being created

அருள்நிறை மரியம்மை காவியம்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Tags: Manual revert Visual edit
No edit summary
Line 152: Line 152:
கிறித்தவக் காப்பியங்கள் - முனைவர் யோ. ஞானசந்திர ஜாண்சன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், முதல் பதிப்பு, 2013.
கிறித்தவக் காப்பியங்கள் - முனைவர் யோ. ஞானசந்திர ஜாண்சன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், முதல் பதிப்பு, 2013.
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
{{Being created}}

Revision as of 18:27, 27 August 2023

The Mother

அருள்நிறை மரியம்மை காவியம் (1996), கிறிஸ்தவக் காப்பியங்களில், இயேசுவின் தாய் மரியாளை பாட்டுடைத் தலைவவராகக் கொண்டு இயற்றப்பட்ட ஒரே காப்பியம். இக்காப்பியம், மூன்று காண்டங்களையும், 4745 விருத்தப்பாக்களையும் கொண்டது. இந்நூலை இயற்றியவர் புதுச்சேரியைச் சேர்ந்த கவிஞர் துரை. மாலிறையன்.

பதிப்பு, வெளியீடு

அருள்நிறை மரியம்மை காவியம், புதுச்சேரியிலுள்ள மரியம்மை பதிப்பகத்தின் மூலம், 1996-ல், வெளியிடப்பட்டது.

ஆசிரியர் குறிப்பு

அருள்நிறை மரியம்மை காவியத்தை இயற்றியவர் புதுச்சேரியைச் சேர்ந்த கவிஞர், எழுத்தாளர் துரை. மாலிறையன். இவர் ஆகஸ்டு 29, 1942-ல், புதுச்சேரியில், துரைசாமி-கோவிந்தம்மாள் தம்பதியினருக்குப் பிறந்தார். இயற் பெயர் நாராயணசாமி. தமிழ்ப் பற்றால் பிற்காலத்தில் மாலிறையன் என்று மாற்றிக் கொண்டார். தமிழில் வித்துவான் பட்டம் பெற்ற இவர் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார்.

துரை. மாலிறையன் 25-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். அவற்றில் அருள்நிறை மரியம்மை காவியம், அன்னை தெரேசா காவியம், நபிகள் நாயகம் அருட்காவியம் போன்ற ஏழு காப்பிய நூல்களும் அடக்கம்.

நூல் அமைப்பு

அருள்நிறை மரியம்மை காவியம் பாயிரத்தைத் தொடர்ந்து உருக்காட்சிக் காண்டம், திருக்காட்சிக் காண்டம், அருட்காட்சிக் காண்டம் என்னும் மூன்று காண்டங்களைக் கொண்டுள்ளது. இந்நூலில் 4745 விருத்தப் பாடல்கள் அமைந்துள்ளன. பாயிரத்தில் 26 பாடல்கள் அமைந்துள்ளன. பிதா, குமாரன், பரிசுத்த ஆவி வணக்கம் இடம் பெற்றுள்ளது. இந்நூலுக்கு மூலங்களாக விவிலியம் மற்றும் பல ஆங்கில நூல்கள் அமைந்துள்ளன.

உவமை, உருவகம், அணி நயங்கள் எனப் பல்வேறு சிறப்புக்களை, இலக்கிய நயங்களைக் கொண்டதாக அருள்நிறை மரியம்மை காவியம் அமைந்துள்ளது.

உருக்காட்சிக் காண்டம்

உருக்காட்சிக் காண்டத்தில் 15 படலங்கள் அமைந்துள்ளன. அவை,

  1. படைப்புப் படலம்
  2. இறையாணை மீறிய படலம்
  3. உலக மீட்பு உன்னிய படலம்
  4. அன்னம்மாள் கருவுற்ற படலம்
  5. தூய மரியம்மை பிறப்புப் படலம்
  6. மரியா வளர்ச்சிப் படலம்
  7. தேவாலயத் திருவாழ்க்கைப் படலம்
  8. திருமண ஒப்பந்தப் படலம்
  9. இருத்தோற்றம் அறிவிப்புப் படலம்
  10. திருவுரு புக்க படலம்
  11. திருத்தோற்றம் அருளிய படலம்
  12. பேறு பெற்ற படலம்
  13. எகிப்துப் பயணப் படலம்
  14. எருசலேத்தில் திருவொளி காட்டிய படலம்
  15. சூசைநாதர் மறைவுப் படலம்

- என்பனவாகும். இக்காண்டம், மரியன்னையின் பிறப்பு முதல் புனித சூசையின் மறைவு வரை உள்ள வரலாற்றைக் கூறுகிறது. 1105 பாடல்களைக் கொண்டது.

