குடும்பத்துடன் கிருஷ்ணாநகரில் 1960 வரை வசித்தார். ஒரே மகன் சுஷாந்தா, மருமகள் நூபுர். பேத்திகள் ஷதரூபா, ஷததீபா.

இலக்கிய வாழ்க்கை

Asha2.jpg

ஆஷாபூர்ணா தேவி எழுதத் தொடங்கிய போது பழமைவாதத்திலும், அறியாமையிலும் இருந்த சமூகம் தேச விடுதலை, சமுதாய மறுமலர்ச்சிப் போராட்டங்களினால் விழிப்புணர்வு பெறத் தொடங்கியிருந்தது. பெண் எழுத்தாளர்களின் ஒரு நூற்றாண்டு நீண்ட மரபு அவரது எழுத்து வாழ்வுக்கு ஆதரவான சூழலை அளித்தது. தனக்கு மிகப் பரிச்சயமான வாழ்க்கையிலிருந்தே தான் பார்த்தவற்றை, அறிந்தவற்றை, உணர்ந்தவற்றை படைப்புகளாக ஆக்கினார்.

ஆஷாபூர்ணா தேவி சிறுவர்களுக்கான கதைகள் மூலம் தன் எழுத்துப்பயணத்தைத் தொடங்கினார். 'சோடா டாகுர்தார் காஷி யாத்ர' 1938-ல் வெளிவந்தது. முதல் சிறுகதை 'பத்னி ஓர் ப்ரெயோஷி' 1936-ல் ஆனந்த பஸார் பத்ரிகாவில் வெளியாகியது. முதல் நாவல் 'ப்ரெம் ஓர் ப்ரயோஜன்' 1944-ல் வெளிவந்தது. ஆஷாபூர்ணா 242 நாவல்கள், 3000 சிறுகதைகள், 62 குழந்தைகள் நூல்கள் எழுதினார்..

ஆஷாபூர்ணா தேவியின் கதைகள் பெரும்பாலும் மத்திய வர்க்கத்துக் குடும்பங்களைக் களமாகக் கொண்டவை. நான்கு சுவர்களுக்குள் உலவும் மனிதர்களின் மனங்கள் ஒன்றுடன் ஒன்று உரசும்போது கொள்ளும் மாற்றங்களையும் திரிபுகளையும் மையமாகக் கொண்டவை. கணவன் மனைவி மகன் மகள் என இரத்த உறவுகளுக்குள் மிக நுட்பமாக வெளிப்படும் வன்முறைகளும் ஆதிக்கமும் மெல்லிய அடக்குமுறைகளையும், ஒரு வினாடியில் தனக்கு மிகவும் நெருங்கிய, பலவருடம் கொண்டாடிய உறவு அந்நியமாக மாறிவிடும் விந்தையையும் அவர் தன் புனைவுகளில் கண்டடைகிறார்.

பெண்ணின் மீட்சி அவளிடமிருந்தே வரவேண்டும், கழிவிரக்கம் தேவையில்லை என்பதை 'கசாப்புக்காரர்கள்' போன்ற சிறுகதைகள் மூலம் வலியுறுத்தினார்.

ப்ரதொம் ப்ரதிஸ்ருதி', 'சுபொர்ணலதா', 'பகுல் கொதா'-தொடர் நாவல்கள்
Asha3.jpg

ஆஷாபூர்ணாதேவி அவருடைய மூன்றடுக்கு நாவல் தொடர் வழியாகவே அதிகமும் அறியப்பட்டவர். 'பிரதொம் பிரதிஸ்ருதி' (முதல் சபதம், தமிழில் புவனா நடராஜன்), 'சுபொர்ணலதா', 'பாகுல் கொதா' மூன்று தலைமுறை வங்காளப்பெண்களின் கதைகள்.

