ஆத்மாநாம்
To read the article in English: Atmanam.
ஆத்மாநாம் (ஜனவரி 18, 1951 - ஜூலை 06, 1984)] கவிஞர், மொழிபெயர்ப்பாளர், கட்டுரையாளர், விமர்சகர். 'ழ' என்ற கவிதை ஏட்டின் ஆசிரியர். தமிழ் நவீனக் கவிதைகளில் முதன்மை ஆளுமைகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
பிறப்பு, கல்வி
ஆத்மாநாம் சென்னையில் ஜனவரி 18, 1951-ல் பிறந்தார். இயற்பெயர் எஸ்.கே.மதுசூதன். அம்பத்தூரில் சர் ராமசாமி முதலியார் உயர்நிலைப் பள்ளியில் கல்வி பெற்று பிறகு வைஷ்ணவா கல்லூரிக்குச் சென்றார். ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பட்டப்படிப்பை (B. Com) அதே கல்லூரியில் மாலை வகுப்புகளில் சேர்ந்து படித்தார். அம்பத்தூர் சர் ராமசாமி முதலியார் உயர்நிலைப் பள்ளியிலும் அரும்பாக்கம் து.கோ.வைணவக் கல்லூரியிலும் (பிகாம்) பயின்றார்.
தனி வாழ்க்கை
ஆத்மாநாமின் தாய்மொழி கன்னடம். 1967-ஆம் ஆண்டு சதர்ன் சுவிட்ச்கியர்ஸ் என்ற கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தார். 1968-ஆம் ஆண்டு வேலையை விட்டுவிட்டு கணக்காயர் அலுவலகத்தில் பயிற்சிக்கு சேர்ந்தார். கோரமண்டல் கார்மெண்ட்ஸ் என்ற நிறுவனத்தில் பணியாரற்றிய பின் 1971- ல் ஆயத்த உடைகள் தயாரிக்கும் நிறுவனமான ரெங்கா அப்பாரெல்ஸ்க்கு மாறினார். 1978-ஆம் ஆண்டு அய்யப்பன் என்பவருடன் சேர்ந்து டாப்டென் என்ற ஆயத்த உடைகளை ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தை உருவாக்கினார்.
Affective Disorder என்ற மனநலத் தாக்குதல் ஏற்பட்டு 1979-ல் புரசைவாக்கத்திலிருக்கும் தனியார் மருத்துவமனையில் ஒரு மாதம் சிகிச்சை பெற்றார். சிகிச்சைக்குப் பிறகு இன்டர் கிராப்ட் என்ற கம்பெனியில் பணிபுரிந்தார். ஆத்மாநாம், Lithium, Hyportrym, Largatyl, Fenargon போன்ற மருந்துகளைத் தொடர்ந்து சாப்பிட வேண்டியிருந்தது. 1983-ஆம் ஆண்டு தனக்கு சிகிச்சைக்காகத் தரப்பட்ட மருந்துகளையே அளவுக்கு அதிகமாக உட்கொண்டு தற்கொலை செய்துகொள்ள முயன்றார். காப்பாற்றப்பட்டார். 1983-ஆம் ஆண்டு டிசம்பர் இறுதியில் Affective Disorderன் இரண்டாவது தாக்குதல் ஆத்மாநாமுக்கு ஏற்பட்டது. 1984 ஜனவரி இறுதிவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. 1984-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முழுவதும் அவர் பெங்களூரில் அவரது சகோதரர் ரகுநந்தனின் வீட்டில் இருந்தார். மார்ச் 9ஆம் தேதி (1984) தனக்குத் தரப்பட்ட மருந்துகளை உட்கொண்டு இரண்டாவது முறையாகத் தற்கொலை செய்ய முயன்றார். பின்னர் National Institute of Mental Health and Neurological Sciences மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 1984-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் தேதியிலிருந்து 20 வரை NIMHANSல் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். ஏறத்தாழ ‘உயிரற்ற மனித உடம்பாக’ ஆத்மாநாம் வீடு திரும்பியதாக அவரது சகோதரர் ரகுநந்தன் குறிப்பிட்டார் (பிரம்மராஜன் எழுதிய குறிப்புகள்).