திருக்காட்சிக் காண்டம்

இக்காண்டத்தில் 17 படலங்கள் அமைந்துள்ளன. அவை,

  1. இறைமகனைச் சோதித்தப் படலம்
  2. புதுமை தொடங்கிய படலம்
  3. உயிருள்ள நீர்விளக்கிய படலம்
  4. மலைப்பொழிவுப் படலம்
  5. உவமைகள் உரைத்தப் படலம்
  6. விசுவாசத்தின் பெருமை சொன்ன படலம்
  7. நல்ல அயலான் யார் என்ற படலம்
  8. வான்வீடு கட்டிய படலம்
  9. நானே ஒளி என்ற படலம்
  10. நல்ல ஆயன் நானே என்ற படலம்
  11. சூழ்ச்சி தொடங்கு படலம்
  12. காட்டிக் கொடுத்த படலம்
  13. பிலாத்துத் தீர்ப்பு வழங்கிய படலம்
  14. திருப்பாடுகள் ஏற்ற படலம்
  15. ஏழு கருத்துரைகள் அருளிய படலம்
  16. அன்னையின் மாட்சிமை உரைத்த படலம்
  17. உயிர்த்தெழுந்த படலம்

- என்பனவாகும். இக்காண்டம், இயேசு கிறிஸ்து திருமுழுக்குப் பெறுவதிலிருந்து உயிர்த்தெழுதல் வரையிலான நிகழ்வுகளைக் காட்சிப்படுத்தியுள்ளது. இதில் 1460 பாடல்கள் இடம் பெற்றுள்ளன.

அருட்காட்சிக் காண்டம்

இக்காண்டத்தில் 25 படலங்கள் அமைந்துள்ளன. அவை,

  1. தூய ஆவி திருத்தோற்றப் படலம்
  2. எருசலேம் திருப்பேரவை வளர்ச்சிப் படலம்
  3. தாயாகக் காத்த படலம்
  4. மரியம்மை விண்ணேற்புப் படலம்
  5. திருமுடி சூட்டுப் படலம்
  6. பெரிய நாயகியம்மை அருட்புகழ்ப் படலம்
  7. அடைக்கல அன்னையின் அருட்புகழ்ப் படலம்
  8. வேளாங்கண்ணியின் அருட்புகழ்ப் படலம்
  9. வினைதீர்க்கும் வில்வநல்லூர் அருட்புகழ்ப் படலம்,
  10. சேத்துப்பட்டு அன்னையின் அருட்புகழ்ப் படலம்
  11. பூண்டி அன்னையின் அருட்புகழ்ப் படலம்
  12. உறைபனி அன்னை அருளிய படலம்
  13. தூய தோற்றம் அருளிய படலம்
  14. உலூர்து புதுமை செய் படலம்
  15. பாத்திமா அருட் குழந்தைகள் தோற்றம் படலம்
  16. பாத்திமா அன்னை திருக்காட்சி அருளிய படலம்
  17. சோதனை சாதனையான படலம்
  18. சிறுவர்கள் வான்வீடு புக்க படலம்
  19. ஆசியப் பேரொளி காட்டிய படலம்
  20. அமெரிக்க மண்ணில் அருள் ஒளி காட்டிய படலம்
  21. பிரஞ்சு நாட்டில் பேரொளி காட்டிய படலம்
  22. இஸ்பெயின் நாட்டில் எழில் மரியன்னைப் படலம்
  23. இத்தாலி நாட்டில் இன்னொளி காட்டிய படலம்
  24. நிலைத்த உதவி செய்யும் அன்னை படலம்
  25. மேலை நாடுகளில் அருள் ஒளி காட்டிய படலம்

- என்பனவாகும். இக்காண்டம், தமிழ்நாடு மற்றும் உலக நாடுகளில் அருள் நிறைந்த மரியன்னை அளித்த மிக முக்கியமான காட்சிகளை விவரிக்கிறது. இதில் 2180 பாடல்கள் இடம் பெற்றுள்ளன.