First promise
முதல் சபதம் (பிரதொம் பிரதிஸ்ருதி)(1964)
noolulam.com

நாவலின் முதல் பகுதியில் வங்காள கிராமத்தில் 19--ம் நூற்றாண்டின் இறுதியில் அந்தணக் கூட்டுக்குடும்பத்தின் ஆசாரங்களும், மூடநம்பிக்கைகளும், விழிப்புணர்வின்மையும் நிறைந்த, பெண் புத்தகத்தைத் தொடுவதையே பாவமாகக் கருதிய வாழ்க்கைமுறை சத்தியவதி என்னும் சிறுமியின் பார்வையில் விரிகிறது. சத்தியவதி யாரும் அறியாமல் தானே படிக்கக் கற்கிறாள். வங்க மறுமலர்ச்சியின் பின்புலத்தில் திருமணத்துக்குப்பின் தன் கணவனை ஆங்கிலக் கல்வி பெறச் செய்து, மூடக்கட்டுகளிலிருந்து தன்னையும், சார்ந்தோரையும் விடுவிக்க சத்தியவதி மேற்கொள்ளும் முயற்சிகளும் அதில் அவள் சந்திக்கும் எதிர்ப்பும் தடைகளும் கூறப்படுகின்றன. தடைகளை மீறி நகரில் குடிபுகுந்து, பகுதி நேர ஆசிரியையாகித் தன் குழந்தைகள் கல்வி பெற வழி செய்கிறாள். பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கெதிராகக் குரல் கொடுக்கிறாள். தன் மகளுக்கு கல்வியளிக்கவும், பதினாறு வயதிற்குமேல் திருமணம் செய்யவும் செய்து கொண்ட உறுதியை மீறி, சத்யவதியின் கணவன் வீட்டார் மகள் சுபொர்ணலதாவுக்கு அறியாமல் பால்ய விவாகம் செய்ததை அறிந்ததும் தன் முதல் சபதம் நிறைவேறாமல் வீட்டைத் துறந்து தன் துறவுபூண்ட தந்தை இருக்கும் காசிக்குச் செல்கிறாள்.

இந்நாவலுக்காக ஆஷாபூர்ணா தேவி ஞானபீடப் பரிசைப் பெற்றார்.

ஆங்கிலத்தில் 'The First Promise' என்ற பெயரில் இந்திரா சௌத்ரியால் மொழியாக்கம் செய்யப்பட்டது. 2003-ல் புவனா நடராஜனின் தமிழ் மொழியாக்கம் 'முதல் சபதம்' வெளிவந்தது.

சுபொர்ணலதா(1967)

சத்யவதியின் மகள் சுபொர்ணலதா பழமைவாத சமூகச் சூழலில் தன் கணவன் வீட்டில் படும் இன்னல்களின் ஊடே தன் தாய் விரும்பியவண்ணம் தன் பலத்தால் மெல்ல மேலெழுகிறாள்.

பாகுல் கொதா (பகுளின் கதை) (1974)

சுபோர்ணலதாவின் மகள் பாகுல் விடுதலைபெற்ற பெண்களின் தலைமுறையைச் சேர்ந்தவள். தனக்கு அடுத்த தலைமுறையில் சமத்துவத்திற்கும், ஆதிக்கத்திற்கும் உள்ள மெல்லிய கோட்டைத் தாண்டி, பெண் விடுதலை அறம்சார்ந்த சீரழிவுக்கு இட்டுசெல்வதை உணர்ந்தபடியே தன் தாயும், அவளது தாயும் போராடிப் பெற்ற பெண் விடுதலை இதற்காகவா என்ற கேள்வியுடன் மூன்று தலைமுறைப் பெண்களின் கதை முடிகிறது.

ஆஷாபூர்ணா தேவியின் படைப்புகளின் திரை வடிவம்

இவரது ‘பாலுசோரி’ நாவல், ‘அபராஜிதா’ என்ற பெயரில் தொலைக்காட்சித் தொடராக வெளிவந்தது. ப்ரதம் பிரத்ஸ்ருதி, சுபோர்ணலதா இரண்டும் ஹிந்தி தொலைக்காட்சித் தொடர் வடிவம் கண்டன. 'ஜோக் பியோக்'(உறவும் பிரிவும்) நாவலைத் தழுவி பல தரைப்படங்கள் எடுக்கப்பட்டன. அக்னி பரீக்ஷா (வங்காளத்தில்(1953) அதே பெயரிலும், மாங்கல்ய பலம், மஞ்சள் மகிமை(1959), சோடி சி முலாகாத்(1967) என்ற பெயர்களில் முறையே தெலுங்கிலும் தமிழிலும் ஹிந்தியிலும் திரைப்படமாக்கப்பட்டன.

