being created

சோ. இளமுருகனார்

From Tamil Wiki
Revision as of 10:20, 16 February 2023 by Ramya (talk | contribs) (Created page with "சோ. இளமுருகனார் (ஜூன் 11, 1908 – டிசம்பர் 17, 1975) ஈழத்துத் தமிழறிஞர், புலவர், நாடகாசிரியர், கண்டன ஆசிரியர். அரசியல் பாக்கள் பல எழுதினார் == பிறப்பு, கல்வி == சோ. இளமுருகனாரின் இயற்பெயர் பாலசு...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

சோ. இளமுருகனார் (ஜூன் 11, 1908 – டிசம்பர் 17, 1975) ஈழத்துத் தமிழறிஞர், புலவர், நாடகாசிரியர், கண்டன ஆசிரியர். அரசியல் பாக்கள் பல எழுதினார்

பிறப்பு, கல்வி

சோ. இளமுருகனாரின் இயற்பெயர் பாலசுப்பிரமணியம். இலங்கை, யாழ்ப்பாணம், நவாலியூரில் சோமசுந்தரப் புலவர், சின்னம்மையார் இணையருக்கு ஜூன் 11, 1908இல் பிறந்தார். நவாலியில் இராமலிங்க உபத்தியாயரிடம் ஆரம்பக் கல்வி கற்றார். கிராமப் பள்ளியில் தொடக்கக் கல்வி பயின்றார். இந்துக் கல்லூரியில் ஆங்கிலமும் தமிழும் கற்றார். தந்தையிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களையும், ஜோதிடக் கலையையும் கற்றார். மறைமலை அடிகளாரின் தனித்தமிழ் இயக்கத்தின் மீது கொண்ட பற்றின் காரணமாக தனது பெயரை 'இளமுருகனார்' என மாற்றிக் கொண்டார்.

தனிவாழ்க்கை

சி. கணேசையர், ம.வே. மகாலிங்கசிவம், சு. நவநீதகிருட்டிண பாரதியார் ஆகியோர் இவரின் நெருங்கிய நண்பர்கள். மறைமலை அடிகள், திரு.வி. கலியாணசுந்தரனார் ஆகியோரின் தொடர்புகள் கிடைத்தது. இளவழகனார் முதலான தமிழ் அறிஞர்களுடன் அஞ்சல் வழியே பழகிக் கொண்டார்.

ஆசிரியப்பணி

ஆனைக்கோட்டை அரசினர் வித்தியாசாலை, கட்டுடை சைவத் தமிழ்ப் பாடசாலை, அளவெட்டி அருணோதயக் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் இருமொழி ஆசிரியராகப் பணியாற்றினார். பணியில் இருந்துகொண்டே தமிழ்ப் பண்டிதர் தேர்வை எடுத்து 'பண்டிதர்' பட்டம் பெற்றார். கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயின்று பயிற்சி பெற்ற ஆசிரியரானார்.

கோப்பாய் அரசினர் ஆசிரிய கலாசாலையில் தமிழாசிரியராக இருந்த ம.வே. மகாலிங்கசிவம் காலமான பின் அப்பதவிக்கு இளமுருகனார் நியமிக்கப்பட்டார். கொழும்புத்துறை ஆசிரியர் பயிற்சிக்கழகத்திலும் 15 ஆண்டுகள் தலைமைத் தமிழாசிரியராகப் பணியாற்றினார். இவரது காலத்தில் பல ஆசிரியர்களையும் ஆசிரிய மாணவர்களையும் வண. குருமார்களையும் தமிழ் கற்கத் தூண்டிப் பண்டிதர்களாக ஆக்கினார். திருநெல்வேலிப் பரமேசுவரா ஆசிரிய கலாசாலையில் மாவை நவநீதகிருட்ணபாரதியாருடன் சேர்த்து விரிவுரையாளராகப் பணியாற்றினார்.

