அஞ்சலை
அஞ்சலை கண்மணி குணசேகரன் எழுதிய நாவல். நடுநாட்டு மக்களின் வாழ்வியலின் பின்னணியில், வட்டார வழக்கில் அஞ்சலை என்ற விளிம்புநிலை விவசாய கூலிப் பெண்ணின் வாழ்க்கையின் சிக்கல்களைப் பேசும் நாவல். கனடா இலக்கியத் தோட்டத்தின் விருது பெற்றது.
எழுத்து, வெளியீடு
கண்மணி குணசேகரன் தான் கண்டும், கேட்டும் உணர்ந்தவற்றை, தன் மக்களின் 'கண்முன்னே விரிந்த, கண்ணீரும் கம்பலையுமாய் உப்புப் பூத்துக் கிடந்த, அவசியம் பதிவு செய்ய வேண்டிய வாழ்க்கையை' அஞ்சலை நாவலாக எழுதியதாகக் குறிப்பிடுகிறார் (முதல் பதிப்பின் முன்னுரை). முதல் பதிப்பை 1999-ல் குறிஞ்சிப்பாடி அருள் புத்தக நிலையம் வெளியிட்டது. கவிஞர் பழமலய் அணிந்துரை எழுதினார். 2005-ல் அத்தியாயங்கள், பத்திகளின் வரிசையில் சிறு மாற்றங்களுடன் ஐந்தாம் பதிப்பை, திருந்திய பதிப்பாக தமிழினி பதிப்பகம் வெளியிட்டது. வ.கீதா இப்பதிப்புக்கு அணிந்துரை எழுதினார்.
கதை மாந்தர்
- பாக்கியம்-மூன்று மகள்கள், ஒரு மகனின் அன்னை
- தங்கமணி-பாக்கியத்தின் முதல் மகள்
- கல்யாணி-பாக்கியத்தின் இரண்டாவது மகள்
- அஞ்சலை-பாக்கியத்தின் மூன்றாவது மகள்
- நிலா: அஞ்சலையின் முதல் மகள்; அஞ்சலைக்கும் ஆறுமுகத்துக்கும் பிறந்தவள்
- ராமு-அஞ்சலையின் தம்பி
- மண்ணாங்கட்டி-அஞ்சலையின் கணவன்
- ஆறுமுகம்- கல்யாணியின் கொழுந்தன், அஞ்சலையின் இரண்டாவது கணவன்
- அஞ்சலையின் ஓரகத்தி, அவள் கணவன், அஞ்சலைக்கும் மண்ணாங்கட்டிக்கும் பிறந்த இரு பெண்கள்
கதைச்சுருக்கம்
கார்குடலில், தாழ்த்தப்பட்ட வகுப்பில் கணவனை இழந்த பாக்கியத்திற்கு மூன்று மகள்கள், ஒரு மகன். மூன்றாவது பெண் அஞ்சலை மிகத்துணிச்சலான, வலுவுள்ள இளம்பெண். ஊரின் அலருக்கு பயந்து அஞ்சலைக்கு மாப்பிள்ளை பார்க்கும் போது முதல் அக்கா தங்கமணியின் கணவன் அவளை இளைய தாரமாகக் கேட்கிறான். நடக்காமல் போகவே, ஆள் மாறாட்டம் செய்து அண்ணனை மாப்பிள்ளை என்று காட்டி நோஞ்சானான மண்ணாங்கட்டிக்கு மணம் செய்து வைக்கிறான். திடகாத்திரமாக இருந்த கொழுந்தனை மாப்பிள்ளை என்று நம்பி ஏமாந்து, மண்ணாங்கட்டி அவள்மேல் அன்புடன் இருந்தும் வெறுப்பு தீராமல் கொதிக்கும் அஞ்சலை வீட்டை விட்டு தாய்வீடு செல்கிறாள். வழியில் பார்த்த இரண்டாவது அக்கா கல்யாணி தன் வீட்டிற்குக் கூட்டி சென்று, தன் கொழுந்தனுக்குக் கட்டி வைக்கிறாள். வெண்ணிலா பிறக்கிறாள். அஞ்சலை தன் அக்காவுக்கும் கொழுந்தனுக்கும் தகாத உறவு இருப்பதை அறிகிறாள். அங்கும் கொடுமை தாங்காமல் குழந்தையுடன் தாய்வீடு செல்கிறாள். நிலாவை பாக்கியத்திடம் வளர விட்டு, இப்போதும் அவளை ஏற்க சம்மதிக்கும் மண்ணாங்கட்டியுடன் வாழ்கிறாள். இரு குழந்தைகள் பிறக்கின்றன. நிலா தன் பாட்டியின் வீட்டில் மாமன் ஆதரவில் வளர்கிறாள். தம்பி அவளை மணம் செய்துகொள்வான் என்று அஞ்சலை நம்பியிருந்தபோது அவனுக்கு கல்யாணி தன் மகளைப் பேசி முடிக்கிறாள். ஊரில் வசைகளும் அவமானமும் தொடர, தம்பியிடம் கெஞ்சி, அது பலனளிக்காததால் அஞ்சலை சாகப் போக, வெண்ணிலா "இந்த மனிதர்களிடையே வாழ்ந்து பார்க்க வேண்டும்" என்று அவளைக் காப்பாற்றி அழைத்துச் செல்கிறாள்.
