first review completed

மயிலை சிவமுத்து

From Tamil Wiki
மயிலை சிவ முத்து

மயிலை சிவ முத்து (1892 - 1968) (மயிலாப்பூர் சிவானந்த முத்துக்குமாரசாமி) தமிழறிஞர், கல்வியாளர். தமிழர்திருமணம் என்னும் கருத்தாக்கத்தை உருவாக்கி பரப்பியவர். மாணவர் மன்றத் தலைவராகவும் பணியாற்றினார்.

பிறப்பு , கல்வி

மயிலை சிவ முத்து 1892- ஆம் ஆண்டு ஜனவரி  15- ஆம் நாள் சென்னை மயிலாப்பூரில் வாழ்ந்த சிவானந்த முதலியாருக்கும் விசாலாட்சி அம்மையாருக்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தார். மயிலாப்பூரில் ஏழாம் வகுப்பு வரை பயின்றார். குடும்பச் சூழ்நிலை காரணமாக கல்வியை தொடரவில்லை. 1904- ஆம் ஆண்டில் எழும்பூரில் சென்னை கைவினைக் கல்லூரியில் (தற்பொழுது கவின்கலைக் கல்லூரி, சென்னை) ஓவியம் கற்கச் சென்றார். தந்தையின் மறைவின் காரணமாக அக்கல்வியும் தடைபட்டது.  சென்னை உயர் நீதிமன்ற  அச்சகத்தில் அச்சுக் கோக்கும் பணியில் சேர்ந்தார்.

தமிழ்த் திருமண முறை

மயிலை சிவ முத்து சென்னை சிவனடியார் திருக்கூட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அங்கே அமைந்திருந்த பால சைவ சபையில் சொற்பொழிவாற்ற தொடங்கினார். தமிழறிஞர்களான ஆதிமூல முதலியார், மணி திருநாவுக்கரசு ஆகியவர்களின் நட்பைப் பெற்றார். திருநாவுக்கரசரிடம் தமிழ் பயின்று புலவர் தேர்வில் வெற்றி பெற்றார். உயர்நீதிமன்ற அச்சகப் பணியிலிருந்து 1912- ஆம் ஆண்டில் விலகினார். 1912-14- ஆம் ஆண்டுகளில் ஆசிரியர் பயிற்சி பெற்றார்.

கல்விப்பணி

மயிலை சிவ முத்து,  1914- ஆம் ஆண்டில் சென்னை கொண்டியம்பதியில் சிவனடியார் கூட்டத்தாரால் நடத்தப்பட்டு வந்த சைவ ஆரம்பப் பாடசாலையில் தலைமையாசிரியராகத் தம் பணியைத் தொடங்கினார்.

1917- ஆம் ஆண்டில் மயிலை சிவ.முத்து முத்தியால்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியர் பணியை ஏற்றார். அங்கேயே தொடர்ந்து பணியாற்றி 1947- ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார்.

அரசியல்

மயிலை சிவமுத்து நீதிக்கட்சியிலும் பின்னர் ஈ.வெ.ராமசாமிப் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்திலும் பற்று கொண்டு செயல்பட்டார்.

அமைப்புச் செயல்பாடுகள்

மயிலை சிவ.முத்து நீதிக்கட்சியின் தலைவரான மருத்துவர் தருமாம்பாள் தலைமையில் 1931 ல் உருவாக்கப்பட்ட மாணவர் மன்றத்தில் அமைப்பாளராகச் செயல்பட்டார். மருத்துவர் தருமாம்பாள் தலைவராக இருந்த தாய்மார்கள் கழகத்தில் திருக்குறள் தொடர் வகுப்புகளை நடத்தினார். தர்மாம்பாளுடன் இணைந்து 1938- ஆம் ஆண்டில் நடைபெற்ற முதல் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட தொண்டர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்தார்.

1957- ஆம் ஆண்டில் மருத்துவர் தருமாம்பாள் மறைவுக்குப் பிறகு மயிலை சிவ முத்து, மாணவர் மன்றத்தின் தலைவர் ஆனார். மாணவர்மன்ற சார்பில் தமிழிலக்கியப் போட்டிகள் நடத்தப்பட்டன. மாணவர் மன்றத்திற்கென சொந்தக் கட்டடம் கட்டினார். அம்மன்றத்தின் சார்பில் 1963- ஆம் ஆண்டில் தொடக்கப்பள்ளி ஒன்றைத் தொடங்கி நடத்தினார்.

இலக்கிய வாழ்க்கை

மயிலை சிவ முத்துவின் இலக்கியப் பணிகள்

இதழியல்

மயிலை சிவ முத்து, 1961- ஆம் ஆண்டில் மாணவர் மன்றத்தின் சார்பில் 'நித்திலக்குவியல்' என்னும் இதழைத் தொடங்கி அவ்விதழின் ஆசிரியராக இருந்தார்.

