first review completed

வெள்ளைமாளர்

From Tamil Wiki
Revision as of 10:50, 6 November 2022 by Logamadevi (talk | contribs)

வெள்ளைமாளர், சங்க காலப் பெண்பாற் புலவர்களில் ஒருவர். இவரது ஒரு பாடல் சங்க தொகை நூலான புறநானூற்றில் 296- வது பாடலாக இடம்பெற்றுள்ளது.

புலவர் பெயர்க் குறிப்பு

வெள்ளைமாளர் எனக் குறிப்பிடப்படும் புலவர் தம் பாடலில் இறக்கவிருப்பவர்களை எண்ணி மக்கள் முன்கூட்டியே செய்யும் செயல்களைப் பாடியுள்ளார். இது வெள்ளைச் சாவு. அதாவது வெள்ளை மாளல். மாண்டுபோதல் வெள்ளையாகத் தெரிவது. இதன் அடிப்படையில் பாடற்பொருளின் அடிப்படையில் இவருக்கு வெள்ளைமாளர் எனப் பெயர் சூட்டியுள்ளனர். இவர் பாடிய புறநானூற்றுப் பாடலில் ஏறாண் முல்லைத்துறையும், பாடலில் இடம் பெற்றுள்ள காட்சிகளையும் கருத்துகளையும் கொண்டு  இவர் பெண்பாற் புலவர் என்று அறிஞர்கள் கருதுகின்றனர். வெள்ளைமாளரை பாடற்பொருளால் பெயர் பெற்ற புலவர் பட்டியலில் கொள்ளலாம்.

பாடல் சொல்லும் செய்தி

வெள்ளிமாளர் அவர்கள் பாடிய புறநானூறு பாடல் 296-இல் கீழ்காணும் செய்தி காணப்படுகிறது.

போருக்குச் செல்லும் நெடுந்தகையின் தேர் வந்துள்ளது. பகைநாட்டு மக்கள் இப்போதே வேப்பந்தழையை ஒடித்து வைத்துக்கொள்கின்றனர். (காயம் பட்டவர்களுக்கு விசிற வேப்பந்தழை) காஞ்சிப்பண் பாடுகின்றனர். (ஒப்பாரி வைக்கின்றனர்). காயத்தில் தடவ எண்ணெய்க் கிண்ணத்தைக் கையில் வைத்திருக்கின்றனர். வெண்சிறு கடுகுப் புகை உண்டாக்குகின்றனர். எங்கும் 'கல்' என்ற அமைதி. பகைவேந்தனையே கொன்றுவிடுவானோ? இப்படி ஊர் நினைப்பதாகப் புலவர் பாடுகிறார்.

புறநானூறு 296

வேம்புசினை ஒடிப்பவும், காஞ்சி பாடவும்,

நெய்யுடைக் கையர் ஐயவி புகைப்பவும்,

எல்லா மனையும் கல்லென் றவ்வே

வெந்துஉடன்று எறிவான் கொல்லோ

நெடிதுவந் தன்றால் நெடுந்தகை தேரே?

(திணை: வாகை)

பொருள்

காஞ்சிப்பண் இசைக்கின்றனர். (புண் வலி தெரியாமல் இருக்க) வெண்சிறு கடுகு எண்ணெய் பூசுகின்றர். வெண்சிறு கடுகைப் புகைக்கின்றனர். எல்லா வீடுகளிலும் ‘கல்’ என்ற கமுக்கமான ஒலி. ஒருவன் தேர் மட்டும் மெதுவாகக் காலம் தாழ்ந்து வந்து கொண்டிருக்கிறது. அவன் தன் விழுப்புண் பற்றிக் கவலை கொள்ளவில்லை. இவன்மீது வேந்தன் சினம் கொள்வானோ? (உடனே வந்து புண்ணை ஆற்றிக்கொள்ளாமைக்காக)

பண்டைக்காலப் போர்முறை – காலையில் குறிப்பிட்ட காலத்தில் போர்த் தொடக்கப்பறை இரண்டு பக்கங்களிலும் முழங்கப்பட்ட பின்னர் போர் நிகழும். மாலையில் குறிப்பிட்ட காலத்தில் போர்நிறுத்தப் பறை ஒருபக்கத்தில் முழங்கியதும் நிறுத்தப்படும். மறுநாள் தொடரும். பாடலில் கூறப்பட் மறவன் போர் நின்றதும் திரும்பாமல் புண்ணைப் பற்றிக் கவலைப்படாமல் காலம் கடந்து திரும்புகிறான். அதனால் அரசன் சினம் கொள்வானோ எனப் பாடல் குறிப்பிடுகிறது.

உசாத்துணை


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.