இதழியல்
நவீனக் கவிதைக்காக, 'ழ’ என்ற ஒரு முன்னோடி இதழைத் தொடங்கி, 24 இதழ்களைக் கொண்டு வந்தார்.ழ' கவிதை இதழின் ஆசிரியராக இருந்தபோதே அவர் '2083 ஒரு அகால ஏடு' என்ற, ஒற்றைத் தாளில் அச்சிடப்பட்ட ஒரு இதழைத் துவக்கினார்.
இலக்கிய வாழ்க்கை
மொழியாக்கம்
பிரெஞ்சுக் கவிஞர் ஆர்தர் ரைம்போவின் சில கவிதை மொழிபெயர்ப்புகளை முழுமையாக்காது பென்சிலில் எழுதி வைத்திருந்தார் ஆத்மாநாம். 'எல்சால்வாடாரில் காணாமல் போன நினாவுக்கு’ என்ற லத்தீன் அமெரிக்கக் கவிதையை மொழி பெயர்த்துள்ளார். பெர்டோல்ட் ப்ரக்டின் கவிதைத் தேர்வொன்றிற்கு அவர் திட்டம் வைத்திருந்தார். ஆனால் அதில் ஒரு கவிதையை மாத்திரமே மொழிபெயர்த்து முடித்திருந்தார். அந்தோனின் பார்த்துஸெக் என்ற கிழக்கு ஐரோப்பியக் கவிஞரின் சில கவிதை மொழிபெயர்ப்புகளை செய்திருந்தார்.
நூல்மதிப்புரைகள்
புத்தக விமர்சனங்களை எழுதுவதிலும், பொறுப்பும் ஈடுபாடும் ஆத்மாநாமுக்கு இருந்தது. விமலாதித்த மாமல்லனின் சிறுகதைத் தொகுப்பிற்கும், ஆனந்தின் 'இரண்டு சிகரங்களுக்கு இடையே' என்ற குறுநாவலுக்கும் அவர் எழுதிய மதிப்புரைகள் மீட்சி இதழில் வந்தன.
கவிதைகள்
ஆத்மாநாம் எழுதியவையாக 156 கவிதைகள் கிடைத்துள்ளன. ஆத்மாநாம் 1981-ல் 'காகிதத்தில் ஒரு கோடு' என்னும் தலைப்பில் தன் 37 கவிதைகளை ழ வெளியீடாக கொண்டுவந்தார். 1989 ஆம் ஆண்டு பிரம்மராஜன் (தன்யா-பிரம்மா வெளியீடாக) ஆத்மாநாம் கவிதைகள் என்னும் தலைப்பில் எஞ்சிய கவிதைகளை தொகுத்து ஒரு முழுத்தொகுப்பை வெளியிட்டார். பின்னர் 2002-ல் காலச்சுவடு வெளியீடாக ஆத்மாநாம் எழுதிய 156 கவிதைகள் ஒரு தொகுப்பாக வெளிவந்தன. ஆத்மாநாம் கவிதைகளை தொகுத்து வெளியிட்டும், ஆத்மாநாம் பற்றிய மதிப்பீடுகளை உருவாக்கியும் தமிழ்ச்சூழலில் ஆத்மாநாமை நிலைநிறுத்தியவர் அவருடைய நண்பரான கவிஞர் பிரம்மராஜன்.
கவிஞர் ஆத்மாநாம் விருது
கவிஞர் ஆத்மாநாமின் இலக்கியப் பங்களிப்புகளை நினைவூட்டும் வகையில் மெய்ப்பொருள் பதிப்பகம் 'கவிஞர் ஆத்மாநாம் அறக்கட்டளை’யைக் கடந்த 2015-ஆம் ஆண்டு தொடங்கி ஆண்டுதோறும் கவிஞர் ஆத்மாநாம் பெயரில் ரூ.25,000 பரிசுத்தொகையும் விருதும் வழங்கி வருகிறது.
