under review

உரிச்சொல் நிகண்டு

From Tamil Wiki
Revision as of 14:49, 31 December 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Removed non-breaking space character)
உரிச்சொல் நிகண்டு - அருணாசலம் சதாசிவம் பிள்ளை பதிப்பு - 1858
உரிச்சொல் நிகண்டு: டி. சிவன் பிள்ளை பதிப்பு

வெண்பா யாப்பில் அமைந்த முதல் நிகண்டு உரிச்சொல் நிகண்டு. இதனை இயற்றியவர் காங்கேயர். உரிச்சொல் என்ற பெயர், ‘சொற்பொருளைக் கூறும் நூல்’ என்ற பொருளில் வந்தது. நிகண்டுகளைக் குறிக்கும் ஒரு பொதுச் சொல்லாகவும் ‘உரிச்சொல்’ குறிக்கப்பட்டது. 287 வெண்பாக்களால் ஆனது இந்த நூல்.

பதிப்பு, வெளியீடு

இதனை முதல் முதலில் பாண்டிச்சேரியைச் சேர்ந்த சிற்றம்பலம் என்பவர், புதுச்சேரி அரசு அச்சுக்கூடத்தில், 1840-ல், பதிப்பித்தார். இவரது தொகுப்பு 10 தொகுதிகளை மட்டுமே கொண்டிருந்தது. எஞ்சிய இரண்டு தொகுதிகளையும் சேர்த்து 12 தொகுதிகள் கொண்ட நூலாக, இலங்கை யாழ்ப்பாணம் கொக்குவில்லைச் சேர்ந்த எஸ்.ஏ. குமாரசாமி பிள்ளை 1845-ல் பதிப்பித்தார். தொடர்ந்து ரா. ரா. அருணாசலம், சதாசிவம் பிள்ளை, அருணாசலம் சதாசிவம்பிள்ளை, டி. சிவன்பிள்ளை , டி. கே. சுப்பிரமணிய செட்டியார், வீ. ஆறுமுகம் சேர்வை, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகப் பதிப்பு என பல பதிப்புகள் வந்துள்ளன.

ஆசிரியர் குறிப்பு

உரிச்சொல் நிகண்டை இயற்றியவர் காங்கேயர். இவர் சைவ சமயம் சார்ந்தவர் என்பதை நூலின் இறை வணக்கப் பாடல்கள் மூலம் அறிய முடிகிறது. இவரது காலம் பதினான்காம் நூற்றாண்டு என்றும், பதினேழாம் நூற்றாண்டு என்றும் இரு வேறு கருத்துக்கள் உள்ளன. மதுரை சிவப்பிரகாசர் எழுதிய ‘சிவப்பிரகாசம்’ நூலுக்கான உரையில் இந்த நிகண்டின் பாடல் ஒன்று எடுத்தாளப்பட்டுள்ளது. அதனால் இந்த நூலின் காலம் பதினான்காம் நூற்றாண்டு எனச் சிலர் கருதுகின்றனர். காங்கேயர் இந்த நூலுக்கு ‘உரிச்சொல்’ என்றே பெயரிட்டுள்ளார் என்பதை நூலின் பாயிரத்தின் மூலம் அறிய முடிகிறது. இவர் கொங்கு நாட்டைச் சேர்ந்தவர்.

உள்ளடக்கம்

இந்த நிகண்டுநூல் 12 பிரிவுகளைக் கொண்டது. இதில் 287 சூத்திரங்களில், 3200 சொற்களுக்கு விளக்கங்கள் தரப்பட்டுள்ளன.

  1. தெய்வப் பெயர்த் தொகுதி
  2. மக்கட் பெயர்த் தொகுதி
  3. விலங்கின் பெயர்த் தொகுதி
  4. மரப் பெயர்த் தொகுதி
  5. இடப் பெயர்த் தொகுதி
  6. பல பொருட் பெயர்த் தொகுதி
  7. செயற்கை வடிவப் பெயர்த் தொகுதி
  8. பண்பு பற்றிய பெயர்த் தொகுதி
  9. செயல் பற்றிய பெயர்த் தொகுதி
  10. ஒலி பற்றிய பெயர்த் தொகுதி
  11. ஒருபொருட்‌ பலபெயர்த்‌ தொகுதி
  12. பல பொருட்கூட்டத்து ஒருபெயர்த் தொகுதி

இந்நூலில் ‘சலாம்’ என்ற சொல் உள்பட ,பல பேச்சு வழக்குச் சொற்கள், பிறமொழிச் சொற்கள் அதிகம் இடம்பெற்றுள்ளன.

உசாத்துணை


✅Finalised Page