அமைப்புப் பணிகள்

தமிழ்ப் பாதுகாப்புக் கழகம்

தமிழ்ப் பாதுகாப்புக் குறித்து இவர் பல கட்டுரைகளையும், கண்டனவுரைகளும் ஈழகேசரி, தினகரன் முதலிய பத்திரிகைகளில் எழுதினார். இளமுருகனார் "தமிழ்ப் பாதுகாப்புக் கழகம்" என்ற பெயரில் ஓர் இயக்கத்தை ஆரம்பித்து அதன் தலைவராக முப்பது ஆண்டுகள் பணியாற்றினார். தனித்தமிழைப் பரப்புவதை நோக்கமாகக் கொண்ட இயக்கம். அரசாங்கத்தை அணுகி தமிழ் இலக்கணப்பாடத்திட்டம் கலந்த பாடநூல்களை எழுதினார். தமிழ் நெடுங்கணக்கை மாற்றியமைக்கவும் சில செயற்கை ஒலிகளைப் புதிதாகப் புகுத்தவும் தமிழக அறிஞர்களும் செய்தித்தாள் ஆசிரியர்களும் முயன்றபோதும் அவற்றை எதிர்த்து பல்வேறு கட்டுரைகளை எழுதினார். இந்து சமயம் என்ற ஒற்றைப் போர்வையின் கீழ் சைவ சமயம் குறுகும் விதத்தை எதிர்த்து கட்டுரைகள் எழுதினார்.

தமிழுரிமைப் போர் =

வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் ஈழத்தில் நிலைபெற்று நின்ற தமிழ் மொழியின் உரிமை பறிக்கப்பட்ட போது எதிர்த்துக் குரல் எழுப்பினார். தந்தை செல்வாவின் தலைமையில் இயங்கிவந்த "சமட்டிக் கட்சி"யின் பெயரைத் தமிழரசுக் கட்சி என மாற்றப் போராடி வெற்றிகண்டார். தமிழ் அரசியற் கட்சிகளுடன் இணைந்து அயராது பாடுபட்டார். அரசியல் மேடைகளில் இளமுருகனாரின் இயல்பான நகைச்சுவையோடு கூடிய அரசியற் பேச்சுக்களைக் கேட்கப் பொதுமக்கள் திரண்டனர். தமிழ் உரிமை வேட்கையை ஊட்டவல்ல பல எழுச்சி இலக்கியங்களைப் படைத்தார். இவர் எழுதிய "திருமலை யாத்திரை", "அறப்போர்க்கு அறைகூவல்", "இலங்கைமாதேவி திருப்பள்ளியெழுச்சி", "குயிற்பத்து" முதலியன புகழ் பெற்றன. தமிழின் தொன்மை, இனிமை, தெய்வத்தன்மை, இலக்கண இலக்கிய வளம், தமிழ்ப் பெருங்குடிகளின் தொன்மை போன்றவற்றை விளக்கிச் செந்தமிழ்ச்செல்வம் என்னும் உயரிய நூலை யாத்து அதன் பொருளை ஆங்கிலத்திலே சுருக்கித் தந்து அன்றைய பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவுக்கு அனுப்பி வைத்தார்.

நாடக வாழ்க்கை

அதிபர் வண. சிங்கராய சுவாமிகளின் வேண்டுகோளின்படி வில்லியம் ஷேக்சுஸ்பியர் எழுதிய ஹேம்லட் நாடகத்தைத் தமிழில் "கமலேசன்" என்ற பெயரில் மொழிபெயர்த்து அரங்காற்றுகை செய்தார். அவர் பணியாற்றிய உடுவில் மகளிர் கல்லூரியில் தமயந்தி திருமணம், அரிச்சந்திரன், மணிமேகலை, சிலப்பதிகாரம் முதலிய நாடகங்களை எழுதி மாணவிகளைக் கொண்டு அரங்காற்றுகை செய்தார்.

இலக்கிய வாழ்க்கை

சோ. இளமுருகனார் நாடகங்களையும், அரசியற்பாடல்களையும் எழுதியுள்ளார். தனித் தமிழில் எழுதினார். ஈழத்துச் சிதம்பர புராணம் முக்கியமான படைப்பு. பலவகை விருத்தப் பாக்களையும், அணிகளையும் கொண்டது. இளமுருகனாரின் மனைவிபரமேசுவரி இதற்கு உரை எழுதினார். தனிப் பாடல்கள் பல எழுதினார்.

