அ.ச.ஞானசம்பந்தன்

From Tamil Wiki
அ.ச.ஞானசம்பந்தன்

அ.ச.ஞானசம்பந்தன் ( ) தமிழறிஞர், சைவ அறிஞர். புகழ்பெற்ற மேடைப்பேச்சாளராகவும் மரபிலக்கிய ஆய்வாளராகவும் திகழ்ந்தார்.

பிறப்பு கல்வி

அ. ச. ஞானசம்பந்தன் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கல்லணைக்கருகில் உள்ள அரசன்குடி என்ற ஊரில் புகழ்பெற்ற தமிழறிஞரான அ. மு. சரவண முதலியார் மற்றும் சிவகாமி இணையருக்கு பிறந்தார். அவரது தந்தை அ.மு.சரவண முதலியார் பெருஞ்சொல்விளக்கனார் என பட்டம் பெற்ற தமிழறிஞர். அவர் ஒரு துணிக்கடை நடத்திக்கொண்டிருந்தார். அப்போது ந.மு.வேங்கடசாமி நாட்டார் தொடர்பு ஏற்பட்டது. ஏற்கனவே இலக்கணநூல்களையும் கம்பராமாயணத்தையும் படித்திருந்த சரவண முதலியார் வேங்கடசாமி நாட்டாருடன் இணைந்து திருவிளையாடல் புராணத்திற்கு உரையெழுதி வெளியிட்டார். பின்னர் லால்குடி போர்டு உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றினார்.

அ..ச.ஞானசம்பந்தன் தந்தையிடம் தொடக்க கல்வியை பெற்றார். பின்னர் லால்குடி போர்டு உயர்நிலைப் பள்ளியில் உயநிலைக் கல்வி முடித்து 1935ல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பாடத்தில் இண்டர்மீடியட் படித்தார். அண்ணாமலைப் பல்கலையில் தமிழ்ப் பேராசிரியராக இருந்த நாவலர் சோமசுந்தர பாரதியார் அவரது தமிழ் அறிவை அடையாளம் கண்டு அவரை இயற்பியலில் இருந்து தமிழுக்கு மாறும்படி செய்தார். அக்கல்லூரியில் படிக்கும் போது வி.எஸ்.ஸ்ரீனிவாச சாஸ்திரி , திரு.வி. கல்யாணசுந்தர முதலியார், ரா.ராகவையங்கார் ,தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் போன்ற தமிழ் அறிஞர்களின் தொடர்பு கிடைத்தது. அண்ணாமலை பல்கலையில் தமிழில் இளங்கலையும் முதுகலையும் பயின்றார்.

தனிவாழ்க்கை

அ.ச.ஞானசம்பந்தன் 1940 தன்னுடன் படித்த ராஜம்மாளை காதலித்து பலவகை எதிர்ப்புகள் நடுவே சென்னையில் டாக்டர் தர்மாம்பாள் தலைமையில் நடந்த விழாவில் மணந்துகொண்டார். அவர்களுக்கு மெய்கண்டான்,சரவணன் என இரு மகன்களும் சிவகாமசுந்தரி, பங்கயச்செல்வி, அன்புச்செல்வி, மீரா என்னும் மகள்களும் உள்ளனர்.

தமிழில் முதுகலைப் பட்டம் பெற்று 1942ல் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராக வேலையில் சேர்ந்தார். அக்கல்லூரியில் 1956 வரை வேலை பார்த்தார். அதன்பின் சென்னை அகில இந்திய வானொலியில் நாடகத்தயாரிப்பாளராக பணியேற்றார். 1959 முதல் தமிழ்நாடு அரசின் செய்தித்துறையின் மொழிபெயர்ப்புத்துறை இணை இயக்குநராக பணியாற்றினார். தமிழ் வெளியீட்டுத்துறை இணை இயக்குநராகவும் பணியாற்றினார். 1967 முதல் 1970 வரை தமிழ்வளர்ச்சித்துறை இயக்குநராகப் பணியாற்றினார். 1971ல் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் மதுரை பல்கலை துணைவேந்தரானபோது அவர் அழைப்பின்பேரில் மதுரை பல்கலை தமிழ்த்துறை தலைவராக பணியில் சேர்ந்தார். 1973ல் ஓய்வுபெற்றார்

இறுதிக்காலத்தில் நீரிழிவு நோயால் கண்பார்வை பாதிக்கப்பட்டு படிப்படியாக முழுமையாகவே பார்வையை இழந்தார். உதவியாளரை கொண்டு எழுதச்செய்து தன் நூல்களை எழுதினார்.

