under review

அபிநயம்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
 
Line 168: Line 168:


[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
{{Second review completed}}
{{Finalised}}

Latest revision as of 06:10, 8 January 2024

பரத நாட்டியத்தில் நடனத்தின் பாவங்களை, ஆடலின் பொருளை, அங்க அசைவுகள் மூலம் பார்வையாளர்களுக்கு உணர்த்துவதே அபிநயம். அபிநயம் நான்கு வகைப்படும்.

அபிநயத்தின் வகைகள்

உடல் உறுப்புகளின் அசைவுகள், உரையாடல், வேடம், பாவம் ஆகியவற்றால் நாட்டியத்தின் பொருளை பார்வையாளர்களுக்கு உணர்த்துவதே அபிநயம். அபிநயம் நான்கு வகைப்படும். அவை,

  • ஆங்கிகா அபிநயம்
  • வாசிகா அபிநயம்
  • ஆகார்ய அபிநயம்
  • சாத்விக அபிநயம்

ஆங்கிகா அபிநயம்

அங்கங்களால், உள்ளக்கருத்தை வெளிப்படுத்துவதே ஆங்கிகா அபிநயம். ஆங்கிகம் என்னும் சம்ஸ்கிருதச் சொல்லுக்கு ‘உடல்’ என்பது பொருள். உடல் உறுப்புகளுக்குத் தனித்தனிச் செய்கைகள் உண்டு. இவற்றில் கை முத்திரை சிறப்பிடம் பெறும். கை முத்திரை என்பது விரல்களின் செய்கைகள். இவற்றில் ஒற்றைக் கை முத்திரைகளும் இரட்டைக் கை முத்திரைகளும் உண்டு. பரத நாட்டியத்தில் கை முத்திரைகளே முதன்மையாகக் கொள்ளப்படுகின்றன.

நாட்டியத்தில், பாடலின் பொருளைக் கை முத்திரைகள் காட்டும். கை முத்திரைகள் வழி கண் செல்லும். கண்கள் வழி மனம் செல்லும். மனம் செல்லும் வழி உள்ளத்தின் உணர்வு செல்லும்.

இது குறித்து,

“யதோ ஹஸ்தஸ் ததோ த்ருஷ்டி
யதோ த்ருஷ்டிஸ் ததோ மன
யதோ மனஸ் ததோ பாவோ
யதோ பாவஸ் ததோ ரஸ”

-என அபிநய தர்ப்பணம் குறிப்பிட்டுள்ளது.

ஆங்கிகா அபிநயத்தில் மூன்று பிரிவுகள் உள்ளன. அவை,

  • அங்கம்
  • பிரத்தியாங்கம்
  • உபாங்கம்

இவை, ‘திரியாங்கம்’ என அழைக்கப்படுகின்றன.

அங்கம்

தலை, கைகள், மார்பு, பக்கங்கள், இடை, பாதங்கள், விரல் ஆகிய ஏழும் அங்கங்கள் எனப்படும்.

பிரத்தியாங்கம்

புஜங்கள், முன்கைகள், முதுகு, வயிறு, தொடைகள், முழங்கால்கள் ஆகிய ஆறும் பிரத்யாங்கங்கள் எனப்படும். சிலர் மணிக்கட்டு, முழங்கைகள், முழங்கால்கள் ஆகிய அங்கங்களையும் இப்பிரிவில் சேர்த்துக் கூறுவர்.

ஆங்கிகாபிநயம் நான்கு வகைப்படும். அவை

  • சூசிகாபிநயம்
  • பாவாபிநயம்
  • தொந்தாபிநயம்
  • இலட்சணிகாபிநயம்
சூசிகாபிநயம்

தாவர ஜங்கமங்களில் (அசைபவை மற்றும் அசையாதவை) எவற்றையேனும் கை, கால்களால் அபிநயித்து ஆடுதல், சூசிகாபிநயம்.

பாவாபிநயம்

பாவாபிநயம் தலையாலும் கண்களாலும் பாவங்களைக் காட்டுவது.

தொந்தாபிநயம்

தலை, கண், பாதம், கை ஆகியவற்றால் யாவருக்குந் தெரிய அபிநயித்துக் காட்டுதல், தொந்தாபிநயம்.

இலட்சணிகாபிநயம்

உலகிலுள்ள எல்லாப் பொருள்களுக்கும் அது இதுதானெனக் கூறாது, யாரும் கண்டு அறிந்து கொள்ளுமாறு ஆடுதல்.

