under review

சாயாவனம்

From Tamil Wiki
Revision as of 14:50, 31 December 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Removed non-breaking space character)
சாயாவனம் நற்றிணை பதிப்பகம் (2013)

சாயாவனம் சா. கந்தசாமி எழுதி ஒரு தமிழ் நாவல்.1968-ல் வாசகர் வட்டம் பிரசுரத்தாரால் வெளியிடப்பட்டது.

இப்புதினத்தைத் தேசிய புத்தக அறக்கட்டளை நவீன இந்திய இலக்கியங்களில் சிறந்த ஒன்றாக அறிவித்துள்ளது.

பதிப்பு

எழுத்தாளர் சா.கந்தசாமியின் முதல் படைப்பான இந்நாவல் அவரால் தனது 25-வது வயதில், 1965-ல் எழுதப்பட்டது. வாசகர் வட்டம் அதைப் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டு வெளியிட 3 ஆண்டுகள் எடுத்துக்கொண்டது. 1968-ல் அவருடைய திருமணம் நிகழ்ந்த சில நாட்களுக்குப் பின் வெளியானது.

கதைச்சுருக்கம்

இயற்கையுடனான மனிதனின் போராட்டத்தை மையமாக வைத்து தஞ்சை மாவட்டக் கிராமியப் பின்னணியில் எழுதப்பட்ட நாவல். புலம்பெயர்ந்த நாட்டிலிருந்து பல ஆண்டுகளுக்குப் பின் சொந்த ஊர் திரும்பும் இளைஞனான சிதம்பரம், அங்குள்ள சாயாவனம் என்ற காட்டை அழித்து அங்கு ஒரு கரும்பு ஆலை அமைக்கிறான். இயற்கையுடனான அவன் மோதலும் வெல்லவேண்டும் என்கிற உத்வேகமும் அவனை எதிர்காலத்தை நோக்கி நம்பிக்கையோடு உந்தித் தள்ளுகிறது. இயந்திரங்களைக் கொண்ட ஒரு தொழிற்சாலை நிறுவி, கிராமத்து மக்களை ஆச்சர்யத்தோடு பார்க்கச் செய்யும் ஆவேசம் அவனிடம் உள்ளது. அந்த ஆவேசத்தின் முன் அவன் அடையும் சில வெற்றிகள், சில இழப்புகள், சில மேன்மைகள், சில சரிவுகள் என்று விவரிக்கிறது இந்நாவல்

நூல் உருவாக்கம், பின்புலம்

சாயாவனம் என்றால் கதிரவன் ஒளிக்கதிர்கள் உள்ளே நுழைய முடியாத வனம் என்பது பொருள். கோவலனும் கண்ணகியும் கால் பதித்து மதுரைக்கு நடந்து சென்றதன் சுவடுகள் பதிந்திருக்கும் காவிரிக்கரை ஊரான சாயாவனத்தின் முன்னே புகார் செல்லும் நெடுஞ்சாலை. பின்னால் பாய்ந்தோடும் காவிரி ஆறு. இரண்டிற்கும் இடையில் வனமொத்த பெருந்தோட்டமான சாயாவனத்தில் நிகழும் ஒரு நூற்றாண்டுக்கு முற்பட்ட கிராமத்து வாழ்க்கை மாறுதலுக்கு உள்ளாவதை, சுற்றுப்புறச் சூழல் மாறுவதை, விளை நிலங்களில் வீடுகள், தொழிற்சாலைகள் கட்டப்படுவதை, மக்கள் உணவு பழக்கங்கள் ருசி எல்லாம் தன்னளவில் மாற்றப்படுவதை ஒவ்வொருவரும் அறிந்து கொள்வதுமாகவும் அதனைக் காப்பாற்றிக்கொள்ளத் தூண்டுவதுமாகவும் அமைத்திருக்கிறார்.

சாயாவனம் எழுதும்போது அங்கே சென்று கள ஆய்வு எதுவும் செய்யவில்லை என்றும் தான் பத்துப் பன்னிரண்டு வயதில் கண்டதையும், கேட்டதையும், படித்ததையும் நினைவில் வைத்துக்கொண்டு எழுதியதாக 2015ல் வெளியான இந்து தமிழ் கட்டுரையொன்றில் சா. கந்தசாமி குறிப்பிட்டிருக்கிறார்.

இலக்கிய மதிப்பீடு

சூழலியல் கொள்கைகள் பற்றி அதிகம் பேசப்படாத காலகட்டத்தில் ஒரு காட்டின் அழிவை மட்டும் நேரடியான மொழியில் சொன்ன நாவல் இது. அந்த அடர்த்தியினாலேயே குறியீட்டுப்பொருள் கொண்டு பலவகையான அழிவுகளையும் இழப்புகளையும் காட்டுவதாக அமைந்திருக்கிறது.

உணர்ச்சிகரம் அற்றமொழிநடை, புறவயமான சித்தரிப்பு, செறிவான கதைநகர்வு, குறியீட்டுத்தளத்தில் மட்டுமே அனைத்து அர்த்தவிரிவையும் வைத்திருக்கும் அமைதி ஆகியவற்றோடு இந்நாவலை அமைத்திருக்கிறார் சா. கந்தசாமி.

காவேரிக்கரையை ஒட்டிய தஞ்சை மாவட்டத்தின் வனம் போல் அடர்ந்த மரங்களும் கொடிகளும் எல்லையாக கொண்ட கிராமம் ஒன்றில் வாழும் பல்லுயிர்கள் அழிவதையும், அந்த ஊரின் வாழ்க்கையில் நிகழும் மாற்றங்களாக சில வெற்றிகளையும் சில சரிவுகளையும் நாவலாக்கியிருக்கிறார் சா. கந்தசாமி. இந்தச் சமன்பாடே நாவலின் தரிசனமாக மேலெழுந்து வருகிறது என்று எழுத்தாளர் பாவண்ணன் காலச்சுவடு கிளாசிக் வரிசை பதிப்பிற்காக எழுதிய முன்னுரையில் குறிப்பிடுகிறார்.

மொழியாக்கம்

சா. கந்தசாமியின் சாயாவனம் நாவல் வசந்தா சூர்யா மொழியாக்கத்தில் Indian Writing பதிப்பக வெளியீடாக ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளது (The Defiant Jungle, 2009). மேலும் பல இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

பிற வடிவங்கள்

சாயாவனம் தூர்தர்ஷன் சென்னை தொலைக்காட்சி நிலையம் தயாரிப்பில் ஏ. வின்சென்ட் இயக்கத்தில் தமிழில் தொலைகாட்சிப் படமாகவும் வெளிவந்துள்ளது.

உசாத்துணை


✅Finalised Page