இலக்கிய இடம்

ஆஷாபூர்ணா குடும்பங்களைப் பற்றிய கதைகளையே எழுதுபவர் என்றும் ‘சமையலறை எழுத்தாளர்’ என்றும் விமர்சிக்கப்பட்டார். நவீன முற்போக்கு இலக்கியம் எழுந்த காலகட்டத்தில் இவரின் கதைகள் குடும்பம் என்ற பழமைவாதத்தை மீண்டும் நிலைநிறுத்தப் பார்க்கின்றன என்று தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டார். ஆஷாபூர்ணா தேவியின் படைப்புலகின் பெண்களின் பயணம் குடும்பம் என்னும் அமைப்புக்குள் இருந்துகொண்டே தம் அகவிடுதலையை நோக்கியதாக இருந்தது. அரசியல் பிரதிநிதித்துவமோ, போராட்டக் குரல்களாகவோ இல்லாமல் ஆஷாபூர்ணாவின் படைப்புகள் மனங்களை மையப்படுத்திய ஒரு குரலாக ஒலித்தன. அவரது சிறுகதைகள் இருபதாம் நூற்றாண்டில் வங்கச் சமூகம் அடைந்த மாற்றத்தின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை அளிக்கின்றன.

"ஆஷாபூர்ணா தேவியின் படைப்புகளைப் பெண்ணியக் கதைகளாகவோ அல்லது குடும்பக் கதைகளாகவோ மட்டும் பார்ப்பது அவரது படைப்புத் தன்மையை சிற்றளவும் புரிந்துகொள்ளப்படாத பார்வையாகவே இருக்க முடியும். அவரது எண்ணற்ற சிறுகதைகள் மனித மனங்களின் ஆழம் சென்று அவனின் தன்னுணர்வற்ற நிலையுடன் விசாரணை செய்கிறது. அடிப்படையில் உறவுகள் செயல்படும் விதத்தைக் கூர்தீட்டிப் பார்க்கிறது. சொந்த அனுபவத்தினாலும் அவரது தன் இயல்பினாலும் அவர் கதைகள் அடைபட்ட ஒரு சிறு இடத்திற்குள் நின்றபடி காலத்தை அண்ணாந்து பார்க்கிறது. இங்கிருந்து ஒரு நூலை எறிந்து பல்லாண்டுகளாக வாழும் ஒரு இனத்தின் சிடுக்குகளை விடுவிக்க முயல்கிறது" என்று எழுத்தாளர் நரேன் குறிப்பிடுகிறார்.

அவரது படைப்புகளில் நான்கு சுவர் கொண்ட வீடு மனித ஆழ்மனதின் உருவகமாக மாறுகிறது. கல்கத்தா எனும் மாபெரும் நகரத்தின் நெரிசலில் சின்னஞ்சிறிய தெருக்களுக்குள் அண்டிக்கொண்டிருக்கும் குடும்பங்களின் தனிப்பட்ட வாழ்வினூடாக மனித மனம் செயல்படும் விதங்கள் ஆராயப்படுகின்றன. நான்கு சுவர்களுக்குள் அவரவர்களின் ‘தான்’ என்ற உணர்வும், நியாயங்களும், ஆசைகளும் கோபங்களும்,கையறுநிலையும் ஒன்றுடன் ஒன்று மோதும்போது ஏற்படும் இறுக்கமும் தனிமைப்படுத்தலும் காட்சிப்படுத்தப்படுகின்றன. "இவ்விடங்களில் பூதக்கண்ணாடி அணிந்த பொற்கொல்லரின் கூர்மையை அவர் அடைகிறார். நகைவார்ப்பின் நுணுக்கமான கலைவண்ணத்தை தன் மொழியில் வெளிப்படுத்துகிறார்" என்றும் "வேடங்கள் இல்லாமல் நம்மை நாமே பார்த்துக்கொள்ளும் ஒரு தருணத்தை இந்தக் கதைகள் நமக்கு அளிப்பதே இவற்றின் முதன்மைக் கொடை" என்றும் சுசித்ரா குறிப்பிடுகிறார்.