ஆங்கிகா அபிநயத்தின் வகைகள்

ஆங்கிகா அபிநயத்தில் வெகுவான அபிநயம், அற்பமான அபிநயம் என இருவகைகள் உள்ளன.

வெகுவான அபிநயம்

இரண்டு கைகளையும் விடாமல் காட்டும்போது பாணாசுரன் ஆயிரம் கைகள் உள்ளது போல் காட்டுதல் வெகுவான அபிநயம்.

அற்பமான அபிநயம்

இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என முக்காலங்களில் பொருட்கள் நிற்கும் நிலை இதுவென்று குறிப்பால் அறியும்படிக் காட்டுதல் அற்பமான அபிநயம் ஆகும்

உபாங்கம்

உபாங்கம் எனப்படுவது கண், விழி, புருவம், கன்னம், மூக்கு, தாடை, பல், நாக்கு, உதடு, முகவாய் ஆகியனவற்றைக் குறிக்கும். இவற்றைத் தவிர பிற அங்கங்களான குதிகால், கணைக்கால், கால் விரல், கை விரல் போன்றவையும் ‘உபாங்கானி’ என்னும் நடனத்தில் பாவிக்கப்படும்.

வாசிகா அபிநயம்

வாசிக அபிநயம் என்பது பாடலை அடிப்படையாகக் கொண்டது. பாடலின் பொருள் அபிநயிக்கப்படும். ஆடுபவரே பாடலைப் பாடி அபிநயிப்பதும், பிறர் பாட அபிநயிப்பதும் உண்டு.

தஞ்சாவூர் பாலசரஸ்வதி, கும்பகோணம் பானுமதி, மயிலாப்பூர் கௌரியம்மாள் ஆகியோர் தாமே பாடலைப் பாடி அபிநயம் செய்தவர்களுக்கு உதாரணம். தற்காலத்தில் வேறொருவர் பாட, ஆடுபவர் அதற்கேற்ப அபிநயம் செய்வது நடைமுறையில் உள்ளது.

இவ்வாசிகம் நான்கு வகைப்படும். அவை,

  • சுகீத வாசிகம்.
  • உபகீத வாசிகம்.
  • சுசப்த வாசிகம்.
  • உபசப்த வாசிகம்
சுகீத வாசிகம்

சுகீத வாசிகம் என்பது ஒரு பாத்திரம் பாடலைத் தானே பாடிக்கொண்டு அபிநயிப்பதைக் குறிக்கும்

உபகீத வாசிகம்

உபகீத வாசிகம் என்பது பாடகர் சபையோர் மெச்சும்படிப் பாடும்போது, பெண்கள் அப்பாடலுக்கு அபிநயித்தலைக் குறிக்கும்.

சுசப்த வாசிகம்

சுசப்த வாசிகம் என்பது நடனமாது கணிப்பித்துக்கொண்டே நடனம் செய்வது.

உப சப்த வாசிகா அபிநயம்

உப சப்த வாசிகா அபிநயம் என்பது நட்டுவனார் திறமையாகக் கணிக்க நடன பாத்திரம் ஆடி அபிநயித்தலைக் குறிக்கும்.

ஆஹார்ய அபிநயம்

ஒப்பனைகள் மூலம் அபிநயித்தல் ஆஹார்ய அபிநயம் எனப்படும். முக ஒப்பனை, உடை, அணிகலன், அலங்காரம், மேடை அமைப்பு போன்றவற்றிற்கு பரத நாட்டியத்தில் முக்கிய இடம் உண்டு.

சிவனாக ஒருவர் ஆட வேண்டுமென்றால் ஜடாமுடி, பிறைச்சந்திரன், பாம்பு, புலித்தோல், நெற்றியில் திருநீறு முதலான ஒப்பனைகள் வேண்டும். இந்த ஒப்பனைகள் அவரைச் சிவனாக உணர்த்தும். இவ்வாறு ஒப்பனைகள் செய்து அபிநயம் செய்து ஆடுவது ஆஹார்ய அபிநயம்.

ஆஹார்ய அபிநயம் மூன்று வகைப்படும். அவை,

  • நிஜாஹார்யாபிநயம்
  • அபிசாரி ஆஹார்யம்
  • விபசாரி ஆஹார்யம்
நிஜாஹார்யாபிநயம்

நிஜகார்யாபிநயம் என்பது அங்கதம் முடி, மார்புப் படாகை, தட்டிச் சல்லடம், முலைக்கச்சு, அரைஞாண் என்ற அணிகலன்களுடன் ஆடுவது.

