தொடாக் காஞ்சி
தொடாக் காஞ்சி காஞ்சித் திணையின் துறைகளில் ஒன்று. மறவனது புண்ணினைப் பேய்மகள் தொடுவதற்கு அஞ்சித் தொடாமல் நின்றதைப் பேசுவதனால் தொடாக் காஞ்சி என்னும் பெயர் பெற்றது.
விளக்கம்
புறப்பொருள் வெண்பாமாலை
புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் ஒரு மறவன். போர்முனையில் விழுப்புண்ணை ஏற்றான். அவனைக் காக்க, அவனது சுற்றத்தார் பேய்க்குப் பகையான ஐயவி (வெண் கடுகு) தூவல், மணப்பொருளைப் புகைத்தல் போன்றவற்றைச் செய்து கொண்டிருக்கின்றனர். அதனால், பேய்மகள் அவனைத் தொட நடுங்குகின்றாள் ; இடம் விட்டு இடம் பெயர்கின்றாள் எனப் பேயின் செயலைப் பேசுவது தொடாக் காஞ்சி என்னும் துறை என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
அடல்அஞ்சா நெடுந்தகைப்புண்
தொடல்அஞ்சித் துடித்துநீங்கின்று(4.19)
வெண்பா
ஐயவி சிந்தி நறைபுகைத்தாய் மலர்த்தூய்க்
கொய்யாக் குறிஞ்சி பல பாடி - மொய்யிணர்ப்
பூப்பெண் தெரியல் நெடுந்தகைப்புண் யாம்காப்பப்
பேய்ப் பெண் பெயரும் வரும் 79
மறவனுடைய புண்ணை அவனுடைய மனைவியும் அவர்தம் சுற்றமும் சேர்ந்து வெண்கடுகு சிந்தியும் குங்குலியம், அகில் முதலிய நறுமணப் பொருட்களைப் புகைத்தும் பல்வகை மலர்களைத் தூவியும் குறிஞ்சிப் பண்ணைப் பாடியும் பாதுகாப்பதால், பேய்மகள் அஞ்சி அவனைத் தொடாமல் நீங்குகின்றாள்.
உசாத்துணை
காஞ்சித் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 23-Feb-2025, 09:22:40 IST