மறைவு
ஆத்மாநாம், அஃபெக்ட்டிவ் டிஸார்டர் என்ற மனமுறிவு நோய்க்குள்ளாகி, 1979 முதல் மருத்துவ சிகிச்சை எடுத்துவந்தார் என்று அவர் நண்பர் ஸ்டெல்லா புரூஸ் சொல்கிறார். ஆத்மாநாம் நோய் முதிர்ந்து ஜூலை 06, 1984-ல் கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்துகொண்டார்.
இலக்கிய இடம்
ஆத்மாநாம் தமிழ் நவீனக் கவிதையில் எழுத்து கவிதை இயக்கம், வானம்பாடி கவிதை இயக்கம், அதன் பின் கசடதபற காலகட்டம் ஆகியவற்றுக்குப்பின் அடுத்த காலகட்டத்தை தொடங்கிவைத்தவர் என மதிப்பிடப்படுகிறார். அரசியல்சார்பு, அகவயமான குரல் ஆகிய இரண்டும் அமைந்தவை அவருடைய கவிதைகள். நவீனக் கவிதையில் இருந்த படிமங்கள் சார்ந்த இறுக்கத்தை உடைத்து உரையாடல்தன்மை கொண்ட கவிதைகளையும் நுண்சித்தரிப்புத் தன்மை கொண்ட கவிதைகளையும் எழுதினார். "தமிழில் முந்தைய இரு கவிமரபுகளும் உருவாக்கிய உணர்ச்சிகலவாத இறுக்கத்தை தவிர்த்து உணர்வுகள் வெளிப்படும் மொழி, பகடிமொழி ஆகியவற்றை கவிதைகளில் கையாண்டார்.பிறப்பு, வளர்ப்பு, தேசம், மொழி, ஜாதி, மதம் இவற்றின் குறுகல்கள் தாண்டிய முகம் இவருடையது. ஒரு தமிழ் நகரத்தில் வாழ்ந்த தமிழனின் நவீனக்கவிதைகளாக இவை இருக்கின்றன. இந்தக் கவிதைகளின் வேர் இந்த மண்ணில் இருக்கிறது. இந்த மண்ணின் வேதனை இந்தக் கவிதையிலும் இருக்கிறது" என்று எழுத்தாளர் சுந்தர ராமசாமி குறிப்பிடுகிறார்.
படைப்புகள்
- ஆத்மாநாம் படைப்புகள் (பதிப்பாசிரியர் பிரம்மராஜன்)
உசாத்துணை
- ஆத்மாநாம் என்றொரு சாதனைக் கலைஞன்!
- ஆத்மாநாம் கவிதைகள்
- ஆத்மாநாம் நேர்காணல் - பிரம்மராஜன்
- ஆத்மாநாம் விருது விழா உரை
- ஆத்மாநாம் கவிதைகள் - சுந்தர ராமசாமி
- ஆத்மாநாம் பிரம்மராஜன் உரையாடல்
- ஆத்மாநாம் கவிதைகள் பிரமிள் இணையப்பக்கம்
- ஆத்மாநாம் படைப்புகள், அழியாச்சுடர்கள்
- ஆத்மாநாம் படைப்புகள் பற்றி ஆத்மார்த்தி
- என் நண்பர் ஆத்மாநாம் ஸ்டெல்லா புரூஸ். சொல்வனம்
- ஆத்மாநாம் நினைவுகள் எஸ்.வைத்தீஸ்வரன்
- ஆத்மாநாம் கவிதைகள் விமர்சனக்குறிப்பு
- மொழியின் கனவு கவிதை - சங்கர்ராமசுப்ரமணியன்
- பிரம்மராஜன் ஆத்மாநாம் பேட்டி
- ஆத்மாநாம் கவிதைகள் பெருந்தேவி
✅Finalised Page