under review

வலம்புரி சோமனாதன்

From Tamil Wiki
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
வலம்புரி சோமனாதன்

வலம்புரி சோமனாதன் (வலம்புரி சோமநாதன்) (மே 15, 1928 - ஜூன் 21, 2010) எழுத்தாளர், இதழாளர், திரைப்படக் கதை-வசன ஆசிரியர், திரைப்பாடல் ஆசிரியர். தயாரிப்பாளர், இயக்குநர். தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றார்.

வாழ்க்கைக் குறிப்பு

வலம்புரி சோமனாதன், மே 15, 1928 அன்று, புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வலையப்பட்டியில், கே. இராமனாதன் செட்டியார் - பூரணி ஆச்சி இணையருக்குப் பிறந்தார். பள்ளி இறுதி வகுப்பு வரை படித்தார். ஆங்கில மொழியில் தேர்ச்சி பெற்றார். மணமானவர். இவருக்கு ஒரு மகன்; மூன்று மகள்கள்.

இதழியல்

வலம்புரி சோமனாதன், புதுக்கோட்டை ராயவரத்தில் இருந்து வெளியான திருமகள் இதழில் நிர்வாக உதவியாளராகவும், உதவி ஆசிரியராகவும் பணியாற்றினார். கண்ணதாசன் அங்கு சில மாதங்கள் பணியாற்றியபோது அவருக்கு உறுதுணையாக இருந்தார். 'சக்தி' இதழில், வை. கோவிந்தனின் ஊக்குவிப்பில் உதவி ஆசிரியர்களுள் ஒருவராகச் செயல்பட்டார்.

வலம்புரி சோமநாதன் நூல்கள்

இலக்கிய வாழ்க்கை

வலம்புரி சோமனாதன் திருமகள், சக்தி, சண்டமாருதம், முல்லை, பேசும் குரல் போன்ற இதழ்களில் கட்டுரைகளையும், பொது வாசிப்புக்குரிய சிறுகதைகளையும் எழுதினார். நூல்கள் சிலவற்றை வெளியிட்டார். சிறார்களுக்கான நூல்கள் சிலவற்றை எழுதினார்.

திரை வாழ்க்கை

வலம்புரி சோமனாதனின் எழுத்தால் ஈர்க்கப்பட்ட ஏ.வி. மெய்யப்ப செட்டியார், சோமனாதனைத் தனது கதை இலாகாக் குழுவில் ஒருவராக நியமித்தார். அதன் மூலம் பல்வேறு திரைப்பட நுணுக்கங்களைக் கற்றார் சோமனாதன். பல்வேறு பட விவாதங்களில் கலந்துகொண்டார். வசன ஒருங்கிணைப்புச் செய்தார்.

கதை - வசனம்

வலம்புரி சோமனாதன் 30 திரைப்படங்களுக்கு மேல் கதை-வசனம் எழுதினார். அவற்றுள் கீழ்க்காணும் படங்கள் குறிப்பிடத்தகுந்தவை.

  • மணமகள் தேவை
  • மங்கையர் திலகம்
  • கானல் நீர்
  • நாகதேவதை
  • பார் மகளே பார்
  • கருப்புப் பணம்
  • வானம்பாடி
  • பஞ்சவர்ணக் கிளி
  • லலிதா
  • துணைவி

வலம்புரி சோமனாதன், பல்வேறு திரைப்படங்களுக்கு உதவி கதை வசன ஆசிரியராகச் செயல்பட்டார். 12 கன்னடப் படங்களுக்கு கதை, திரைக்கதை எழுதினார். ஆங்கிலத்தில் வெளியான 'காந்தி' திரைப்படத்திற்குத் தமிழில் மொழிமாற்ற வசனங்களை எழுதினார். மம்முட்டி நடித்த 'டாக்டர் அம்பேத்கர்' படத்தின் தமிழாக்க வசனங்களை எழுதினார்.

திரைப்பாடல்

வலம்புரி சோமனாதன், ஏவி.எம். தயாரித்த பல படங்களின் பாடல்களை எழுதினார். நாகதேவதை உள்ளிட்ட சில படங்கள் அவற்றுள் குறிப்பிடத்தகுந்தவை.

தயாரிப்பு

வலம்புரி சோமனாதன் கீழ்க்காணும் படங்களைத் தயாரித்தார்.

  • திருமணம் (1958)
  • ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் (1978)
  • லலிதா
  • சிவப்புக்கல் மூக்குத்தி (1979)

'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்' 1985-ல் நடைபெற்ற மாஸ்கோ திரைப்பட விழாவில் இடம் பெற்றது.

இயக்கம்

வலம்புரி சோமனாதன் கீழ்க்காணும் படங்களை இயக்கினார்.

  • லலிதா (1976)
  • சவப்புக்கல் மூக்குத்தி (1979)
  • துணைவி
  • துணையிருப்பாள் மீனாட்சி

பொறுப்பு

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், அனைத்திந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், தமிழ்நாடு திரை அரங்குகள் சங்கம், அனைத்திந்தியத் திரைப்பட வர்த்தக சங்கம் ஆகியவற்றில் தலைவர், நிர்வாக உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை ஏற்றுப் பணியாற்றினார். தமிழ்நாடு திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் இயக்குநராகப் பணிபுரிந்தார். தமிழ்த் திரைப் படங்களில் சிறந்த படத்தைத் தேர்ந்தெடுக்கும் நீதிபதிகளின் குழுவில் இடம்பெற்றார்.

விருதுகள்/பரிசு

  • 'துணைவி' படத்திற்காகத் தமிழக அரசின் சிறந்த உரையாடல் ஆசிரியர் பரிசு மற்றும் ஒரு லட்சம் ரூபாய் நிதி (1982)
  • 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்' படத்திற்கு நடுவண் அரசுப் பரிசு
  • 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்' படத்திற்கு தமிழ்நாடு அரசுப் பரிசு
  • தமிழக அரசின் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் அளித்த கலைமாமணி பட்டம் (1983)
  • 'புத்த மகா காவியம்' நூலுக்குச் சிறந்த நூலுக்கான தமிழக அரசின் பரிசு (2006)
  • ரஷ்யத் திரைப்பட விழாவுக்கு ரஷ்ய அரசு சோமநாதனை இருமுறை அழைத்துச் சிறப்பித்தது.

மறைவு

வலம்புரி சோமனாதன், ஜூன் 21, 2010 அன்று, தனது 82-ம் வயதில் காலமானார்.

மதிப்பீடு

வலம்புரி சோமனாதன் எழுத்தாளராகவும், இதழாளராகவும் அறியப்பட்டவர். பல வெற்றிப் படங்களைத் தந்தவர். பீம்சிங்கின் பல படங்களின் வெற்றிக்குப் பங்களித்தவர். மொழிமாற்றுப் படங்களின் கதை-வசனத்தில் பங்களித்தார். கன்னடம் உள்ளிட்ட பிற மொழிப் படங்களிலும் பங்களிப்புச் செய்தார். தமிழ்த் திரையுலகில் கதை - வசன ஆசிரியர், பாடலாசிரியர், திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர் ஆகிய நிலைகளில் பங்களித்தவராக மதிப்பிடப்படுகிறார்.

நூல்கள்

  • நிதர்சனம்
  • தமிழ்ப்பட உலகின் தந்தை டைரக்டர் கே. சுப்ரமணியம்
  • கண்ணகி காவியம்
  • காதலர்களுக்கு
  • புத்த ஜாதகக் கதை
  • புத்த மகா காவியம்

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 24-Feb-2026, 12:20:48 IST