being created

ம.மு. உவைஸ்

From Tamil Wiki
Revision as of 12:39, 18 February 2023 by Ramya (talk | contribs) (Created page with "ம.மு. உவைஸ் (ஜனவரி 15, 1922 - மார்ச் 25, 1996) ஈழத்து முஸ்லிம் ஆளுமை, தமிழறிஞர். == பிறப்பு, கல்வி == ம.மு. உவைஸ் இலங்கை பாணந்துறை கொறக்கானை எனும் சிற்றூரில் மகுமூது லெப்பை, சைனம்பு நாச்சியார் இணை...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

ம.மு. உவைஸ் (ஜனவரி 15, 1922 - மார்ச் 25, 1996) ஈழத்து முஸ்லிம் ஆளுமை, தமிழறிஞர்.

பிறப்பு, கல்வி

ம.மு. உவைஸ் இலங்கை பாணந்துறை கொறக்கானை எனும் சிற்றூரில் மகுமூது லெப்பை, சைனம்பு நாச்சியார் இணையருக்கு ஜனவரி 15, 1922-ல் பிறந்தார். உவைஸின் தந்தை முகம்மது லெப்பை ஆரம்பித்த தமிழ்ப் பாடசாலையில் தமிழ்க்கல்வி பயின்றார். அதன்பின் ஹேனமுல்ல அரசினர் முஸ்லிம் பாடசாலையில் கற்றார். ஆங்கிலக் கல்வியை சரிக்கமுல்லையிலிருந்த தக்சலா வித்தியாலயத்தில் பயின்றார். அங்கு சிங்களத்தையும் பாளியையும் பயின்றார். பாணந்துறை அர்ச். யோவான் கல்லூரியில் சேர்ந்து உயர்தரப் படிப்பை முடித்தார். 1946-ல் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.

பல்கலைக்கழகத்தில் சேரும் வரை தமிழை ஒரு பாடமாக படிக்கும் வாய்ப்பை பெறவில்லை. 1945ம் ஆண்டில் பல்கலைக்கழக நேர்முகப் பரீட்சைக்குத் தோற்றும் வாய்ப்பு கிடைத்தது. நேர்முகத் தேர்வுக்குழுவில் சுவாமி விபுலாநந்தர் ஓர் உறுப்பினராக இருந்தார். நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்ட உவைசிடம் விபுலானந்தர் இசுலாமிய அடிப்படையில் தோன்றிய ஒரு காப்பியத்தைக் குறிப்பிடும்படி கேட்டார். உவைசுக்குப் பதிலளிக்க முடியவில்லை. சீறாப்புராணத்தைப் பற்றி விபுலானந்த அடிகள் கூறியது, உவைசுக்கு இசுலாமியத் தமிழ் இலக்கியத் தேடலுக்கு வித்திடும் சாவலாக மாறியது. பல்கலைக்கழக விதிமுறைகளின் மாற்றத்துக்கேற்ப பல்கலைக்கழக அனுமதி உவைசுக்குக் கிடைத்தது. தமிழைச் சிறப்புப் பாடமாகக் கற்க வேண்டும் என்று சுவாமி விபுலாநந்தரின் வேண்டுகோளுக்கிணங்கத் தமிழைச் சிறப்புப் பாடமாகவும் சிங்களத்தை உப பாடமாகவும் கற்றார். விபுலானந்தரின் மறைவைத் தொடர்ந்து பேராசிரியர் க. கணபதிப்பிள்ளையின் உதவியுடன் முதுமாணிப் பட்டமும் பெற்றார். "தமிழ் இலக்கியத்திற்கு முஸ்லிம்களின் பங்களிப்பு" என்பது இவரது முதுகலைமாணிப்பட்ட ஆய்வேட.

இலக்கிய வாழ்க்கை

1968 இல் சென்னையில் இடம்பெற்ற இரண்டாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் தமிழ் இலக்கியத்தில் உள்ள முஸ்லிம் இலக்கிய வடிவங்கள் எனும் ஆங்கிலக் கட்டுரையை வாசித்தார். இதனைத் தொடர்ந்து திருச்சியில் இடம்பெற்ற முதலாவது இசுலாமியத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் பேராசிரியர் பொன்னாடைப் போர்த்திக் கெளரவிக்கப்பட்டார்.

பல கட்டுரைகளின் தொகுப்பான “இஸ்லாமிய இலக்கியத்தின் திருச்சித் திருப்பம்” என்ற நூலை 1974இல் சென்னையில் இடம்பெற்ற இரண்டாவது இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில் வெளியிட்டார். இத்துடன், இம்மாநாட்டில் முஸ்லிம்களின் பேச்சு வழக்கில் பயன்படும் செந்தமிழ்ச் சொற்கள் என்ற கட்டுரையையும் சமர்ப்பித்தார்.

நான்கு இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடுகளில் கலந்து கொண்டதுடன் கொழும்பில் நடைபெற்ற நான்காவது இஸ்லாமியத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டைத் தலைமை தாங்கி நடத்தினார். இதில் அறிஞர்களின் ஆக்கங்கள் அடங்கிய பிறைக் கொழுந்து என்ற நூலையும் வெளியிட்டார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காக உமறுப்புலவர் இருக்கை உருவாக்கப்பட்டது. அவ்விருக்கைக்கு இணைப் பேராசிரியராக பேராசிரியர் உவைஸ் நியமிக்கப்பட்டார்.

நூல்கள் பட்டியல்

  • இஸ்லாமும் இன்பத்தமிழும்
  • இஸ்லாமியத் தென்றல்
  • நம்பிக்கை
  • ஞானசெல்வர் குணங்குடியார்
  • நீதியும் நியாயமும்
  • நெஞ்சில் நிறைந்த சுற்றுலா (பயணக் கட்டுரை)
  • இஸ்லாம் வளர்த்த தமிழ்
  • தமிழ் இலக்கியம்
  • அரபுச் சொல் அகராதி
  • இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாறு
  • இஸ்லாமியத் தமிழ் காப்பியங்களின் வரலாறு
  • இஸ்லாமியத் தமிழ் சிற்றிலக்கியங்களின் வரலாறு
  • சூபி மெய்ஞ்ஞானிகளின் வரலாறு
  • அறபுத் தமிழ் இலக்கிய பற்றிய வரலாறு
  • இஸ்லாமிய அடிப்படையில் தோன்றிய வசன நூல்கள்
  • தற்கால கவிதை நூல்கள் என ஆறு தொகுதிகளாக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாற்றினை முனைவர் பீ.மு. அஜ்மல்கானுடன் இணைந்து எழுதினார்.
மொழிபெயர்ப்புகள்
  • டி. என். தேவராஜனின் வணிக எண்கணிதம் எனும் தமிழ் நூலை வணிக அங்க கணிதய என சிங்களத்தில் மொழி பெயர்த்தார்.
  • நபிகள் நாயகம், தித்திக்கும் திருமறை என்பன இவரால் தமிழில் இருந்து சிங்களத்திற்கு முறையே நபிநாயக சரிதய, அல்குர்ஆன் அமாபிந்து என மொழிபெயர்த்திருக்கிறார்.
  • மார்ட்டின் விக்கிரமசிங்கவின் கம்பெரலிய என்ற புதினத்தை கிராமப் பிறழ்வு என மொழிபெயர்த்திருக்கிறார்.

உசாத்துணை



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.