நவீன யுகத்தில் மனிதனின் தனிமையும் சில கதைகளில் பேசப்படுகிறது. மனிதன் தனிமையானவன் என்பதும் அவ்வுண்மையைத் தன்னிடமிருந்து மறைக்கும் பொருட்டே உறவுகளின் பின்னால் தன்னை ஒளித்துக்கொள்கிறான் என்பதையும் ஒரு தரிசனமாக அவர் படைப்புகள் கண்டடைகின்றன.

அவரது மூன்று தொடர் நாவல்களும் நூறாண்டுகால வங்காளத்தின் வரலாற்றுச் சித்திரத்தை அளிக்கின்றன. சரித்திரங்களையும், சமுதாய மாற்றங்களையும் ஏற்படுத்தியதில் பெண்களின் முதல் குரலை, ஆரவாரமில்லத பங்களிப்பைப் பேசிய பெண்ணியப் பிரதிகளாக மதிப்பிடப்படுகின்றன. 'ப்ர்தொம் ப்ரதிஸ்ருதி' வங்காளத்தின் தலைசிறந்த நாவல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. "வானப்பிரஸ்த நிலை... அதையும் மீறிய சமூகப்பணி எனக் குடும்ப அமைப்பைத் துறந்து பெண் வெளியேறும் முதல் கலகக் குரலாய் -18,19-ம் நூற்றாண்டின் காலச் சூழலில் ஒலித்திருப்பது சத்தியவதியின் குரல் என்பதால் இதை முதல் சபதமாக்கியிருக்கிறார் ஆஷாபூர்ணாதேவி. குறிப்பிட்ட இந்த நாவல் பின்புலத்தின் காலகட்டத்தில் இவ்வாறான ஒரு முடிவு நம்மை பிரமிக்க வைக்கிறது" என்று எம்.ஏ. சுசீலா குறிப்பிடுகிறார்.

ஞானபீடப் பரிசு பெற்ற வங்க எழுத்தாளர்களை சிறப்பிக்கும் தபால்தலை

மறைவு

ஆஷாபூர்ணாதேவி ஜூலை 12,1995 அன்று காலமானார்.

நினைவேந்தல்

2009-ல் அவரது நூறாண்டு நிறைவைக் குறிக்கும் முகமாக அவரைப் பற்றிய ஆவணப்படத்தை தூர்தர்ஷன் ஒளிபரப்பியது.

விருதுகள்

  • கல்கத்தா பல்கலைக்கழகத்தின் லைலா பரிசு
  • பூபன் மோஹினி தாஸ் தங்கப்பதக்கம்
  • மேற்கு வங்க அரசின் ரவீந்திரர் விருது
  • பங்கிய சாஹித்ய பரிஷதின் ஹரநாத் கோஷ் பதக்கம்
  • கல்கத்தா பல்கலைக்கழகத்தின் ஜகத்தாரினி தங்கப் பதக்கம்
  • ஞானபீட விருது (1976),
  • பத்மஸ்ரீ விருது (1976)
  • விஷ்வ பாரதி பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட தேசிகோத்தம் விருது -(1989)
  • சாகித்ய அகாதமி விருது -(1994)
  • ஜபல்பூர், புர்த்வான், ரவீந்திர பாரதி பல்கலைக்ககங்களின் D Litt பட்டம்
  • சாகித்ய அகாதமியின் புத்தாய்வு நிதிநல்கை( fellowship)(1994)

முக்கியமான படைப்புகள்

நாவல்கள்
  • ப்ரதொம் ப்ரதிஸ்ருதி
  • சுபொர்ணலதா
  • பாகுள் கொதா
தொகுப்புகள்

பத்து தொகுதிகள் (ரசனாபொலி)

ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டவை
  • The First Promise by Indira Chowdhury
  • The Wife And The Beloved And Other Stories by Sanjukta Das
  • The Matchbox by Monabi Mitra
  • The Mystery That Is Woman by Ruma Chakravarti
  • Shake The Bottle And Other Stories by Anurava Sinha

உசாத்துணை

இணைப்புகள்


✅Finalised Page