பாவை

From Tamil Wiki
Revision as of 09:48, 6 November 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "பாவை என்னும் சொல் சங்க இலக்கியத்தில் மூன்று பொருட்களில் ஆளப்படுகிறது. *ஆடியிலோ நீரிலோ தெரியும் பிம்பம் பாவை எனப்பட்டது. (கையும் காலும் தூக்கத் தூக்கும் ஆடிப்பாவை போல. குறுந்தொ...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

பாவை என்னும் சொல் சங்க இலக்கியத்தில் மூன்று பொருட்களில் ஆளப்படுகிறது.

  • ஆடியிலோ நீரிலோ தெரியும் பிம்பம் பாவை எனப்பட்டது. (கையும் காலும் தூக்கத் தூக்கும் ஆடிப்பாவை போல. குறுந்தொகை 8, ஆலங்குடி வங்கனார்).
  • வரையப்பட்ட உருவங்கள் பாவை எனப்பட்டன. (ஈங்கே வருவாள் இவள் யார் கொல் ஆங்கே, ஓர் வல்லவன் தைஇய பாவைகொல் கலித்தொகை - குறிஞ்சிக்கலி 56. கபிலர்)
  • அணங்கு என்று சொல்லப்படும் பெண்த் தெய்வங்கள் பாவை எனப்பட்டன. (பாவை அன்ன வனப்பினள் இவள்- நற்றிணை 301, பாண்டியன் மாறன் வழுதி)
பாவை வழிபாடு

தொல்தமிழின் நீட்சியாக உள்ள மலையாளத்தில் பாவை என்னும் சொல் பொம்மை என்னும் பொருளில் புழக்கத்தில் உள்ளது. கேரளத்தில் இல்லத்தில் நிறுவப்படும் பகவதி தெய்வம் சுவரில் சித்திரமாக வரையப்பட்டு வழிபடப்படுகிறது. ஆலயங்களில் சித்திரமாக தெய்வத்தை வழிபடும் வழக்கம் சங்க காலத்தில் இருந்து இன்றும் நீடிப்பதன் சான்று இது.

கொற்றவை

சங்க காலத்திற்குப் பின்னர் பாவை என்பது இளம்பெண்ணைக் குறிக்கும் சொல்லாக மாறியது. சிலப்பதிகாரத்தில் பாவை என்னும் சொல் உக்கிரமான தெய்வம் என்னும் பொருளில் கொற்றவை தெய்வத்தைச் சுட்டுவதாக குறிப்பிடப்படுகிறது. வேட்டுவவரி பாடலில் ’இட்டுத் தலையெண்ணும் எயின ரல்லது சுட்டுத் தலைபோகாத் தொல்குடிக் குமரி’ என கொற்றவை குறிப்பிடப்படுகிறாள்.

இளம்பெண்கள் செய்யும் நோன்பும் பூசையும் பாவை நோன்பு என்னும் பெயரில் கடைப்பிடிக்கப்பட்டது. அதை ஒட்டி திருப்பாவை, திருவெம்பாவை போன்ற நூல்கள் உருவாயின. ( பார்க்க பாவை நோன்பு)

கொல்லிப்பாவை

கொல்லிப்பாவை என்னும் சொல் கொல்லும் தன்மை கொண்ட பாவை என்னும் பொருளில் ஓரு பெண்தெய்வத்தைக் குறிக்கிறது. இத்தெய்வம் சங்ககாலத்தில் அணங்கு என்று குறிப்பிடப்படும் தெய்வமாக இருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது. பலவகையான அணங்குகளும் பாவைகளும் தமிழ்நாட்டில் சங்ககாலத்தில் வழிபடப்பட்டன. அவை மறைந்துவிட்டன. ஆய் அரசர்களால் ஆட்சி செய்யப்பட்ட மலையில் இருந்த அணங்குத்தெய்வம் பற்றி பரணர் பாடுகிறார். ஆய் அரசர்கள் ஆட்சிசெய்தது இன்றைய குமரிமாவட்டம். (ஆஅய் நல் நாட்டு அணங்குடைச் சிலம்பில் கவிரம் பெயரிய உரு கெழு கவாஅன் ஏர் மலர் நிறை சுனை உறையும் சூர்மகள். அகநாநூறு 198, பரணர்)

(பார்க்க அணங்கு)