பாடல்கள்

ஆதாம், ஏவாளின் வாழ்க்கை:

கூசியே படாமல் பூத்த தூய்மலர்த் தாம ரைபோல்

மாசிலாக் குயில் இ ரண்டு மகிழ்ந்துற வாடு தல்போல்

ஆசையும் அன்பும் கொண்ட அரசனும் அரசி யும்போல்

ஈசனும் அடியா ரும்போல் இருவரும் மகிழ்ந்தி ருந்தார்


இயேசு பிறந்த இரவின் சிறப்பை,

நள்ளிர வென்பார் கற்றோர் நல்லிரவென்பேன் நானே;

ஒல்லிரவு என்பார் கற்றோர் ஒள்ளிர வென்பேன் நானே;

வல்லிரவு என்பார் கற்றோர் வள்ளிரவு என்பேன் நானே;

அல்லிரவு என்பார் கற்றோர் எல்லிரவு என்பேன் நானே!

- என்கிறார் ஆசிரியர் துரை. மாலிறையன்.


மனிதன் வாழ வேண்டிய முறையை இறைவன் கூறுவதாகத் தன் காவியத்தில் பின் வருமாறு குறிப்பிட்டுள்ளார், துரை. மாலிறையன்.

அறிவினில் சிறத்தல் வேண்டும் அன்பினில் திளைத்தல் வேண்டும்

செறிவினில் உயரல் வேண்டும் செம்மையில் மிளிர்தல் வேண்டும்

நெறியினில் எல்லாம் உற்ற நேர்மையை வளர்த்தல் வேண்டும்

சிறுமையே சிந்தி யாத சீர்மையன் ஆதல் வேண்டும்

சிலுவைப்பாடு:

என்னருங் கடவு ளாரே! என்னருங் கடவு ளாரே!

என்னைஏன் கைவிட் டீரோ? என்றென்றி ரங்கி ஏங்கி

மன்னினார் “ஏலி ஏலி லெமாசபக் தானி” என்று

சொன்னவர் தம்மைப் பார்த்துச் சூழ்ந்தவர் எள்ளி னாரே!

அன்னைக்கு வாழ்த்து

அன்னை மரியாளை,

அருள்நிறைந் தவளே வாழ்க! அணிசிறந் தவளே வாழ்க!

பொருள்மிகுந் தவளே வாழ்க! புண்ணியம் வளர்ப்போய் வாழ்க!

இருள் அகல் விப்போய் வாழ்க! இறைவனின் தாயே வாழ்க!

மருள்களை பவளே வாழ்க! மணிஒளி மரியே வாழ்க!

- என்று வாழ்த்தியுள்ளார், துரை. மாலிறையன்.

மதிப்பீடு

கிறித்தவக் காப்பியங்களில், இயேசுவின் அன்னை மரியம்மையைக் காப்பியத் தலைவியாகக் கொண்டு இயற்றப்பட்ட ஒரே காப்பியம் அருள்நிறை மரியம்மை காவியம். தமிழாய்ந்த கவிஞரும் ஆசிரியருமான துரை. மாலிறையன், இந்நூலை இயற்றினார். கடவுளின் மைந்தனை இவ்வுலகிற்கு ஈன்றளித்த கன்னித் தாய் என்ற வகையிலும், பெண்களுள் பேறுபெற்றவர் என்ற வகையிலும், கிறித்தவ சமயக் கோட்பாடுகளுக்கு உட்பட்டே துரை. மாலிறையன் இக்காப்பியத்தைப் படைத்துள்ளார். மரியாளின் பிறப்பு முதல் வளர்ச்சி வரை, சில பிள்ளைத் தமிழ் நூல்கள் போல எளிமையான நடையில் இக்காப்பியத்தை துரை. மாலிறையன் இயற்றினார். கிறித்தவக் காப்பியங்களுள் குறிப்பிடத்தக்க ஒரு நூலாக, அருள்நிறை மரியம்மை காவியம் கருதப்படுகிறது.

உசாத்துணை

கிறித்தவக் காப்பியங்கள் - முனைவர் யோ. ஞானசந்திர ஜாண்சன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், முதல் பதிப்பு, 2013.


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.