being created

சித்தர்கள்

From Tamil Wiki
Revision as of 22:58, 7 November 2022 by ASN (talk | contribs) (Page created; Para Added, Images Added)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
பதினெண் சித்தர்கள்

‘சித்தர்’ என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்பது பொருள். சித்தத்தை வென்றவர்கள் என்ற பொருளும் உண்டு. இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி முதலிய எட்டு வகையான யோகங்கள் (அஷ்ட யோகங்கள்) முலம் அஷ்டமா சித்திகளைப் பெற்றவர்கள் சித்தர்கள். சித்தர்களில் பல வகையினர் உண்டு.

‘சித்தர்கள்’ பெயர் விளக்கம்

’சித்தர்’ என்பதற்கு, “ஞானசித்தி படைத்தோர்; சித்தி பெற்றவர்; தேவகணத்துள் ஒரு சாரார்; யாவும் உணர்ந்தவர்” என்று அகராதி பொருள் கூறுகிறது. சித்தர்களில் பல வகையினர் உண்டு. உலக இயக்கத்தை, பிரபஞ்சத்தை, இறையாற்றலை, உயிர் தத்துவத்தை, பிரபஞ்ச ரகசியத்தை  ஆராய்ந்து அறிந்தவர்கள் சித்தர்கள். இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்து, இயற்கையை முற்றிலும் அறிந்தவர்கள். மானுட குல வளர்ச்சிக்காகவும், உயர்வுக்காகவும் உழைப்பவர்கள் சித்தர்களாகக் கருதப்படுகின்றனர். சித்தர்கள் சுயநலமற்றவர்களாக மதிக்கப்படுகின்றனர்.

அஷ்டமா சித்திகள்

பல்வேறு யோகப் பயிற்சிகளினாலும், பிராணாயாமம், வாசி யோக முறைகளினாலும் சித்தர்கள் பல்வேறு சித்துக்களைப் பெற்றனர். அவற்றுள் அஷ்டமாசித்திகள் குறிப்பிடத்தகுந்தவை.

  1. அணிமா - அணுவைக் காட்டிலும் சிறிதான தேகத்தை அடைதல்.
  2. மகிமா - மலையைப் போல் பெரிதாகுதல்.
  3. இலகிமா - காற்றை விட இலேசாக இருத்தல்.
  4. கரிமா - கனமாவது-மலைகளாலும், வாயுவினாலும் அசைக்க முடியாமல் பாரமாயிருத்தல்.
  5. பிராப்தி - எல்லாப் பொருட்களையும் தன்வயப் படுத்துதல், மனத்தினால் நினைத்தவை யாவையும் அடைதல், அவற்றைப் பெறுதல்.
  6. பிராகாமியம் - தன் உடலை விட்டு பிற உடலில் உட்புகுதல். (கூடு விட்டுக் கூடு பாய்தல்); தான் விரும்பிய வடிவங்களை எடுத்தல்
  7. ஈசத்துவம் - ஈசனுக்குச் சமமான நிலையை அடைதல்
  8. வசித்துவம் - உலகில் உள்ள அனைத்தையும் தன் வசப்படுத்தல்.
18 சித்தர்கள் பட்டியல்

பதினெண் சித்தர்கள்

சித்தர்களில், பதினெண் சித்தர்கள் சிறப்புப் பொருந்தியவர்களாகக் கருதப்படுகின்றனர். 18 பேர் ஒரு குழுவாக வாழ்ந்ததாலும், பதினெட்டு என்ற எண்ணின் புனிதத் தன்மை கருதியும், சித்தர்கள் 18 பேர்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர் என்ற கருத்து உள்ளது. பண்டை நூல்களில் பல்வேறு சித்தர்கள், பதினெண் சித்தர்களாக இடம்பெற்றுள்ளனர். பதினெண் சித்தர்களின் பெயர் வரிசை பல நூல்களில் பலவாறாகக் காணப்படுகின்றது.

ஆ. சிங்காரவேலு முதலியாரின் ‘அபிதானசிந்தாமணி’யில் காணப்படும் பதினெண் சித்தர்கள் பட்டியல்:

  1. அகத்தியர்
  2. போகர்
  3. கோரக்கர்
  4. கைலாசநாதர்
  5. சட்டைமுனி
  6. திருமூலர்
  7. நந்தி தேவர்
  8. பூனைக்கண்ணர்
  9. கொங்கணவர்
  10. மச்சமுனி
  11. வாசமுனி
  12. கூர்ம முனி
  13. கமல முனி
  14. இடைக்காடர்
  15. புண்ணாக்கீசர்
  16. சுந்தரானந்தர்
  17. உரோமரிஷி
  18. பிரமமுனி

‘வைத்தியத்திறவுகோல்’ நூலில் இடம் பெற்றுள்ள பதினெண் சித்தர்கள் வரிசை பற்றிய பாடல்:

மண்ணுலகின் மானிடர்கள் வாழவேண்டி

மகிமை பெரும் அகஸ்தியர் காக்கேயரோடு

புண்ணியர் புலிப்பாணி புலத்தியர் போகர்

புஜண்டரொடு சட்டமுனி யிராமதேவர்

தன்மையுள்ள காலாங்கி கருவூரார் பவந்தர்

தன்வந்திரி கலசமுனி கோரக்கர் மச்சர்

வன்மையாம் பிரமரிசி கருணானந்தர்

வாதி முதலிவர் பதினெண்பேர் சித்தராமே!

இதன்படி

  1. அகத்தியர்
  2. காக்கேயர்
  3. புண்ணியர்
  4. புலிப்பாணி
  5. புலத்தியர்
  6. போகர்
  7. காகபுஜண்டர்
  8. சட்டமுனி
  9. ராமதேவர்
  10. காலாங்கி தேவர்
  11. கருவூரார்
  12. பவந்தர்
  13. தன்வந்திரி
  14. கலசமுனி
  15. கோரக்கர்
  16. மச்ச முனிவர்
  17. பிரம்ம ரிஷி
  18. கருணானந்தர்

ஆகியோர் பதினெண் சித்தர்களாவர்.

கருவூரார் பலதிரட்டு -300 என்ற நூலில் உள்ள பதினெண் சித்தர் வரிசை:

  1. நந்தீசர்
  2. மூலத்தீசர்
  3. அகத்தீசர்
  4. சட்டநாதர்
  5. பதஞ்சலி
  6. வியாக்ர பாதர்
  7. கோரக்கர்
  8. கமலமுனி
  9. பூனைக் கண்ணார்
  10. இடைக்காடர்
  11. சண்டிகேசர்
  12. போகர்
  13. சிவவாக்கியர்
  14. காலாங்கி நாதர்
  15. புண்ணாக்கீசர்
  16. மச்சேந்திரநாதர்
  17. யூகி முனிவர்
  18. கொங்கணர்

இவ்வாறாகப் பல்வேறு நூல்களில் பலவகைச் சித்தர்கள் பதினெண் சித்தர்களாக இடம் பெற்றுள்ளனர். ஆனால், சித்தர்களின் எண்ணிக்கை 18-ஐ விட அதிகம். பண்டை இலக்கியங்கள், பல்வேறு எண்ணிக்கையில் சித்தர்களைப் பற்றிய தகவல்களைத் தருகின்றன.

சித்தர்கள் பட்டியல்


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.