அபிசாரி ஆஹார்யம்

அபிசாரி ஆஹார்யம் என்பது இராமாயணம், மகாபாரதம் போன்ற புராண இதிகாச நாடகங்களுக்கேற்ற வேடங்கள் பூண்டு நடிப்பது.

விபசாரி ஆஹார்யம்

விபசாரி ஆஹார்யம் என்பது அந்தந்த நாட்டுச் சபையோர் ஏற்றுக்கொள்ளும்படிப் பலவகை நாட்டியங்களுக்கு ஒத்த சாதி உபமானங்கள் போன்றவை ஒத்து அமையும்படி ஆடுவதைக் குறிக்கும் இராமாயணம், மகாபாரதம் முதலான நாடகங்களை நடித்துக் காட்டுவதற்கு ஏற்ற ஆடை ஆபரணங்களை அணிந்து ஆடுவது, விபசாரி ஆஹார்யம்.

மேடை அமைப்பு, ஒப்பனை

ஆகார்ய அபிநயத்தின் மேடை அமைப்பு, ஒப்பனை போன்றவற்றை நான்கு வகையாகப் பிரிக்கலாம். அவை,

  • புஷ்டம்
  • அலங்காரம்
  • அங்கரச்சனம்
  • சஞ்சீவம்
புஷ்டம்

புஷ்டம் என்பது பெரிய அரண்மனை, மலைகள், மரங்கள் போன்ற பொருள்களைச் சிறிய மாதிரி உருவங்களில் உருவாக்கி அரங்கிற்குக் கொணர்தல்.

அலங்காரம்

அலங்காரம் என்பது ஆடை, அணிகலன்கள், மலர்கள், மாலைகளால் அலங்கரித்தல்.

அங்கரச்சனம்

அங்கரச்சனம் என்பது ஒப்பனை செய்தல், முகப்பூச்சு, வர்ணம் போன்றவற்றைப் பூசுதல்.

சஞ்சீவம்

சஞ்சீவம் என்பது உயிருள்ள உயிரினங்களைப் பயன்படுத்துதலைக் குறிக்கும்.

சாத்விக அபிநயம்

உள்ளத்தில் எழும் உணர்ச்சிகளை, உடலின் மெய்ப்பாடுகள் மூலம் விளக்கி, அபிநயித்து ஆடுவதே சாத்விக அபிநயம்.

நவரசம் எனும் ஒன்பது சுவைகளான அச்சம், வீரம், இளிவரல், அற்புதம், இன்பம், அவலம், நகை, கோபம், அமைதி போன்ற உணர்ச்சிகளை கண்கள், உடலசைவு, தலையசைப்பு, தோரணை, கை முத்திரைகள், முக பாவம் ஆகியவற்றால் அபிநயித்து ஆடுதலே சாத்விக அபிநயமாகும். உள்ளத்து உணர்வுகளை முகபாவத்தாலும் உடல் உறுப்புக்களாலும் வாக்கினாலும் வெளிப்படுத்துவது சாத்வீகா அபிநயம்.

சாத்விக பாவங்கள் எட்டு வகைப்படும். அவை,

  • ஸ்தம்பம் - ஸ்தம்பித்தல்
  • பிரளயம் - மூர்ச்சித்தல்
  • ரோமாஞ்சனம் - புல்லரித்தல்
  • ஸ்வேதம் - வியர்த்தல்
  • வைவர்ணயம் - நிறமாற்றம்
  • வேபது - நடுங்குதல்
  • அஷ்ரு - கண்ணீர் சொரிதல்
  • வைஸ்வர்யம் - குரல் மாற்றம்
சாத்விக அபிநயம்

சாத்விக அபிநயம் இரு வகைப்படும். அவை,

  • சாட்சுஷிய சாத்விகம்
  • வியஞ்சகம்
சாட்சுஷிய சாத்விகம்

சாட்சுஷிய சாத்விகம் என்பது பாத்திரம் கண்களைக் கொண்டு அபிநயித்தல் ஆகும்.

வியஞ்சகம்

வியஞ்சகம் என்பது கண், தலை இவற்றினால் அபிநயித்தல்.

உசாத்துணை


✅Finalised Page