இலக்கியவாழ்க்கை

சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் படிக்கையில் திரு.வி. கல்யாணசுந்தர முதலியார் அ.ச.ஞானசம்பந்தனுக்கு தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் ஐ அறிமுகம் செய்துவைத்தார். தெ,பொ.மீனாட்சிசுந்தரனாரை தன் ஆசிரியராக ஏற்றுக்கொண்டார் அ.ச.ஞானசம்பந்தன்.

கலியாளராக புகழ்பெற்றிருந்த அ.ச.ஞானசம்பதன் ம.ரா.பொ.குருசாமி, ப.இராமன், ந,சஞ்சீவி போன்று பின்னாளில் புகழ்பெற்ற மாணவர்களை உருவாக்கியவர்.திறனாய்வு என்னும் சொல்லை அறிமுகம் செய்தது அவரே. 1967 முதல் 1970 வரை தமிழ்வளர்ச்சித்துறை இயக்குநராகப் பணியாறிய காலகட்டத்தில் அனைத்து படிப்புகளையும் தமிழில் கொண்டுவரும் நோக்குடன் 350க்கும் மேற்பட்ட அறிவியல் மற்றும் வரலாற்றுப் பாடநூல்களை தமிழாக்கம் செய்து வெளியிட்டார். அந்நூல்கள் இன்றும் தமிழின் முக்கியமான அறிவுத்தொகையாக திகழ்கின்றன.

பேச்சாளர்

அ.ச.ஞானசம்பந்தனின் தந்தை சைவச் சொற்பொழிவாளர். தந்தையுடன் சொற்பொழிவுகளுக்குச் செல்லத் தொடங்கிய அ.ச.ஞானசம்பந்தன் தன் ஒன்பதாவது வயதில் துறையூர் சைவமாநாட்டில் முதல் உரையை நிகழ்த்தினார். பதினொன்றாவது வயதில் தூத்துக்குடி சைவசித்தாந்த மாநாட்டில் பேசியதை வ.உ.சிதம்பரம் பிள்ளை, ரா.பி.சேதுப்பிள்ளை ஆகியோர் பாராட்டினர். அதுமுதல் அவர் தொடர்ந்து மேடையில் பேசிக்கொண்டே இருந்தார்.

புகழ்பெற்ற மேடைப்பேச்சாளராகத் திகழ்ந்த அ.ச.ஞானசம்பந்தன் பட்டிமன்றம் என்னும் சொல்லை அறிமுகம் செய்தார். பட்டிமன்றத்தில் கம்பராமாயணம் பற்றி விவாதிக்கும் மரபை உருவாக்கினார். 1940ல் காரைக்குடி கம்பன் கழகம் கம்பன் அடிப்பொடி சா.கணேசன் முயற்சியால் தொடங்கப்பட்டது முதல் 1985 வரை அ.ச.ஞானசம்பந்தம் எல்லா விழாக்களிலும் கலந்துகொண்டு கம்பனைப் பற்றிப் பேசியிருக்கிறார்

நூல்களை எழுதுதல்

அ.ச.ஞானசம்பந்தன் சொற்பொழிவாளராகவே செயல்பட்டார், அவருடைய சொற்பொழிவுகளே நூல்வடிவம் கொண்டன. 1955ல் பத்துநாள் சொற்பொழிவுக்காக யாழ்ப்பாணம் சென்றபோது திடீரென்று குரலை இழந்தார். யாழ்ப்பாணம் யோகர் சுவாமிகள் என்னும் யோகியைச் சந்தித்தபோது குரல் திரும்பக் கிடைத்தது என அவர் பதிவுசெய்திருக்கிறார். அவர் ஆணைப்படியே கம்பராமாயணம், பெரியபுராணம் ஆகியவற்றுக்கான உரைகளை எழுதினார்.