விருதுகள்

  • சோ. இளமுருகனாரின் தமிழ்ப்பணிக்காகப் பல சபைகள் பொன்னாடை போர்த்துப் பொற்கிழி வழங்கியுள்ளன.
  • தமிழறிஞர்கள் புலவர்மணி என்ற அடைமொழி இட்டு அழைத்தனர்.
  • காஞ்சிபுரம் மெய்கணடார் ஆதீன மகா சந்நிதானமாகிய ஞானப்பிரகாச தேசிக பரமாசாரிய சுவாமிகள் 'கவிசிந்தாமணி' என்னும் பட்டம் வழங்கிக் கௌரவித்தார்.

மறைவு

சோ. இளமுருகனார் தனது 67-ஆவது அகவையில் டிசம்பர் 12, 1975 அன்று காலமானார்.

நூல்கள் பட்டியல்

  • செந்தமிழ்ச் செல்வம் (யாழ்ப்பாணம் ஸ்ரீ சண்முகநாத அச்சகம் 1957)
  • ஈழத்துச் சிதம்பர புராணம்: மூன்றாவது திருத்திண்ணபுரச் சருக்கம் பாட்டும் உரையும்
  • செந்தமிழ் வழக்கு (யாழ்ப்பாணம் ஸ்ரீ லங்கா அச்சகம் 1963, முதலாம் பாகம்)
  • தமயந்தி திருமணம் (யாழ்ப்பாணம் அருட் சூசைமாமுனிவர் 1955)
  • திருத்திண்ணபுரச் சுந்தரேசர் புராணம் என்னும் ஈழத்துச் சிதம்பர புராணம்: பாட்டும் உரையும் (உரை: பண்டிதை பரமேசுவரி, காரைநகர் ஈழத்துச் சிதம்பரதேவத்தானம் 1971)
  • பூரணன் கதை (யாழ்ப்பாணம் ஆசீர்வாதம் அச்சகம் 1963)
  • வேனில் விழா (யாழ்ப்பாணம் இலக்கியக் கழகம், யாழ்ப்பாணம் நாமகள் அச்சகம்)
  • உசன்பதித் திருமுருகன் கப்பற் பாட்டு (சுன்னாகம் திருமகள் அழுத்தகம் 1961)
  • அறப்போர்க்கு அறைகூவல் (அளவெட்டி மொழியரசி அச்சகம்)
  • புலவர்மணியின் புகழ்மாலை (காரைநகர் மக்கள் வெளியீடு 1976)
  • நவாலியூர்ப் புலவர்மணியின் புகழ்மாலை (காரைநகர் மக்கள் 1976)
  • சிவபதம் (யாழ்ப்பாணம் ஸ்ரீ சண்முகநாத அச்சகம்)
  • இலக்கணச் சூறாவளி
  • தொல்காப்பிய முதநூற்ச் சூத்திர விருத்தி
  • அரங்கேற்று வைபவம்
  • கவிதைவியல்
  • சொற்கலை
  • கயரோகச்சிந்து
  • சுருக்கெழுத்துச் சூத்திரம்
நாடகம்
  • தமயந்தி திருமணம்
  • கமலேசன்
  • சிலப்பதிகாரம்
  • மணிமேகலை
அரசியல் பாடல்கள்
  • இலங்கைமாதேவி திருப்பள்ளியெழுச்சி
  • அறப்போருக்கு அறைகூவல்
  • திருமலை பாத யாத்திரைப் பாடல்கள் (1956)
உரைகள்
  • திருமுருகாற்றுப்படை
  • குறிஞ்சிப்பாட்டு
  • திருமுருகாற்றுப்படை
  • பொருநராற்றுப்படை
  • மதுரைக்காஞ்சி
  • ஐங்குறுநூறு

உசாத்துணை

இணைப்புகள்


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.