பள்ளு இலக்கிய நூல்கள் பட்டியல்

From Tamil Wiki
Revision as of 22:35, 5 November 2022 by ASN (talk | contribs) (Page created; Para Added, Images Added)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
முக்கூடற் பள்ளு
கஞ்சமி செட்டியார் பள்ளு

தமிழின் 96 வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று பள்ளு. இது மருத நில மக்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எழுந்த இலக்கியம். உழவுத் தொழில் செய்யும் பள்ளர்களின் வாழ்க்கையைப் பற்றி பள்ளு இலக்கியங்கள் பேசுகின்றன. பள்ளு இலக்கிய நூல்கள் எளிமையும் இனிமையும் வாய்ந்தவை. இவற்றின் காலம் பொதுயுகம் பதினாறாம் நூற்றாண்டு.

பள்ளு நூல்கள் இலக்கணம்

பிரபந்த மரபியல், பிரபந்தத் தீபிகை, வச்சணந்தி மாலை, பன்னிரு பாட்டியல், சிதம்பரப்பாட்டியல், இலக்கண விளக்கப் பாட்டியல் போன்ற இலக்கண நூல்களில் பள்ளு பற்றியக் குறிப்புகள் ஏதும் இடம் பெறவில்லை. தொல்காப்பியத்தில், பொருளதிகாரம், செய்யுளியல் இடம் பெற்றிருக்கும், ‘சேரிமொழியாற் செவ்விதிற் கிளந்து' என்ற நூற்பாவில் ‘சேரிமொழி’ என்பது பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ளது.

பன்னிருப்பாட்டியலில் உழத்திப்பாட்டு என்ற வகைமைக்குரிய இலக்கணமாக,

”புரவலற் கூறி யவன்வா ழியவென்று

அகல்வயவ் தொழிலை யொருமை யுணர்ந்தனள்

எனவரும் ஈரைந்து உழத்திப் பாட்டே.”

- என்ற குறிப்பு காணப்படுகிறது. ஆனால், ‘உழத்திப் பாட்டு’ பள்ளு இலக்கியமாகாது என்பது மு. அருணாசலத்தின் கருத்து.

ஆனால், ‘நவநீதப்பாட்டியல்’ உழத்திப் பாட்டே, பள்ளு என்கிறது.

“செவ்விதிற் பாடு மதுஉழத்திப் பாட்டு பள்ளுமென்பர்

நவ்வி எனக்கண் மடவீர் பிறவிதம் நாட்டுவரே.”

- என்ற பாட்டியல் பாடலில் இதனை உறுதி செய்கிறது.

‘உழத்திப்பாட்டே பள்ளு’ என்றும், ‘பள்ளு வேறு; உழத்திப்பாட்டு வேறு’ என்றும் இருவேறு கருத்துகள் ஆய்வாளர்களிடையே உள்ளன. உழத்தி வகைப் பாட்டுக்களே வளர்ந்து பள்ளு இலக்கியங்களாக மாறின என்ற கருத்தும் உள்ளது.

பள்ளு இலக்கியங்கள் பற்றிய செய்திகள்

“நெல்லு வகையை எண்ணினாலும் பள்ளு வகையை எண்ண முடியாது” என்ற சொல்மொழிக்கேற்ப நூற்றிற்கும் மேற்பட்ட பள்ளு வகை நூல்கள் உள்ளன. நெல் வயல்களில் வேலை செய்வோர், ஏர் பூட்டுதல் முதல் அறுவடை வரை பல்வேறு வகையான பாடல்களைப் பாடினர். இப்பாடல்களைப் பிற்காலத்தார் ஒருங்கு சேர்த்து ‘உழத்திப்பாட்டு’ அல்லது ‘பள்ளிசை’ என்று அழைத்தனர். பள்ளுப் பாட்டிற்குப் ‘பள்ளேசல்’, ‘பள்ளு நாடகம்’, ‘பள்ளிசை' என்ற பெயர்களும் உண்டு.

சாமிநாதப் பள்ளு

முதல் பள்ளு நூல்

கமலை ஞானப்பிரகாசர் இயற்றிய ‘திருவாரூர்ப் பள்ளு’ காலத்தால் முற்பட்ட பள்ளு நூலாகக் கருதப்படுகிறது. இது ‘தியாகேசர் பள்ளு’ என்றும் அழைக்கப்படுகிறது. இதற்கு ‘ஆதிப்பள்ளு’, ‘ஞானப்பள்ளு’ என்ற பெயர்களும் உண்டு. தமிழில் தோன்றிய முதல் பள்ளு நூலாகச் சிலரால் ‘முக்கூடற்பள்ளு’ முன்வைக்கப்படுகிறது. ‘மன்னார் மோகனப்பள்ளு' தான் தமிழில் தோன்றிய முதல் பள்ளு நூல் என்ற கருத்தும் உள்ளது.

பள்ளு நூல்களின் பாவினம்

பள்ளு நூல்கள் வெண்பா, அகவல், விருத்தம், கலிப்பா, கலித்துறை, சிந்து போன்ற பாவினங்களால் இயற்றப்பட்டுள்ளன.

பள்ளு இலக்கியங்களின் அடிப்படை

பள்ளு இலக்கியங்கள் பொதுவான கதை ஒன்றை அடிப்படையாகக் கொண்டவை. பண்ணை ஒன்றில் வேலை செய்யும் இரு மனைவியரைக் கொண்ட பள்ளனின் வாழ்க்கையைச் சித்தரிப்பதாக அவை அமைந்துள்ளன. பண்ணையில் நிகழும் உழவுத்தொழில்; பள்ளன் விவசாயத்தையும் மாடுகளையும் கவனிக்கும் முறை; மாட்டு வகைகள்; விதை வகைகள்; மூத்த பள்ளிக்கும், இளைய பள்ளிக்கும் இடையே நிகழும் சண்டை, சச்சரவுகள்; இந்தச் சண்டையில் பண்ணையார் தலையீடு செய்தல்; இறுதியில் மூத்த பள்ளியும் இளைய பள்ளியும் சமரசமாகி பள்ளனோடு சேர்ந்து வாழ்தல் ஆகிய கதைக்கூறுகள் பொதுவாகப் பள்ளு இலக்கியங்களில் காணப்படுகின்றன. பிற்காலத்தில் தோன்றிய பள்ளு இலக்கியங்களில் இக்கதைக் கூறுகள் விரிக்கப்பெற்றும் சுருக்கப் பெற்றும் அமைந்திருக்கின்றன.

பள்ளு நூல்களில் அக்கால வேளாண் மக்களின் வாழ்க்கை, பண்பாடு, பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள் போன்ற செய்திகள் இடம் பெற்றுள்ளன.

பள்ளு இலக்கியங்களின் பட்டியல்