பெரியபுராண பதிப்புப் பணி

வி.ஐ.சுப்ரமணியம் கூறியதன்பேரில் பெரியபுராணத்திற்கு விரிவான ஆய்வுநூல்கள் இரண்டை எழுதினார். 1992ல் அமெரிக்கா சென்றிருந்தபோது உருவான எண்ணத்தின்படி டி.எஸ்.தியாகராஜன் உதவியுடன் சேக்கிழார் ஆய்வுமையம் என்னும் அமைப்பை தொடங்கினார். திரு.வி.கல்யாணசுந்தர முதலியார் உரையுடன் பெரியபுராணத்தை வெளியிடவேண்டும் என முடிவுசெய்தார்கள். ஆனால் அதைச் செய்வதாக இருந்த ஆய்வாளர் எம்.வி.ஜெயராமன் திடீரென மறையவே பணி நின்றது. காஞ்சி சங்கரமடம் தலைவர் சந்திரசேகர சரஸ்வதி ஆசியுடன் அதைச் செய்து முடித்ததாக அ.ச.ஞானசம்பந்தன் குறிப்பிட்டிருக்கிறார்

அ.ச.ஞானசம்பந்தனின் பெரியபுராண ஆய்வுகள் சைவசித்தாந்த மரபின் முக்கியமான அறிவுத்தொகையாக கருதப்படுகின்றன. சைவநாயன்மார்களின் வரலாறாக மட்டுமன்றி அந்நூலை சைவசமயத்தின் வரலாறு, சைவமரபுகள், வழிபாட்டுமுறைகள் ஆகியவற்றை பற்றிய விரிவான ஆய்வாக அமைத்திருக்கிறார்.

கம்பராமாயண பதிப்புப்பணி

சென்னை கம்பன் கழகம் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் தலைமையில் வெளியிட்ட கம்பரமாயணப் பதிப்பை தெ.ஞானசுந்தரத்துடன் இணைந்து செம்மைசெய்தார். கோவை கம்பன்கழகம் வெளியிட்ட கம்பராமாயணப் பதிப்பிலும் பதிப்பாசிரியராகச் செயல்பட்டார். கம்பன் பற்றி பல ஆய்வுநூல்கள் எழுதினார்.

பிறநூல்கள்

திருவாசகத்திற்கு இரண்டாயிரம் பக்கங்களில் எழுதிய உரை அ.ச.ஞானசம்பந்தன் நூல்களில் மிகப்பெரியது .பார்வை மறைந்தபின் உதவியாளரிடம் சொல்லி எழுதப்பட்டது இது. திருக்குறள், தொல்காப்பியம் இரண்டையும் ஆய்வுசெய்யவேண்டும் என திட்டமிட்டிருந்தாலும் கம்பராமாயணம் பெரிய புராணம் இரண்டில் இருந்தும் அவரால் விலக இயலவில்லை. அதற்கு யோகன் சுவாமிகள் சொன்ன சொற்களே காரணம் என பதிவுசெய்திருக்கிறார். (நான் கண்ட பெரியவர்கள்)

தமிழிசை

இளமையிலேயே பண்ணிசையில் ஈடுபாடு கொண்டிருந்தார் அ.ச.ஞானசம்பந்தம். இசையறிஞர் எஸ்.ராமநாதன் அவருடன் அண்ணாமலை பல்கலையில் பயின்றவர். சென்னை வானொலியில் பணியாற்றும்போது ஏ.பி.கோமளா திருப்பாவை திருவெம்பாவை பாடல்களைப் பாட அ.ச.ஞானசம்பந்தன் அவற்றுக்கு உரையளித்தார். எஸ்.ராமநாதன் இசையமைப்பில் ஆய்ச்சியர் குரவையை இசைப்பாடல்களாக ஆக்கி ஒலிபரப்பினார். மணிமேகலை, கம்பராமாயணம், சிலப்பதிகாரம் ஆகியவற்றை இசைநாடகங்களாக ஆக்கியிருக்கிறார். அவற்றில் புகழ்பெற்ற தமிழிசையறிஞர் எம்.தண்டபாணி தேசிகர் இசையமைத்தார்.

விருதுகள் ]

  • சாகித்திய அகாதமி விருது - 1985 (கம்பராமாயணம் ஒரு புதிய பார்வை)
  • சங்கப்பலகை குறள் பீடம் விருது - தமிழக அரசு விருது - 2001

மறைவு

அ.ச.ஞானசம்பந்தன் 7 ஆகஸ்ட் 2002ல் மறைந்தார்

நூல்கள்

அ.ச.ஞானசம்பந்தனின் எல்லா நூல்களும் நாட்டுடைமையாக்கப்பட்டு இணையநூலகத்தில் கிடைக்கின்றன. இணைப்பு

உசாத்துணை