being created

அரங்க. சீனிவாசன்

From Tamil Wiki
Revision as of 23:59, 15 October 2022 by ASN (talk | contribs) (Page created; Para Added, Image Added)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
அரங்க. சீனிவாசன்

அரங்க. சீனிவாசன் (அருட்கவி அரங்க. சீனிவாசன்; டாக்டர் அரங்க. சீனிவாசன்: 1920-1996) கவிஞர், எழுத்தாளர், பேராசிரியர். காந்தி மீது மிகுந்த பற்றுக் கொண்டவர். ‘மனித தெய்வம் காந்தி காதை’, ‘வங்கத்துப் பரணி’ போன்ற பல நூல்களை எழுதியிருக்கிறார். சென்னிக்குளம் அண்ணாமலை ரெட்டியாரின் ஓளிப்படத்தை முதன் முதலில் கண்டறிந்து வெளிப்படுத்தியவரும், அண்ணாமலை ரெட்டியாரின் வாழ்க்கை வரலாற்றை முதன் முதலில் எழுதியவரும் அரங்க. சீனிவாசன் தான்.

பிறப்பு, கல்வி

அரங்க. சீனிவாசனின் சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோவிலூர் என்ற சிற்றூர். பிழைப்புக்காக குடும்பம் பர்மா சென்றது. பர்மாவின் பெகு மாவட்டத்திலுள்ள சுவண்டி என்ற ஊரில், செப்டம்பர் 29, 1920 அன்று, அரங்கசாமி நாயுடு -மங்கம்மாள் தம்பதியினருக்கு அரங்க. சீனிவாசன் மகனாகப் பிறந்தார். இவரது தொடக்கக் கல்வி பர்மாவில் கழிந்தது. தாய் மங்கம்மாள் தேசபக்தர். சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசியப்படையில் பணியாற்றியவர். 1942-ல் இரண்டாம் உலகப் போர் மூண்டதால், அரங்க. சீனிவாசன் தனது குடும்பத்தினருடன் புறப்பட்டு, நடந்தே இந்தியா வந்து சேர்ந்தார்.

தமிழகம் வந்ததும் சொந்த ஊருக்குச் சென்று வசித்தார். மாம்பழக் கவிராயரின் தலைமை மாணாக்கரான பழனி பக்கிரிசாமிப் பிள்ளை என்ற பரிபூரணானந்த சுவாமிகளிடம் தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றுக் கொண்டார். திண்டுக்கல் ‘தோப்புச்சாமிகள்’ என்னும் பி.எஸ்.இராமானுசதாசரிடம் வைணவ இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார். தமிழ், சம்ஸ்கிருதம், மலையாளம், இந்தி, வங்காளம், ஆங்கிலம் உட்பட பதினான்கு மொழிகளை அறிந்திருந்தார்.

தனி வாழ்க்கை

வறுமைச் சூழலால் விவசாயப் பணிகள், அச்சகப் பணி, அஞ்சல்துறையில் தற்காலிகப் பணி எனப் பல பணிகளை மேற்கொண்டார், அரங்க. சீனிவாசன். பாப்பம்மாளுடன் திருமணம் நிகழ்ந்தது. இவர்களுக்கு விஜயலட்சுமி, திருவேங்கடம், மணிமேகலை, ராணி என நான்கு மகள்கள்.

இலக்கிய வாழ்க்கை

சிறு வயது முதலே கவிபாடும் ஆற்றல் அரங்க. சீனிவாசனுக்கு இருந்தது. தாமாகவே முயன்று மரபுப் பாக்களை முறைப்படி எழுதக் கற்றுக் கொண்டார். கவிதைகள் பலவற்றை எழுதினார். அவை, ‘சுதேசபரிபாலினி’, ‘பர்மா நாடு’, ‘பால பர்மர்’,  ‘சுதந்திரன்’, ‘ஊழியன்’ போன்ற இதழ்களில் வெளியாகின. தொடர்ந்து பல கவிதைகளை எழுதினார்.




🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.