இலக்கிய இடம்
அஞ்சலை ஒரு பெண்ணின் கன்னிப்பருவம் முதல் முதிர்ந்த தாய்மைநிலை வரையான வாழ்வையும், ஆணாதிக்கத்தால் அவள் சுரண்டப்படுவதையும் நுட்பமான கதாபாத்திரங்கள் மூலம் சித்தரிக்கும் இயல்புவாத நாவல். நவீன தமிழ்ப் புனைகதைகளில் சித்தரிக்கப்பட்ட பெண் கதாபாத்திரங்களில் வலுவான வார்ப்புகளில் ஒன்று அஞ்சலை என்று மதிப்பிடப்படுகிறது.
புற நிகழ்ச்சிகளை சிக்கல்கள் இல்லாமல் வரிசையாகவும், அக ஓட்டங்களை தேவைக்கேற்பவும் விளக்கிச் செல்கிறார் கண்மணி குணசேகரன். ஊர் புறம்பேசுவதே அஞ்சலையின் துன்பங்களுக்குக் காரணமாய் அமைவதன் பின்னணியில், கொடிய வறுமை மூலம் உருவான முரட்டுத்தனமும் குரூரமும் காரணமாய் விளிம்புநிலை மக்கள் ஒருவரையொருவர் வதைத்து வாழும் வாழ்க்கை சித்தரிக்கப்படுகிறது.
"கண்முன் நிகழ்ந்துகொண்டிருக்கும் ஒரு வாழ்க்கையை கண்ட அனுபவத்தை அளிப்பதே இயல்புவாதத்தின் கலை. பரிசீலனை அல்ல. வரலாற்றில் வைத்துப் பார்த்தல் அல்ல. உட்புகுந்து அறிதல் கூட அல்ல. ஆசிரியர் ‘இல்லாமலேயே’ நிகழும் கூறல் அது. உண்மையான வாழ்க்கை எப்போதுமே முடிவுகளும் பதில்களும் அற்றது. அறியும்தோறும் விரிவது. அவ்வனுபவத்தை அளிக்கையில் இயல்புவாத நாவல் கலைவெற்றி கொள்கிறது. அஞ்சலை அப்படிப்பட்ட வெற்றிகரமான இலக்கிய ஆக்கம்" என்று ஜெயமோகன் குறிப்பிடுகிறார்.
"தமிழ் இலக்கிய உலகில் பெண்களின் பாடுகள் பற்றி எழுதப்பட்டவை எனக்கு தெரிந்து இரண்டு நாவல்கள். யூமா வாசுகி எழுதிய ரத்த உறவு, கண்மணி குணசேகரனுடைய அஞ்சலை. இதற்கு இணையான நாவல் தமிழ்பரப்பில் இல்லை" என்று நாஞ்சில் நாடன் குறிப்பிடுகிறார்.
அஞ்சலை நாவலுக்காக கண்மணி குணசேகரன் கனடா இலக்கியத் தோட்ட விருது பெற்றார். கள்ளிக்கோட்டை பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பாடத்திட்டத்தில் 'அஞ்சலை' இடம்பெற்றது.
உசாத்துணை
- அழிவில்லாத கண்ணீர் – கண்மணி குணசேகரனின் ‘அஞ்சலை, ஜெயமோகன்
- கண்மணி குணசேகரன், தென்றல் இதழ்
- வட்டார வழக்கு-நாஞ்சில்நாடன்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
01-Jul-2023, 19:14:19 IST