தமிழ்த் திருமண முறை ஆங்கில நூல்

தமிழ்த் திருமண முறை

அக்காலத்தில் திருமணம் புரியாத வேற்று மொழியில் மந்திரங்களைச் சொல்லி நடத்தப்படுவதை கண்டு பழந்தமிழர் நெறிமுறையை காக்க வேண்டி பேராசிரியர் மயிலை சிவமுத்து, திரு.வி.கலியாணசுந்தரனார், பேராசிரியர் கா. நமச்சிவாய முதலியார், மணி. திருநாவுக்கரசர் முதலிய சான்றோர்களுடன் கூடி ஆராய்ந்து அறிவுக்கு ஒத்த, மண வாழ்க்கைக்கு இன்றியமையாத சடங்குகளை வகுத்து, மணமக்களுக்குப் புரியக்கூடிய வகையில் தமிழ் மொழியிலேயே மந்திரமான தேவார, திருவாசகப் பாடல்களை ஓதி மணம் செய்து வைக்கும் ‘தமிழ்த் திருமண முறை'யை உருவாக்கினார். அம் முறையில் மயிலை சிவ முத்து பல்லாயிரக்கணக்கான தமிழ்த் திருமணங்களை நடத்தி வழிகாட்டினார். மற்றையவர்களுக்கும் பயன்படும் வகையில்    அத் 'தமிழ்த் திருமண முறை' யை அழகிய நூல் வடிவில் சென்னை மாணவர் மன்றம் வெளியிட்டது.

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த பிரிட்டோரியா தமிழ்ச்சங்கத்தின் செயலாளர் திரு.அம்பலவாணன் சென்னை மாணவர் மன்றத்திற்கு வந்து இச்சங்கத்தின் சார்பில் தென்னாப்பிரிக்காவில் வாழும் தமிழ்  மக்களுக்குப் பயன்படும் வகையில் மாணவர் மன்ற வெளியீடான ‘தமிழ்த் திருமண முறை'யை ஆங்கில மொழிபெயர்ப்பில் வெளியிட வேண்டும் என்று விரும்பினார். மயிலை சிவமுத்து அவர்களின் 'தமிழ்த் திருமண முறை' கடல் கடந்து அயல்நாட்டிலும் பரவ ஒரு வாய்ப்பு ஏற்படுவதறிந்து இதற்கு மாணவர் மன்றம் முயற்சி எடுத்தது.   வல்லை. பாலசுப்பிரமணியம் இந்நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். தமிழ் பண்பாட்டிற்கு ஏற்ற வகையில் இன்றியமையாத மணச் சடங்குகள், அவற்றைச் செய்யும் முறை, அப்போது மந்திரப் பாடல்களாகப் பாடவேண்டிய தேவாரம், திருவாசகம் முதலிய நூற்பாடல்கள் ஆகியவை தமிழிலும் ஆங்கிலத்திலும் இந்நூலில் இடம்பெற்றுள்ளது. தமிழ்ப் பாடல்களை அப்படியே ஆங்கில எழுத்துக்களில் வெளியிடப்பட்டுள்ளது.  திருமணத்தில் பாடும்போது தமிழ்ப் பாடல்களாகவே இருக்கவேண்டும், அவற்றின் கருத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சொல்லுதல் கூடாது எனக் கருதி அவ்வாறு வைக்கப்பட்டுள்ளது.

திருக்குறள் இனிய எளிய உரை

நூல்கள்

மயிலை சிவ முத்து எழுதிய நூல்கள்;

  • என் இளமைப் பருவம்
  • தமிழ்த் திருமண முறை
  • சிவஞானம்; மாணவர் மன்றம், சென்னை.
  • தங்கநாணயம்; மாணவர் மன்றம், சென்னை.
  • தமிழ்நெறிக்காவலர்; மாணவர் மன்றம், சென்னை.
  • திருக்குறள் – எளிய உரை
  • நல்ல எறும்பு; மாணவர் மன்றம், சென்னை.
  • நித்திலக்கட்டுரைகள்; மாணவர் மன்றம், சென்னை.
  • நித்தில வாசகம்
  • முத்துக்கட்டுரைகள்; மாணவர் மன்றம், சென்னை.
  • முத்துப்பாடல்கள் (இந்திய அரசின் பரிசைப் பெற்றது)
  • வரதன்; மாணவர் மன்றம், சென்னை.

மறைவு

மயிலை சிவ முத்து ஜூலை 6, 1968 அன்று சென்னையில் இயற்கை எய்தினார்.

உசாத்துணை


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.